கடந்த 2013 ம் ஆண்டு வெளிவந்த அம்பிகாபதி வெற்றிக்கு பிறகு, ஆனந்த் எல்.ராய் - ஏ.ஆர்.ரஹ்மான் -தனுஷ் கூட்டணியில் வெளியாகியிருக்கும் திரைப்படம் அத்ரங்கி ரே. தமிழில் கலாட்டா கல்யாணம். மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஓடிடி தளமான டிஸ்னி ஹாட்ஸ்டாரில் கிறிஸ்மஸ் கொண்டமாக (நேற்று) டிசம்பர் 24 ம் தேதி இந்த திரைப்படம் வெளியாகியது. 


படத்தின் ஓபனிங் சீனில் கதாநாயகியை நான்கு முதல் 5 நபர்கள் நடு இரவில் கொட்டும் மழையில் துரத்தி வர, போச்சு டா வழக்கம்போல் கதாநாயகி வில்லன்களிடம் சிக்கிக்கொள்வார். அவரை காப்பாற்ற கதாநாயகன் களமிறங்குவார் என்று இந்திய சினிமா பாணியில் எதிர்பார்த்தோம். 


ஆனால், இதை எல்லாம் எதையும் கதை களத்தில் கொண்டு வராமல் கூலாக யாருக்கோ போன் செய்ய முயற்சித்து காட்சிக்குள் வருகிறார் விசு(தனுஷ்). தெரிந்த, பழகிய தமிழ் முக பாவனையில் தமிழ்நாட்டில் இருந்து டெல்லியில் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் தனுஷ், ஒரு மருத்துவ முகாமிற்காக பீகார் வருகிறார். 


அங்கு அடியாட்களுக்கு முன்னாடி துரத்தி வரப்படும் சாரா அலி கானை ரயில் நிலையத்தில் தனுஷ் பார்க்க, தன்னை தற்காத்துக்கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்யும் கதாநாயகியை கண்டு மிரண்டு நிற்கிறார். கதாநாயகியை எதற்கு துரத்துகிறார்கள்..? கதாநாயகி காதலிக்கும் நபர் யார்? ஊரைவிட்டு ஓட முயற்சிக்கும்போது காதலன் எங்கே என்ற கேள்வியும் அடுத்தடுத்து எழுகிறது. 


ஒரு கல்யாணம் செய்தால் கால் கட்டு போட்டு விடலாம் என்ற நோக்கத்தில் சாரா அலி கானின் பாட்டி ஒரு திட்டம் போடுகிறார். அதன் தொடர்ச்சியாக கதாநாயகிக்கு பீகாரில் மாப்பிள்ளை தேடாமல் கண் காணாத இடத்திற்கு தள்ளிவிட திட்டமிட்ட குடும்பம் தனுஷின் நண்பனான ஆஷிஷ் வர்மாவை கடத்த முயற்சித்து, தனுஷை கடத்தி விடுகிறார்கள். 



அதன்பிறகு, தனுஷுக்கும், சாரா அலி கானிற்கு கட்டாய திருமணம் என்று அடுத்தடுத்து காட்சிகள் விறுவிறுப்பாக நகர்கிறது. தனுஷுக்கும், மாண்டி என்ற பெண்ணுடன் நிச்சயதார்க்கம் நடைபெற இருந்தநிலையில், வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தனுஷ் மற்றும் சாரா அலி கான் டெல்லி சென்று தனித்தனியாக செல்ல திட்டமிட்டு, சாரா அலி கானை தான் தங்கியிருக்கும் மென்ஸ் ஹாஸ்டலில் தங்க வைக்கிறார். 100 க்கு மேற்பட்ட இளைஞர் தங்கி இருக்கும் ஹாஸ்டலில் எப்படி ஒரு பெண் தங்க வைக்கப்படுகிறாள் என்ற கேள்வியும் எழுகிறது. 


ரயில் பயணத்தின்போது, இருவரும் தங்கள் காதல் கதைகளை பரிமாறிக்கொள்ள, அக்ஷய் குமார் கதைக்குள் அடி எடுத்து வைக்கிறார். தனுஷின் நிச்சயதார்த்தத்தில் இவர்களின் திருமண கதை தெரிந்துவிடுகிறது. இதனால் ஆத்திரமான பெண்ணின் அப்பா, சாரா அலி கானை அசிங்கப்படுத்த, பொறுத்துக்கொள்ள முடியாத தனுஷ் இவள் தான் என் மனைவி, இவளை அசிங்கப்படுத்த உங்களுக்கு யாருக்கும் உரிமை இல்லை என்று கதாநாயகியை அழைத்து கொண்டு டெல்லிக்கு நகர்கிறார். 



இதற்கிடையில், தனுஷிற்கு சாரா அலி கானின் மீது காதல் பொங்கி வர,அந்த சமயத்தில் அக்ஷய் குமார் சிவ பூஜையில் கரடியாக நுழைகிறார். இதுவரை நன்றாக சென்று கொண்டிருந்த கதை மெல்ல திக்கி திணற தொடங்கியது. 


இயக்குநர் ஆனந்த் எல்.ராய் கதைக்கு நிறைய ட்விஸ்ட் கொண்டு வர முயற்சித்து ஒரு சில இடங்களில் வெற்றி பெற்றும், ஒரு சில இடங்களில் தோற்றும் போகிறார். சாரா அலி கானின் மனநோய், கதைக்கு மிக பெரிய பிளஸாகவும், அந்த நோயை சரிசெய்ய முயற்சிக்கும் தனுஷின் முயற்சிகள் நம்மை நிச்சயம் பைத்தியக்காரன்களாக மாற்றிவிடுகிறது. அந்த அளவிற்கு முட்டாள் தனமாக தாஜ் மஹாலை மறையவைப்பது போன்ற விசித்திர சம்பவங்கள் படத்தில் இடம் பெறுகின்றனர். 


முக்கோண காதல் அடிப்படையில் படம் நகரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாருமே இல்லாத காதலுக்கு கடைசி வரை கதாநாயகி டீ ஆத்தி கொண்டிருக்கிறார். அவருக்கு துணையாக தனுஷ் மட்டும் அல்ல, மொத்த ஹாஸ்டலில் வசிக்கும் ஆண் இனமே போராடுகிறது. கடைசியில் அக்ஷய் குமார் யார்..? சாரா அலி கான் யாருடன் இணைகிறார்..? தனுஷின் காதல் என்ன ஆனது..? என்பது தான் கதை. 



பலவீனம் : 


* அக்ஷய் குமார்,  சாரா அலி கான் காதல் கதை ஒரு கட்டத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக தோன்றுகிறது. 


* கதாநாயகிக்காக தனுஷின் நண்பர்கள் எடுத்த முயற்சிகள் போர். 


* இரண்டாம் பாதி கதை நகர்வு.


* அக்ஷய் குமார் கதாபாத்திரம் போதுமான முக்கியத்துவம் பெறவில்லை.


பலம் : 


* ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை.


*  ‘சக்கா சக்’  பாடல் குத்தாட்டம் போட வைக்கிறது. 


* தனுஷின் காலேஜ் லுக் மற்றும் நடிப்பு 


* சாரா அலி கானின் நடிப்பு மற்றும் சுட்டித்தனம் 


* முதல் பாதி விறுவிறுப்பு 


* இறுதியில் ‘எ ஃப்லிம் பை ஏ.ஆர்.ரஹ்மான்’ என்ற ஒற்றை வாக்கியம் நம்மை புல்லரிக்க செய்கிறது.