Die No Sirs Movie Review in Tamil: எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில் உதய் கார்த்திக், ரிஷி, மாறா, சாய் ப்ரியா தேவா, மனேக்ஷா உள்ளிட்ட பல புதுமுகங்கள் நடித்திருக்கும் திரைப்படம் தன் டைனோசர்ஸ் (Die No Sirs)


ஸ்ரீநிவாஸ் சம்பந்தம் தயாரித்துள்ள இப்படத்தை ரோமியோ பிச்சர்ஸ் வெளியிடுகிறது. போபோ சசி இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், ஜோன்ஸ் வி ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். வெளியீட்டுக்கு முன்பே கோலிவுட் வட்டாரத்தினரின் பாராட்டுகளை அள்ளி கவனம் ஈர்த்த நிலையில், இப்படம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா?


கதைக்கரு




'வட சென்னை' மணம் கமழ ‘கத்தி பிடிக்காதீங்க’ என சொல்லும் மற்றுமொரு கேங்ஸ்டர் பாணி கதை. சென்னை தமிழும் லந்துமாக அலையும் ஏரியா இளைஞர்கள் லோக்கல் ரவுடியான ‘சாலையார்’ கேங்குக்காக வேலை செய்யும் சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.  இவர்களில் வயதுக்குரிய சேட்டைகள், அட்டாகசங்கள் செய்வதுடன் நிறுத்திக் கொண்டு சம்பவக் காரர்களிடம் இருந்து கவனமாக தப்பி  வாழ்ந்து வருகிறார் ‘டைனோசர்ஸ்’ -  ‘Die No Sirs’ எனும் வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த நாயகன் மண்ணு என்கிற ‘ஆற்றல் மண்’ (உதய் கார்த்திக்).


வரன் கேட்டு செல்லும் மணப்பெண் தன் நண்பனை பார்ப்பதை அறிந்து அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது தொடங்கி,  ‘புது மாப்பிள்ளை’ நண்பனுக்காக ஜெயிலுக்கு போவது வரை நட்புக்கு இலக்கணமாய் வாழும் மண்ணுவின் அண்ணன் தனா (ரிஷி).


சாலையார் கேங் என்றோ செய்த கொலைக்காக போலியாக ‘ஏரியா பசங்க’ சரண்டராகும் சூழல் ஏற்பட,  நட்புக்கு எடுத்துக்காட்டாய் வாழும் மண்ணுவின் அண்ணன் தனா, புதிதாக திருமணமான தன் நண்பன்  துரைக்கு பதிலாக ஜெயிலுக்கு போக நேர்கிறது.


இந்நிலையில் போலீஸிடமே லந்து பேசி சுத்தமான கைகளுடன் ஏரியாவில் வலம் வரும் மண்ணுவையும், புதிதாக திருமணமான துரையையும் கேங்  வாருக்குள் கொண்டு வர சாலையார் கோஷ்டி நினைக்கிறது. இதனை அடுத்து நடப்பது என்ன? ஜாலி இளைஞனாக ஏரியாவுக்குள் வலம் வரும் நாயகன் மண்ணு சந்திக்கும் பின் விளைவுகள் என்ன என்பதை விறுவிறு பாணியில், தெறிக்கும் வசனங்களுடன் கமர்ஷியல் படமாக தந்திருக்கிறார்கள்!


கேங் வாரும் வட சென்னையும்




தமிழ் சினிமாவில் வட சென்னை பேக் ட்ராப்பில் வாள் பிடித்த கேங்ஸ்டர் கதைகளை பல படங்கள் பேசியிருக்கின்றன. ஆனால் இது நிச்சயம் ஒரு புது அனுபவம். வட சென்னை, மெட்ராஸ் போன்ற படங்களுக்குப் பிறகு,  அத்தனை புதுமுகங்களுடன், சென்னை தமிழும் லந்தும் வசனத்துக்கு வசனம் தெறிக்க, நிச்சயம் தவற விடக்கூடாத ராவான அனுபவம்!


“என் கையிலேயே பொருள கொடுக்கப் பாக்கறீங்களா” என எந்த கேங்கிலும் சிக்காமல் அட்ராசிட்டி செய்தபடி, உஷாராக வலம் வரும் நாயகன் மண்ணுவாக நடித்திருக்கும் உதய் கார்த்திக். தொடக்கத்தில் ‘இவர் ஓகேவா’ என கொஞ்சம் சந்தேகம் வரவழைத்தாலும்,  சென்னைபூர்வக் குடி நபராகவே மாறி தன் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்து கதையையும் தாங்கி இருக்கிறார்.


