Custody Movie Review Tamil: இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா, க்ரித்தி ஷெட்டி ஹீரோ, ஹீரோயினாக நடித்து வெளியாகியிருக்கும் படம் “கஸ்டடி”. இந்த படத்தில் சரத்குமார், அரவிந்த்சாமி, பிரியாமணி, சம்பத், பிரேம்ஜி அமரன் என பலரும் இணைந்து நடித்துள்ளனர். இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்திருக்கும்  கஸ்டடி படத்தின்  விமர்சனத்தைக் காணலாம்.


கதையின் கரு:


90களில் ஆந்திராவில் நடக்கும் கதை. ராஜமுந்திரியில் நடக்கும் வெடி விபத்தில் பள்ளி குழந்தைகள் உட்பட பலரும் கொல்லப்படுகின்றனர். இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்படுகிறது. இதில் மிகப்பெரிய ரௌடியாக இருக்கும் அரவிந்த்சாமி சி.பி.ஐ. அதிகாரியாக வரும் சம்பத்திடம் பிடிபடுகிறார். அப்போது நடக்கும் கார் விபத்தில் இருவரும் போலீசில் எதிர்பாராத விதமாக சிக்குகின்றனர். சிறையில் இருக்கும் அரவிந்த்சாமியை காப்பாற்ற முதலமைச்சர் பிரியாமணி, போலீஸ் உயரதிகாரி சரத்குமார்  உட்பட அதிகார வர்க்கத்தினர்  முயற்சிக்கின்றனர்.




அவர்களை எதிர்த்து  சம்பத்துடன் சேர்ந்து கான்ஸ்டபிள் நாகசைதன்யா அரவிந்த் சாமியை பெங்களூரு கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து செல்கிறார். இடையில் நாகசைதன்யாவின் காதலி க்ரித்தி ஷெட்டியும் இவர்களுடன் இணைகிறார். ஆனால் வழியில் காப்பாற்ற முயற்சி செய்தவர்களாலேயே அரவிந்த்சாமியை கொல்ல  முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதன் பின்னணி என்ன? பெங்களூரு செல்லும் 4 பேரின் கதி என்ன? என்பதை நாகசைதன்யாவின் "ஆக்ஷன்" அவதாரத்துடன் கஸ்டடி படம் விளக்குகிறது.


படம் எப்படி?


படத்தின் முதல் அரை மணி நேரம் தெலுங்கு டப்பிங் படம் பார்க்க வந்து விட்டோமா? என தோன்றும் அளவுக்கு பொறுமையை சோதிக்கிறது. ஆனால் போலீசிடம் அரவிந்த்சாமி சிக்குவதில் இருந்து விறுவிறு பின்னணி இசையுடன் ஆடியன்ஸை கட்டிப் போடுகிறது படம். குறிப்பாக முதல் பாதியில் வரும் அரவிந்த் சாமியின் ஒன்லைனர்கள்,  போலீஸ் ஸ்டேஷன் மற்றும் அணையின் தண்ணீர் செல்லும் குழாய்க்குள் நடக்கும் சண்டை ரசிக்க வைக்கிறது.


இரண்டாம் பாதியில் சர்ப்ரைஸ் கொடுக்கும் ஜீவா, கயல் ஆனந்தி பிளாஷ்பேக் காட்சிகள் உட்பட ஆங்காங்கே வெங்கட்பிரபுவின் லாஜிக் எதிர்பார்க்கக்கூடாத ஸ்கிரீன்பிளே கைவண்ணம் பளிச்சிடுகிறது. அதேசமயம் அரவிந்த் சாமியை கொள்வதற்கான காரணமும் வலுவாக இல்லை. மேலும் பாடல்கள் படத்துக்கு தடையாக இருந்தாலும் பின்னணி இசை பக்கபலமாக அமைந்துள்ளது.


நடிப்பு எப்படி?




முகத்தில் எதிர்பார்த்த ரியாக்ஷன் வராவிட்டாலும் நாக சைதன்யா ரசிகர்களின் நம்பிக்கையை பெறுகிறார். க்ரித்தி ஷெட்டி பெரிய கேரக்டர் இல்லாவிட்டாலும் படம் முழுக்க வருகிறார். அரவிந்த் சாமி, சரத்குமார் நடிப்பில் மிரட்ட, பிரியாமணி, ராம்கி, பிரேம்ஜி, சம்பத் ஆகியோர் கொடுத்த கேரக்டர்களை சிறப்பாக செய்துள்ளார்கள். 


மொத்தத்தில் வழக்கமான வெங்கட் பிரபுவின் ஜாலி கமர்ஷியல் மேக்கிங்கிற்காக ’கஸ்டடி’ படத்தை தியேட்டரில் பார்க்கலாம்!