கான்ஜூரிங் கண்ணப்பன் திரை விமர்சனம்
அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்து இன்று அதாவது டிசம்பர் 8ஆம் தேதி வெளிவந்துள்ளது கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படம். இப்படத்தில் சதீஷ் உடன் இணைந்து சரண்யா பொன்வண்ணன், ரெஜினா, நாசர், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
ஏற்கெனவே தமிழில் எக்கச்சக்க பேய் படங்கள் வெளியாகி இருந்தாலும், இப்படத்தினை ஏ.ஜி.எஸ் எண்டர்டைமெண்ட் தயாரித்துள்ளதால் படம் நிச்சயம் திருப்தி அளிக்கும் படமாக இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா கான்ஜூரிங் கண்ணப்பன் என்பதை பார்க்கலாம்!
கதைக்களம்
கதாநாயகன் சதீஷ் தனக்கு கிடைக்கும் ட்ரீம் கேச்சரில் இருந்து ஒரு இறகினை தெரியாமல் தனியாக பிரித்து எறிந்து விடுகின்றார். இதனால் அவருக்கு ஒரு கெட்ட கனவு வருகின்றது. இது குறித்து முதலில் சதீஷ் அமானுஷ்ய ஆய்வாளராக உள்ள நாசர் மற்றும் மனநல மருத்துவராக உள்ள ரெடின் கிங்ஸ்லி ஆகியோரிடம் இது குறித்து கூறுகின்றார். நாசர் சொல்வதை நம்பாத சதீஷ் ரெடின் கிங்ஸ்லீயின் மருத்துவ ஆலோசனைகளை பின்பற்றுகின்றார்.
ஆனால் தூங்கிய உடனே வரும் கெட்ட கனவில் சதீஷூக்கு அடிப்பட்டால் கனவு முடிந்து நிஜ வாழ்க்கையிலும் அவருக்கு அடிப்பட்டு இருக்கும். இதனைப் பார்த்து மிகவும் பயப்படும் சதீஷ் அதன் பின்னர் நாசர் சொல்வதை நம்புகின்றார். சதீஷ் கனவில் தனக்கு துணைக்கு ஆட்கள் வேண்டும் என ஆனந்த் ராஜ் மற்றும் ரெடின் கிங்ஸ்லீயை ட்ரீம் கேச்சரில் இருந்து இறகினை பிரித்து எடுக்க வைத்து விடுகின்றார்.
ஆனால் சதீஷூக்கே தெரியாமல் அவரது குடும்பமான அம்மா சரண்யா பொன்வண்ணன், அப்பா விடிவி கணேஷ் மற்றும் மாமா நாடோடிகள் சின்னமணி என இவர்களும் ஆளுக்கு ஒரு இறகினை பிரித்து எறிந்து விட அனைவரும் கனவில் வரும் பேயிடம் மாட்டிக் கொள்கின்றனர். இவர்களை காப்பாற்றும் முயற்சியில் நாசர் மற்றும் அவரது உதவியாளராக உள்ள ரெஜினா முயற்சி செய்கின்றனர். இறுதியில் இவர்கள் கனவில் வரும் பேயிடம் இருந்து தப்பித்தார்களா இல்லையா என்பது மீதிக்கதை.
திகிலா.. காமெடியா
தமிழ் சினிமாவில் பேய் கதைக்கு எத்தனையோ காரணங்கள் கூறப்பட்டு இருந்தாலும் இந்த படத்தில் கூறப்பட்டுள்ள காரணமும் கதைக்களமும் சற்றே வித்தியாசமாக இருந்தது. கதைக்களத்திற்கு ஏற்ற நேர்த்தியான திரைக்கதை மட்டும் இருந்திருந்தால் படம் சிறப்பாக எடுபட்டு இருக்கும். காமெடியாக படத்தினை கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளார் இயக்குநர். ஆனால் அது பல இடங்களில் எடுபடவில்லை.
பேய் சினிமா என்றாலே ஒரு பங்களா தேவைப்படும் என தமிழ் சினிமாவில் நம்புகிறார்கள் என்பதற்காக படக்குழுவும் பேய் பங்களாவை தேடிப் பிடித்தார்களா அல்லது பங்களாவைப் பார்த்தபின்னர் பேய்க்கதை எழுதினார்களா எனத் தெரியவில்லை.
சதீஷ் மற்றும் சரண்யாவின் நடிப்பு கவனிக்க வைக்கின்றது. பாடல்கள் இல்லை என்றாலும் பேய் வரும் காட்சிகளில் யுவன் சங்கர் ராஜாவின் இசை திகிலூட்டுகின்றது. ஒரு பங்களாவிற்குள் படம் நடப்பாதால் எஸ். யுவாவின் ஒளிப்பதிவு ஓ.கே தான். கதைக்களத்திற்கு ஏற்ற திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்தால் கான்ஜூரிங் கண்ணப்பன் கொடி நாட்டி இருப்பார்.