சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்குச் சென்று அங்கேயும் தடம் பதித்துள்ள நாயகன் கவின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம், டாடா. இதில், மணிகண்டன் என்ற கதாப்பாத்திரத்தில் ஹீரோவாக கலக்கியுள்ளார், கவின். இவருக்கு ஜோடியாக சிந்து என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் அபர்ணாதாஸ். தந்தை-மகன் பாசத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள டாடா திரைப்படத்தின் முழு விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். 


கதையின் கரு:


பெற்றோரின் பேச்சைக் கேட்காத, சரியாக படிக்காத, பொறுப்பற்று சுற்றும் கல்லூரி மாணவனாக வருகிறார் ஹீரோ மணிகண்டன்(கவின்). இவருக்கும், உடன் படிக்கும் சிந்துவிற்கும்(அபர்ணா தாஸ்) காதல் பற்றிக்கொள்கிறது. எதிர்பாராத விதமாக சிந்து கர்பமாகிறார். கவின் அந்த கர்பத்தை கலைக்கச் சொல்லியும் சிந்து அவரது பேச்சைக் கேட்காததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்கின்றனர். 


மணி, திருமணத்திற்கு பிறகும் ஊதாரியாகவே சுற்றுகிறார், குடித்து விட்டு வீட்டிற்கு வருகிறார். “திருந்தி விடுவார் என்று நினைத்து கணவன், இன்னும் இப்படியே இருக்கிறாரே” என்று மனம் நொந்து போகிறார், நாயகி. ஒரு சண்டையின் போது, “நீ செத்துரு” என்று கூறிவிட்டு போகும் நாயகன், மனைவி பிரசவ வலியில் கால் செய்யும் போதும் அதை பொருட்படுத்தாமல், போனை ஸ்விட்ச் ஆஃப் செய்கிறார். இதன் விளைவாக, குழந்தை பெற்ற சிந்து அதனை மருத்துவமனையிலேயே விட்டு விட்டு தனது பெற்றோருடன் சென்றுவிடுகிறார். 




குழந்தையை வளர்க்கும் முழு பொறுப்பும் நாயகனிடத்தில் வருகிறது. அதுவரை ஊதாரியாகவும் பொறுப்பற்றும சுற்றித்திரிந்த மணி, தனது குழந்தைக்கு நல்ல அப்பாவாக இருக்க முயற்சி செய்கிறார். தனது மனைவிக்கு குழந்தையை காண்பிக்கவே கூடாது என்ற எண்ணத்தோடு நாட்களைக் கடத்துகிறார், மணி. 4 வருடங்கள் கழித்து தனது மனைவியை எதிர்பாராத விதமாக சந்திக்கிறார். தனது மனைவியை மணி மன்னிப்பாரா? சிந்து குழந்தையை விட்டு பிரிந்தது ஏன்? போன்ற பல கேள்விகளுக்கு அழகான பதிலாக வருகிறது டாடா படத்தின் க்ளைமேக்ஸ். 


நெகிழ வைத்த தந்தை-மகன் பாசம்:


முதல் பாதியின் பாதி வரை, ஊர் சுற்றும் ஊதாரி இளைஞராகவும், திருமணத்திற்கு பிறகு பொறுப்பற்ற கணவராகவும் வரும் கவின், மகன் பிறந்த பிறகு நல்ல தந்தையாகவும் நல்ல மனிதராகவும் மாறுகிறார். முதலில், “என்னடா இவன், இவன்லாம் ஒரு மனிஷனா?” என்று ரசிகர்களை கோபமாக கேட்கவைத்த இவரது கதாப்பாத்திரம், அடுத்தடுத்த காட்சிகளில் அந்த நெகடிவ் பிம்பத்தை ரசிகர்களின் மனங்களில் இருந்து மொத்தமாக தூக்கிவிடுகிறது. தங்க மீன்கள் படத்தில் தந்தை-மகள் பாசத்தை அழகாகவும் ஆழமாகவும் கூறியது போல், இந்த படத்திலும் தந்தை-மகன் பாசத்தை மென்மையாக கூறியுள்ளனர். 


