Dune 2 Movie Review: பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள, டியூன் 2 திரைப்படம் எப்படி இருக்கு என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.


டியூன் ஒரு நினைவூட்டல்:


டியூன் என்ற புனைவுக் கதை புத்தகத்தின் அடிப்படையில், பிரமாண்ட பொருட்செலவில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் டியூன். 8000 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுவதாக இந்த கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. அதில், தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அட்ரெய்டீஸ் என்ற பிரிவின்  சிற்றரசரின் அபார வளர்ச்சியை கண்டு அச்சம் கொண்ட பேரரசர், அராகிஸ் என்ற மற்றொரு பிரிவின் சிற்றரசரின் உதவியை நாடுகிறார். தொடர்ந்து சூழ்ச்சியின் மூலம், அட்ரெய்டீஸ் பிரிவின் மன்னர் கொல்லப்படுகிறார். தப்பி பிழைக்கும் அந்த மன்னனின் மனைவி ஜெஸ்ஸிகா மற்றும் மகன் பால் அட்ரெய்டீஸ், பாலைவன மக்களிடம் தஞ்சமடைகின்றனர். அத்துடன் முதல் பாகம் முடிந்தது. 


டியூன் 2 திரைப்படத்தின் கதை:


டியூன் படத்தின் முதல் பாகம் எங்கு முடிந்ததோ, அதே காட்சியில் இருந்து இரண்டாம் பாகம் தொடர்கிறது. தந்தைக்கு நேர்ந்த துரோகத்திற்காக பழிவாங்க துடிக்கும் பால், பாலைவன மக்களிடம் சேர்ந்து அவர்களில் ஒருவராக மாறி தன்னை பல வகைகளிலும் மெருகேற்றுகிறார். அதோடு, நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறியும் சக்தியையும் பெறுகிறார். அதன்படி, தனது பழிவாங்கும் எண்ணம் பெரும் போருக்கும், பேரழிவிற்கும் காரணமாகிவிடும் என்பதை உணர்ந்து, தனது கோபத்தை அடக்கி வைக்கிறார். அதேநேரம், மறுபுறம் அராகிஸ் மன்னர் பேரரசையே வீழ்த்தி அவரது சிம்மாசனத்தை கைப்பற்றுவதற்கான சூழ்ச்சிகளை மேற்கொள்கிறார். இதனால் ஏற்படும் அடுத்தடுத்த சம்பவங்கள், போரே வேண்டாமென இருந்த நாயகன் பாலுக்கு, போரில் களமிறங்க வேண்டிய சூழலை உருவாக்குகின்றன. இதில் அவர் வென்றாரா, அதன் மூலம் ஏற்கனவே கணித்தபடி பேரழிவு ஏற்படுகிறதா, தந்தையை கொன்றவரை பழிவாங்கினாரா என்பதே மீதிக்கதை.


படத்தின் பிளஸ்:


படத்தின் மிகப்பெரிய பிளஸ் என்பது அதன் கிராபிக்ஸ் காட்சிகள். எது உண்மை எது கிராபிக்ஸ் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. கதாபாத்திரங்கள் தேர்வு கணகச்சிதமாக பொருந்தியுள்ளன. இளவரசர் பால் கதாபாத்திரம் (டிமோதி சாலமேட்) , நாயகி சானி (ஜெண்டாயா) மற்றும் ஜெஸ்ஸிகா (ரெபேக்கா ஃபெர்கூசன்) ஆகிய கதாபாத்திரங்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.  நேர்த்தியான திரைக்கதை, பல கதாபாத்திரங்கள் இருந்தாலும், நன்கு பரிச்சியமான முக்கிய கதாபாத்திரங்களை மட்டுமே கொண்டு திரைக்கதையில் தேவையான முக்கிய நகர்வுகளை முன்னெடுத்தது பார்வையாளர்களுக்கு எளிமையான புரிதலை வழங்குகிறது. பின்னணி இசையை திரையரங்குளில் கேட்கும்போது கூஸ்பம்புகளை தவிர்க்க முடியவிலை. திரையரங்கிற்கு வெளியே வந்த பிறகும் காதுகளில் ஒலிக்கும்.  ஒளிப்பதிவு, எடிட்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்கள் எல்லாம், முதல் பாதிக்கும் சற்றும் சளைக்காமல் இதிலும் சிறப்பாக அமைந்துள்ளது. கண்டிப்பாக கடந்த படத்திற்கு 6 ஆஸ்கர் விருதுகளை வென்றது போன்று, இந்த பாகமும் சில ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். மொத்தத்தில் தொழில்நுட்ப ரீதியாக இந்த படம் மிகவும் வலிமையானதாகவும், பொழுதுபோக்கு அம்சம் நிறைந்ததாகவும் வெளியாகியுள்ளது.



படத்தின் நெகட்டிவ்:


இந்த படத்தின் மிகப்பெரிய மைனஸ் அதன் ரன் - டைம் தான். 2 மணி நேரம் 46 நிமிடங்கள் ஓடும் இந்த படத்தின் பெரும்பாலான முக்கிய விவரங்கள், வசனங்கள் மூலம் மட்டுமே கடத்தப்படுகிறது. இதனால், இடம்பெற்றுள்ள அனைத்து காட்சிகளும் அவசியம் என்றாலுமே, காலையில் வந்தவன் இரவாகி இருக்குமே இன்னும் படம் முடியவில்லையா என்ற உணர்வு திரையரங்கிலேயே உங்களுக்கு ஏற்படலாம். ஆக்‌ஷன் காட்சிகள் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. பிரமாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட கிளைமேக்ஸ் போரும், அவ்வளவுதானா என சொல்லும் அளவில் சட்டென முடிந்து விடுகிறது. பல பிரபலமான நடிகர்கள் படத்தில் இருந்தாலும், பெரும்பாலானோருக்கு கதையில் எந்த முக்கியத்துவம் வழங்கப்படாமல் வீணடிக்கப்பட்டுள்ளனர்.


மேற்குறிப்பிட்ட சில குறைகள் இருந்தாலுமே இந்த திரைப்படம் பெரும்பாலான ரசிகர்களை கவர்வதற்கான, அனைத்து கமர்சியல் அம்சங்களையுமே தன்னகத்தே கொண்டுள்ளது. இதனால், இந்த படம் நிச்சயம் ரசிகர்களின் மனதை கவர வாய்ப்புள்ளது. அதோடு, இறுதிக்காட்சி மூலம், படத்தின் இறுதி பாகமாக டியூன் 3 வெளியாகும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.