Doctor Movie Review: கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம்தான் டாக்டர். முதல் படத்தில் போதைக்கடத்தலை கையில் எடுத்த நெல்சன், இந்தப்படத்தில் குழந்தைக் கடத்தலை முன் வைத்துள்ளார். குழந்தைக் கடத்தல் கும்பலும், அந்தக் கும்பலை ட்ராக் செய்து துவம்சம் செய்யும் ஒரு டாக்டரும் தான் 'டாக்டர்' திரைப்படம்.
முழுக்க முழுக்க காமெடி நாயகனாகவே பார்த்து பழகிய சிவகார்த்திகேயன், இதில் இன்டலிஜன்ட் அம்பியாக வருவது சிவகார்த்திகேயன் எடுத்திருக்கும் மிக தைரியமான முடிவு. வருண் மற்றும் கதாநாயகியின் குடும்பம் என நகரும் கதைக்குள் ரெடின் கிங்ஸ்லியும்,யோகி பாபுவும் நுழைந்ததும் படம் பிளாக் காமெடி ஜானருக்குள் நுழைகிறது. ரெடினின் வித்தியாசமான பாடி லாங்குவேஜிற்கும், அவர் பேசும் டைலாக்கிற்கும் தியேட்டரில் அப்லாஸ் அள்ளுகிறது. இது யோகிபாபுவிற்கு நிச்சயம் ஒரு கம்பேக் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. பாடல்களுக்கும், ரொமான்சுக்குமே என வழக்கமான ஹீரோயின் ரோல் இல்லாமல், படம் முழுக்க வரும் வாய்ப்பை சரியாகவே பயன்படுத்தி இருக்கிறார் பிரியங்கா.
சிவகார்த்திகேயன், யோகிபாபு என படத்தை தங்களது தோள்களில் ஒத்தை ஆட்களாக தூக்கி செல்லும் நடிகர்கள் படத்தில் இருந்தாலும் உண்மையில் டாக்டர் படத்தின் ஹூரோ இயக்குநர் நெல்சன் தான். பார்த்து பழகி போன மெடிக்கல் க்ரைம் த்ரில்லர்தான் என்றாலும், காட்சிக்கு காட்சி வித்தியாசம் காட்டவேண்டும் என்ற அவரின் மெனக்கெடல் அபாரம். அதற்கு சான்றுதான் அந்த மெட்ரோ சீன் பைட். கடத்தல் கும்பலை சிவகார்த்திகேயன் துப்புதுலக்கும் காட்சிகளிலும் ப்ளாக் காமெடி கலந்த விறுவிறுப்பு நல்ல ட்ரீட். காட்சிகள் மட்டுமல்லாது கதாபாத்திர வடிவமைப்பிலும் தனிக்கவனம் செலுத்தியிருக்கிறார். படத்தின் முதல் பாதி கொடுத்த காமெடி கலந்த விறுவிறுப்பு, இராண்டாம் பாதியில் சற்று இறங்குவது சோர்வை தருகிறது.
வில்லனாக வரும் வினய் இன்னும் கொஞ்சம் நன்றாக நடித்திருக்கலாம். ஆனால் ஒவ்வொருமுறையும் கதாநாயகனோ அல்லது அவர் தரப்பினரோ வில்லன் கையில் சிக்கும் போது, அவரிடம் இருக்கும் ஈகோ ஒவ்வொரு முறையும் அவர்களை தப்ப வைத்து விடுகிறது. முந்தைய சிவகார்த்திகேயன் படங்களுக்கு அனிருத் கொடுத்த உழைப்பில் சொற்பமான உழைப்பையே டாக்டரில் கொடுத்திருக்கிறார். காட்சிகளுக்கு காட்சி வித்தியாசமான பிஜிஎம் களில் மிரட்டும் அனிருத் மிஸ்ஸிங். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு டாக்டராக வருண் வெளிப்படுத்தும் நேர்மையும், உண்மையும் நிச்சயம் பாராட்டத்தக்கது.
விஜய் கார்த்திக் கண்ணனி ஒளிப்பதிவு காட்சிகளுக்கு காட்சி உயிர் கொடுக்கிறது. வழக்கமான காதல் காட்சிகள், நாயகன் - நாயகியின் வெறுப்பும், அதன்பின்னான ஈர்ப்பும் என வழக்கமான காட்சிகளே.
ஒட்டு மொத்தமாக சில குறைகளை மட்டும் தவிர்த்து விட்டு பார்த்தால் டாக்டர் வீக்கெண்ட்டுக்கு நல்ல கமர்ஷியல் படம்தான்