ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்திற்கு போட்டியாக ஆர்யா – விஷால் நடிப்பில் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘எனிமி’


அருகருகே இருக்கும் வீடுகளில் சிறுவர்களான விஷாலின் தந்தை தம்பி ராமையா ஊட்டியில் மளிகை கடை வைத்திருக்கிறார். வாழ்க்கையில் எதற்கும் ரிஸ்க் எடுத்து அடிபட்டுவிட்ட கூடாது என்ற கொள்கையில் வாழும் அவர், தன் மகனான விஷாலை வங்கி அதிகாரியாக உருவாக்க நினைக்கிறார்.


இதற்கிடையில் விஷால் வீட்டருகே ஆரியாவின் தந்தையாக ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியான பிரகாஷ்ராஜ் குடி பெயர்கிறார். அவர் தன்னுடைய மகனை திறமையான போலீஸ் அதிகாரியாக ஆக்க நினைத்து பயிற்சிகள் கொடுக்கிறார். இதை பார்த்த சிறுவனான விஷாலுக்கும் இது பிடித்துப் போக, அவரும் பிரகாஷ்ராஜிடம் பயிற்சிகள் எடுக்க ஆரம்பிக்கிறார். ஆரியாவுக்கும் விஷாலுக்கும் இடையேயான நட்பு நாளடைவில் ஈகோ உருவாகி இருவரையும் முட்டிக்கொள்ள வைக்கிறது.


திடீரென பிரகாஷ்ராஜ் கொல்லப்பட விஷாலும் – ஆர்யாவும் இருவேறு திசைகளில் பயணிக்கிறார்கள்.  உலகில் மிகப்பெரிய ஆட்களை கொல்லும் வில்லனாக(?) மாறிய ஆரியா, சிங்கப்பூருக்கு வரும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை கொல்ல திட்டம் தீட்டுகிறார். அந்த திட்டத்தை சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கும் விஷால் முறியடிக்கிறார்.


இதையடுத்து கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு பின் சந்தித்துக்கொள்ளும் இருவருக்குள்ளும் மீண்டும் யார் வெற்று பெறுவது என்ற போட்டித் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் ஆர்யா ஜெயித்தாரா அல்லது விஷால் வெற்றி பெற்றாரா என்பதுதான் மீதிக்கதை.


தொடக்கத்தில் பிரகாஷ்ராஜ் உயிருடன் இருக்கும்போது உயிர்ப்பாக இருக்கும் படம், அவர் இறந்த பிறகு கண்டமேனிக்கு தறிக்கெட்டு ஓடுகிறது. படம் என்று ஒன்று எடுத்தால் அதில் பாட்டு என்று ஒன்று வைக்க வேண்டும் என்பதற்காக படத்தில் திடீரென்று பாடல்கள் முளைப்பதெல்லாம் அபத்தத்திலும் அபத்தம். அதிலும் தமனின் டச் மிஸ்ஸிங். படத்தில் இரண்டு ஹீரோயின்கள்.. மம்தாவின் கதாபாத்திரத்தில் இருந்த ஓரளவிற்கான கணம்.. மிர்ணாளி ரவியின் கதாபாத்திரத்தில் இல்லாமால் போனது ஏனோ தெரியவில்லை.


அரிமா நம்பி, இருமுகன் உள்ளிட்ட படங்களில் தனது விறுவிறுப்பான திரைக்கதை மூலம் கவனம் ஈர்த்த ஆனந்த் ஷங்கரின் திரைக்கதை எனிமியில் மிஸ்ஸாகி போனதுதான் படத்திற்கு மிகப் பெரிய மைனஸ். மிகவும் எளிதாக ஊகிக்க கூடிய திரைக்கதை கொஞ்ச நேரத்தில் நமக்கு கொட்டாவியை வரவழைத்து விடுகிறது. பிண்ணனி இசையில் சாம் ஓரளவு நியாயம் செய்திருக்கிறார்.


படத்திற்கு பெரிய பலம் ஆ.டி.ராஜ சேகரின் ஒளிப்பதிவும் சண்டைக் காட்சிகளும்தான். சேஸிங் காட்சிகளிலும், ஆக்சன் காட்சிகளிலும் அவர் கேமாராவை சுழற்றியிருக்கும் விதம் அபாராம். காமெடி கதாபாத்திரத்தில் வரும் கருணாகரன் படத்திற்கு தேவையே இல்லை என்ற எண்ணமே நமக்கு தோன்றுகிறது. ஆர்யா விஷால் நடிப்பை பொறுத்தவரை, விஷால் ஸ்கோர் செய்த அளவிற்கு ஆர்யா ஸ்கோர் செய்ய வில்லை..


இறுதியாக வரும் ஆர்யா விஷால் மோதிக்கொள்ளும் காட்சி மிரட்டினாலும், அது மட்டுமே படத்திற்கு போதுமானதாக இல்லை. ஆக்ஷனில் இருந்த மெனக்கெடல் திரைகதையிலும் இருந்திருந்தால் எனிமியை ரசித்திருக்கலாம்.


‘எந்த விஷயத்திலும் ரிஸ்க் எடுத்து காயப்பட்டுவிடக்கூடாது என்ற கொள்கையுடன் படத்தில் நடித்திருப்பார் தம்பி ராமையா’ ஆனால், படம் பார்க்க வரும் அத்தனைபேரும் அந்த ரிஸ்கை எடுக்க வேண்டிவரும் என்பதுதான் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் தீபாவளி நாளில் ரசிகர்களுக்கு கொடுத்த பரிசு.