அப்ளாஸ் அள்ளும் கதாப்பாத்திரங்கள்:


மணிகண்டனாக கவின்-டாடா படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பயன்படுத்தி நன்றாகவே ஸ்கோர் செய்கிறார், கவின். குறிப்பாக பாசப்போராட்ட காட்சிகளிலும், க்ளைமேக்ஸில் வாயில் கைவைத்து அழும் காட்சிகளின் ரசிகர்களின் கண்களையும் நனையவைத்து விடுகிறார். 


சிந்துவாக அபர்ணா தாஸ்-பீஸ்ட் திரைப்படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் ரசிகர்களை ரசிக்க வைத்த நாயகி அபர்ணா, டாடா படத்திற்கு இரண்டாவது தூண் போல செயல்படுகிறார். இவரையும், கவினையும் சுற்றி மட்டும் கதை நகர்ந்தாலும், இவருக்கு ‘ஸ்க்ரீன் ஸ்பேஸ்’ பெரிதாக கிடைக்கவில்லையோ என்று தோன்றுகிறது. படத்தில் ஒரு 20 நிமிடங்கள் இவர் காணாமல் போவது, அதற்கு காரணமாக இருக்கலாம். இவரது தாய் பாசத்தை இன்னும் சற்று தூக்கலாக காண்பித்திருக்கலாம். 


பாக்கியராஜ்-ஐஸ்வர்யா-சிறிது நேரமே வந்தாலும், நம் பெற்றோரை கண் முன்னே நிறுத்துகின்றனர், பாக்கியராஜும் ஐஸ்வர்யாவும். மகனின் குரலைக்கேட்டு ஒரு தாயாக துடித்தாலும், கணவரின் பேச்சைக் கேட்டு அவர் போட்ட கோட்டை தாண்டாத மனைவியாக மனதில் நிற்கிறார் ஐஸ்வர்யா. 




பஞ்ச் பேசிய விடிவி கணேஷ்-குணச்சித்திர நடிகர் விடிவி கணேஷ், இப்படத்தில் அறிவுரை கூறும் நலம் விரும்பியாகவும், அவ்வப்போது காமெடி பஞ்ச் வசனம் பேசுபவராகவும் வந்து ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்துகிறார். 


கவினின் மகனாக வரும் குழந்தை நட்சத்திரம் ஆத்விக், கொள்ளை அழகு. இவர் பேசும் தமிழுக்கு மட்டும் ஆயிரம் முத்தங்கள் கொடுக்கலாம். 


துணைக் கதாப்பாத்திரங்களாக வரும் பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் குமார் ஆகியோர் மனதில் நிற்கின்றனர். 


படத்தின் பாடல்கள் அனைத்தும் மனதைக் கவரும் ரகம். குறிப்பாக மகன் மீதான பாசம் குறித்து வரும் “தாயாகா நான்..” பாடல் அடடா சொல்ல வைக்கிறது. பிண்ணனி இசை மூலம் படத்திற்கு மேலும் உயிர் சேர்த்திருக்கிறார், இசையமைப்பாளர் ஜென் மார்டின்.


வர்க்-அவுட் ஆன காமெடி வசனங்கள்!


நம் இயல்பு வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் கஷ்டங்களை வைத்து ஜோக் அடிப்பது போல, இப்படத்திலும் கஷ்டமான நேரங்களில் சிரிப்பு மந்திரத்தைத் தூவி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார், இயக்குனர் கணேஷ் கே. பாபு. இவரது எதார்த்தமான காமெடி வசனங்களும், ஒரு இடத்தில் கூட கதையை போர் அடிக்காமல் கொண்டு சென்ற விதமும் ரசிகர்களை கவர்ந்திழுக்கிறது. 


எமோஷனல் காட்சிகளை, இன்னும் கொஞ்சம் கூட எமோஷன் சேர்த்திருக்கலாம். கதையை முன்கூட்டியே ஊகிக்க முடிந்தாலும், நேர்தியான திரைக்கதையினால் அது பெரிய குறையாக தெரியவில்லை. 


மொத்தத்தில் குடும்பத்துடன் வீக்-எண்டில் ஒரு நல்ல ஃபீல்குட் படம் பார்க்க விரும்பினால், இந்த படத்தை தாராளமாக தியேட்டரில் பார்க்கலாம்.