ஹாலிவுட்டில் ஹாரர் படங்களுக்கு பஞ்சமில்லை. தடுக்கி விழுந்தால் அங்கு தான் விழ வேண்டும் என்கிற அளவிற்கு ஹாரர் படங்கள் வந்து கொண்டே இருக்கிறது. அப்படி ஒன்று, ஆனால், அது மாதிரி இல்லாத ஒரு படம் தான் ‛டே ஷிப்ட்’. அலுவலகத்தில் பணியாற்றும் ஒவ்வொருவரும் உச்சரிக்கும் வார்த்தை தான். இங்கு எதுமாதிரி ஷிப்ட் நடக்கிறது?


அமெரிக்காவில் பேய்களின் பற்களை சேகரிக்கும் க்ளப் ஒன்று உள்ளது. அதில் உறுப்பினராக இருந்து நீக்கப்பட்ட ஒருவர், பேய்களின் பற்களை பறித்து, அதை தனியாரிடம் விற்று சம்பாதித்து வருகிறார். கிளப்பில் கிடைப்பதைப் போல தனியாரிடம் அவற்றிக்கு விலை கிடைப்பதில்லை. அதே நேரத்தில் கிடைக்கும் பற்களை கிளப்பில் விற்றால், கூடுதலாக பணம் கிடைக்கும் என்பதால், மீண்டும் கிளப்பில் சேர முயற்சிக்கிறார். அதற்கு அவரது நண்பர் ஒருவர் உதவி செய்ய, க்ளப் மீண்டும் அவரை ஏற்றுக் கொள்கிறது.






கிளப் பணியாளர் ஒருவரை அவருடன் அனுப்பி, அடுத்தடுத்து நடக்கும் பற்கள் சேகரிப்பை கண்காணிக்கவும், க்ளப் விதிகளை மீண்டும் அந்த நபர் மீறுகிறாரா என்று கண்காணிக்கவும் அனுப்புகிறார். வெளிச்சம் பட்டால் அழிந்து விடும் தன்மை கொண்ட அந்த பேய்கள், வீடுகளில் முடங்கி வாழ்கின்றன. அவற்றை அடையாளம் கண்டு, ஒவ்வொன்றாக அழித்து, சில நேரங்களில் கொத்து கொத்தாக அழித்து, அவற்றின் பற்களை சேகரித்து வருகிறார்கள்.


அந்த பேய்கள் கூட்டத்தின் தலைவி, இதை கண்டுபிடித்து, அதற்கு காரணமான அந்த நபரை பழிவாங்க புறப்படுகிறாள். அதற்காக அந்த இளைஞரின் மனைவியும், குழந்தையும் பணைய கைதிகளாக்கப்படுகின்றனர். தன் குடும்பத்தை அந்த நபர் காப்பாற்றினாரா? பேய்கள் அழிக்கப்பட்டனவா? என்பது தான் ‛டே ஷிப்ட்’.


பேய்களை தேடி தேடி வேட்டையாடும் ஹீரோவாக ஃபெமி ஃபாக்ஸ். வாட்டசாட்டமாக பேய்களோடு நன்கு சண்டை போடுகிறார். அவற்றை பேய்கள் என்பதா, ரத்தக் காட்டேரி என்பதா, இல்லை என்ன என்பது என்கிற குழப்பம் கடைசி வரை இருக்கும். அந்த அளவிற்கு புது மாதிரியாக பேயை காட்டியுள்ளனர். 


இன்னும் சொல்லப்போனால், முகம் மாறும் வரை பேய்களை ரசிக்க முடிகிறது. ஏதோ வவ்வால், முயல் வேட்டைக்கு  போவது போல கூலாக பேய்கள் வேட்டைக்கு செல்வதும், அவற்றை அழித்துவிட்டு அதன் பற்களை ஒவ்வொன்றாக பிடுங்கி எடுப்பதும் காமெடி கலந்த திகில். வெறுமனே திகில் படமாக இல்லாமல், காமெடி திகில் படமாகவே அதை எடுக்க திட்டமிட்டு, அதில் வெற்றியும் பெறுகிறார்கள். 






ஹாலிவுட் படம் என்றாலும் அதற்கு ஏற்ப சண்டை காட்சிகளும், த்ரில்லரும் கொஞ்சமும் குறையவில்லை. அதே நேரத்தில் பெரிய பட்ஜெட் போட்டு, இருப்பதையெல்லாம் வீணாக்கவும் இல்லை. 1.54 மணி நேரம் ஓடும் இந்த திரைப்படம், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது. தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தை, மொழி பிரச்னை இல்லாமல் ஜாலியாக வீட்டில் அமர்ந்து பார்க்கலாம்.