புதுமுக நடிகர்கள்


ஆரம்ப கால விஜய் சேதுபதியை பிரதிபலிக்கும் புதுமாப்பிள்ளை துரையாக மாறா. விஜய் சேதுபதியை போலவே பயணம் சிறக்க வாழ்த்துகள். மண்ணுவின் அண்ணன் தனாவாக நடித்திருக்கும் ரிஷி, சாலையாறாக நடித்திருக்கும் மணேக்‌ஷா ஆகியோர் தங்கள் பாத்திரங்களில் சரியாகப் பொருந்தியிருக்கிறார்கள்


தமிழ் சினிமாவின் வழக்கமான பொம்மை நாயகி வேடத்தில் சாய் ப்ரியா. ரசிகர்களை ஈர்ப்பதற்காக ஸ்கோப் இல்லை. மண்ணுவின் அம்மாவாக வரும் ஜானகி கதைக்கு தேவையான நடிப்பை வழங்கி இருக்கிறார்.


என்ன புதுசு?


முதல் கொஞ்ச நிமிடங்களுக்குப் பிறகு சூடு பறக்க தட்டி எழும்பும் முதல் பாதி. கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு நிகழும் அந்த மர்டர் ஸ்கெட்ச் காட்சி பரபரப்பின் உச்சம்! கோலிவுட்டின் தரமான இண்டர்வெல் ப்ளாக் காட்சிகளில் இது நிச்சயம் இடம்பெறும்.




கேங் வார் வெடிக்கும் முதல் பாதியைத் தொடர்ந்து அதற்கு நேர் எதிராக கியர் மாற்றி பயணிக்கும் திரைக்கதை நம்மை திணறடிக்கிறது.  துக்க வீட்டில் நாயகன் செய்யும் அலப்பறைகள் நம்மை சிரிக்க வைத்து வித்தியாசமான அனுபவத்தைத் தந்தாலும், கதையின் ஓட்டத்தை பாதிக்கிறது. முதல் பாதி எதிர்பார்ப்புக்கு மாறான திரை அனுபவத்தை தருகிறது.


ஆனாலும், “ஏரோப்ளேன் நிழல் தான் நம்ம ஏரியா மேல விழுது, ஏரோப்ளேன்ல பறக்கணும்” எனும் வசனம் பேசும் பொறுப்பான நாயகனை உலவவிட்டு கருத்தியல் ரீதியாக கவனமீர்க்கிறார் இயக்குநர்.


அப்ளாஸ் அள்ளும் வசனங்கள்!


படத்துக்கு மிகப்பெரும் பக்க பலமாய் அமைந்து தூணாய் தாங்குவது படத்தின் வசனங்கள்! ‘ஒவ்வொரு ரவுடிக்கும் அவன் உயிர் ஆஸ்கார் அவார்டு’ , ‘ஒரு சிகரெட் அரை கிலோ அரிசி விலை’, ‘மதுரைல எங்க சுனாமி வந்துச்சு, ஸ்விம்மிங்க போட்டீங்க’ என தன் துடுக்கான வசனங்கள் மற்றும் வரிசைகட்டி வரும் பன்ச் டயலாக்குகளால் பார்வையாளர்களை ஒன்ற வைக்கிறார்கள்.


போபோ சசி இசையில் டாலி டாலி, மெரினா பாடல் என பாடல்கள் ஈர்க்கின்றன. பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்க்கிறது. குடிசைப் பகுதிகள், கிணற்றுக்குள் இருக்கும் ஹீத் லெட்ஜர் படம்,  ‘காக்கா நகர்’ ஏரியா என ஜோன்ஸ் வி ஆனந்தின் கேமரா ரகளையாக காட்சிப்படுத்தியிருக்கிறது.


வட சென்னையில் குடி, புகை, கஞ்சா, ரவுடியிசம் மேலோங்கி இருக்கும் ஸ்டீரியோடைப் காட்சிப்படுத்தல் இருந்தாலும், கெட்ட வார்த்தைகள் இல்லாமல் படத்தை எடுத்துக் சென்று ஸ்டீரியோடைப்பை உடைத்திருப்பது பாராட்டுக்குரியது.


மொத்தத்தில் வட சென்னை பேக்ட்ராப்பில் அமைந்த தவிர்க்க முடியாத படங்களில் டைனோசர்ஸ் இடம் பிடித்துள்ளது. நல்வரவு!