நவாசுதீன் சித்திக் மற்றும் அனுராக் கஷ்யப் இணைந்து நடித்திருக்கும் படம் ஹட்டி ஜீ ஃபைவில் வெளியாகி இருக்கிறது. ஹட்டி படத்தின் விமர்சனத்தைப் இங்கு காணலாம்.


சினிமாவில் மாற்று பாலினத்தவர் – வளரும் விவாதங்கள்


பொதுவாகவே  மாற்றுபாலினத்தவர்களை (திருநங்கை) பற்றிய கதைகள் என்றால் அவை பெரும்பாலும் ஒரு விதமான இரக்கத்தை ஏற்படுத்து வகையில் அமைகின்றன. அப்படியான படங்களை எடுப்பவர்களின்  நல்ல நோக்கம் சரியானது தான் ஆனால் மாற்று பாலினத்தவர்களைப் பற்றிய புரிதல் இல்லாததே இந்த தவறு அடிக்கடி நிகழ்வதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.


அதே நேரத்தில் பொதுச் சமூகத்தில்  குற்றவாளிகளாகவும், ஒதுக்கப்பட வேண்டியவர்களாகவும் பார்க்கப்படுகிற மாற்று பாலினத்தவர்களை அரசியல் ரீதியாக சரியாக பிரதிபலிக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது.   திரைப்படங்களில் மாற்றுபாலினத்தவர்களின் சித்தரிப்பு குறித்த விவாதம் நாளுக்கு நாள் பெரிதாகவும் சிக்கலானதாகவும் மாறி வரும் நிலையில் வழக்கமான ஒரு பழி தீர்க்கும் த்ரில்லர் கதையை ஒரு திருநங்கையை கதாநாயகியாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் தான் ஹட்டி.


அனுராக் காஷ்யபிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அக்‌ஷத் அஜய் குமார் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். நவாசுதீன் சித்திக் ’ஹட்டி’ என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் (திருநங்கை), அனுராக் கஷ்யப் வில்லனாகவும் நடித்திருக்கிறார்.


ஹட்டி படத்தின் கதை


ட்ரெய்லரில் இடம்பெற்ற ஒரு வசனத்தில் இருந்து தொடங்குகிறது படம். ”எங்களை பார்த்து மக்கள் ஏன் பயப்படுகிறார்கள் தெரியுமா…எங்களுடைய ஆசீர்வாதம் ரொம்ப சக்திவாய்ந்தது. அதேமாதிரி எங்களுடைய சாபம் ரொம்ப மோசமானது. ஆனால் அதைவிட மோசமானது எங்களுடைய வஞ்சம்.”


முதலில் நாம் பார்ப்பது ஹட்டி என்கிற ஒரு ஆணை பற்றியது. சடலங்களை கடத்துவது தான் இவனது வேலை ( படத்தின் இரண்டாம் பகுதியில் இதற்கான விளக்கம் வருகிறது). போலீஸால் தனது வேலைக்கு கெடுபிடி அதிகம் ஏற்பட தனது கூட்டாளியுடன் திக்கு கிளம்புகிறான் ஹட்டி.  திருநங்கை வேஷம் போட்டு ஆண்களை ஏமாற்றி அவர்களிடம் பண்ம் பறிக்கும் ஒரு கும்பலுடன் சேர்கிறான். இந்த கும்பலை இயக்கி வருபவன் பிரமோத் அஹ்லவாத் (அனுராக் காஷ்யப்) என்கிற அரசியல்வாதி. ஹட்டி இந்த கும்பலுடன் சேர்வதன் நோக்கம் என்ன என்பதை படத்தின் இரண்டாம் பாதியில் தெரியவருகிறது.


திருநங்கையாக இருந்த காரணத்தினால் தனது ஊரில் இருந்து விரட்டப்படுகிறார் ஹரிகா (நவாசுதீன் சித்திக்). திருநங்கைகளை  படிக்க வைத்து அவர்களுக்கு மறுவாழ்வளிக்கிறார் ஒரு பெண் (இளா அருண்). இர்ஃபான் என்கிற சமூக ஆர்வலரும் ஹரிகாவும் காதலித்து திருமணம் செய்துகொள்கிறார்கள். ஆனால் இவர்களின் இந்த சந்தோஷம் ஒரு நாள் கூட நீடிப்பதில்லை. திருநங்கைகளுக்கான மறுவாழ்வளிக்கும் இடத்தை பல நாட்களாக கேட்டுவந்த பிரமோத் அஹ்லவாத் அதை கொடுக்க மறுத்த காரணத்தினால்  எல்லோரையும் கொலை செய்கிறான். இதனால் ஹரிகா ஹட்டியாக மாறி அவனை பழிவாங்க புறப்படுகிறார்.


நடிப்பு


திருநங்கையாக நடித்திருக்கும் நவாசுதீன் சித்திக் தன்னால் முடிந்த அளவிற்கு மிகை இல்லாமல் நடிக்க முயற்சித்திருக்கிறார். குறிப்பாக உடலசைவில் திருநங்கையாக கவர்கிறார். அதே நேரத்தில் வில்லனாக நடித்திருக்கும் அனுராக் கஷ்யப் சிரித்துக் கொண்டே இருக்கும் கொடூரமான வில்லனாக அனாயாசமாக நடித்திருக்கிறார். பிற கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஸ்ரீதர் தூபே, செளரப் சச்தேவாவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.


விமர்சனம்


ஒரு த்ரில்லர் படமாக கூறப்படும் ஹட்டி படத்தில் சொல்வதற்கு எந்த விதமான புதிய அம்சமும் இல்லை. அதே வழக்கமான ஒரு த்ரில்லர் கதைதான். இந்தப் படத்தை இன்னும் சிக்கலாக்கும் ஒரு விஷயம் என்றால் அது நவாசுதீன் சித்திக்கின்  இருப்புதான். ஒரு நடிகராக தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே நடித்திருக்கிறார். ஆனால் அவருடைய இடத்தில் ஒரு உண்மையான திருநங்கை நடித்திருந்தால் இந்த கதையின் உண்மைத் தன்மை இன்னும் அதிகரித்திருக்கும்.


ஹரிகா மற்றும் அவளது காதல் காட்சிகள் படத்தில் காட்சிகள் கைகூடி வந்த வெகு சில இடங்களில் ஒன்று. ஆனால் அந்த காட்சியில் நம்மை படத்தில் இருந்து விலக்குவதே நவாசுதீன் சித்திக் எனும் ஆணின் இருப்புதான். திருநங்கைகள் என்பவர்கள் பெண் வேடமிட்ட ஆண்கள் இல்லை. தங்களை மனதால் பெண்ணாக உணர்பவர்கள். அப்படியான ஒருவரின் காதலை பார்வையாளர்கள் பார்க்க நினைக்கும்போது அங்கு ஒரு ஆணின் இருப்பு நம்மை தொந்தரவு செய்கிறது.


படத்தின் இறுதி காட்சி எந்த அர்த்தமும் இல்லாமல் ஏதோ அவசரத்தில் ஒரு முடிவுக்கு வந்தது போல் இருக்கிறது. அதீத வன்முறைக் காட்சிகளை தாங்கும் மன வலிமை இருப்பவர்கள் மட்டுமே இந்தப் படத்தைப் பார்ப்பது நல்லது.   




மேலும் படிக்க:  AR Rahman Concert: ‘நானே பலியாடு ஆகிறேன்’ .. இசை நிகழ்ச்சி பிரச்சினை தொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை பதிவு..!