மலையாள சூப்பர் ஸ்டார்களுல் ஒருவராக கருதப்படும் மம்மூட்டி போலீஸ் கதாப்பாத்திரத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ள படம்தான் கிரிஸ்டோபர். மம்மூட்டி மட்டுமன்றி படத்தில் அமலா பால், சினேகா, வினய், சரத் குமார் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மலையாள ரசிகர்களும், மலையாளப் படங்களை விரும்பிப்பார்க்கும் தமிழ் ரசிகர்களும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த படம் இது. கிரிஸ்டோபர் படத்தின் முழு விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.
கதையின் கரு:
கேரளாவின் எர்ணாகுளம் பகுதியில் நேர்மையான காவல் அதிகாரியாக பணியாற்றி வருபவர், கிரிஸ்டோபர்(மம்மூட்டி). பெண்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்களை போட்டுத்தள்ளும் ‘என்கெளண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என மக்கள் மத்தியில் பெயர் எடுக்கிறார். ஆனால் காவல் அதிகாரிகள் மத்தியில், இவருக்கு ‘சட்டத்தை தன் கையில் எடுக்கும் கோபக்கார போலீஸ்காரர்’ என்ற பெயர் கிடைக்கிறது. ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 5 பேரை சுட்டுத்தள்ளுகிறார் கிரிஸ்டோபர். இதனால் இவர் மீது வழக்கு விசாரணை பாய்கிறது. அதனை விசாரிக்கும் அதிகாரியாக வருகிறார் அமலா பால்.
பெரிய தொழிலதிபராக இருக்கும் சீதாராம் திருமூர்த்தி(வினய்) தனது மனைவியை தனக்கு எதிராக செயல்பட்டதால் தீர்த்துக் கட்டுகிறார். இந்த வழக்கில் மம்மூட்டியின் வளர்ப்பு மகள் ஆமினா(ஐஸ்வர்யா லஷ்மி) சம்பந்தப்பட, அவர் கதையையும் முடிக்கிறார் திருமூர்த்தி. அவரை கிரிஸ்டோபர் பழி தீர்த்தாரா? ஆமீனாவின் இறப்பிற்கு ஞாயம் கிடைத்ததா? போன்ற கேள்விகளுக்கு விடையாக வருகிறது க்ளைமேக்ஸ்.
மெதுவான சஸ்பன்ஸ்-த்ரில்லர்:
பொதுவான போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட த்ரல்லர் கதை என்றாலே அதில் வேகத்திற்கும் பரபரப்பிற்கும் பஞ்சமே இருக்காது. ஆனால் இந்த படத்தில் கதையே வேறு. பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை தட்டிக்கேட்கும் அதிகாரி, ஏன் முகத்தில் கொஞ்சம் கூட எமோஷன் காட்டவில்லை? என்ற கேள்வி படம் பார்ப்பவர்களின் மனங்களின் நெருடத்தான் செய்கிறது. வழக்கமாக அனைத்து படங்களிலும் முதல் சீன் ஹீரோக்களுக்காகத்தான் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் இப்படத்திலோ, முதல் காட்சியில் வருவதே நம்ம வில்லன் வினைதான். இவருக்கும் கிரிஸ்டோபருக்குமான பகையை கடைசியில் காட்டிய விதத்தை மட்டும் பாராட்டலாம். பாலியல் வன்கொடுமை குறித்த படம் என்பதை ஒரு ரேப் சீனில் மட்டும் காண்பித்தால் போதுமானதாக இருக்கும். ஆனால் படம் பார்ப்பவர்களை கலங்க வைக்க வேண்டும் என்ற நோகக்த்தோடு, கிட்டத்தட்ட இரண்டு மூன்று பாலியல் வன்கொடுமை காட்சிகளை சொருகியுள்ளனர். அக்காட்சிகளைப் பார்த்து முதலில் களங்கும் ரசிகர்கள் ஒரு கட்டத்தில் கோபமடைகின்றனர்..
படத்தின் முதல் பாதி வேகமாக சென்றாலும், இரண்டாம் பாதியில் படம் பார்ப்பவர்களின் கொட்டாவி சத்தத்தை கேட்க முடிகிறது. எளிதில் ஊகிக்கும் வகையிலான திரைக்கதை, திருப்பங்களே இல்லாத முக்கால் வாசி கதையினால், ரசிகர்கள் “க்ளைமேக்ஸ் எப்போதான் வரும்” என்று முனங்க ஆரம்பித்து விடுகின்றனர்.
”நம்ம மம்மூட்டியா இது?”
நல்ல நடிப்பிற்கு பெயர் போன மம்மூட்டி, இதில் நடிப்பதற்கு முயற்சி கூட செய்யவில்லை. தூங்கி எழுந்தவரின் முகத்தில் தண்ணீர் தெளித்து நடிக்கச் சொன்னது போல அனைத்து காட்சிகளிலும் வருகிறார் மம்மூட்டி. தனது வளர்ப்பு மகளை இழந்த போதிலும் ஒரு எமோஷனையும் முகத்தில் காட்டாத அவர், க்ளைமேக்ஸில் சிரித்தது பலருக்கும் ‘வசி..சிட்டிக்கு கோபம் வருது’ மொமன்ட் போல இருந்தது. சண்டைக் காட்சிகளில் கை-கால்களை அசைக்க முயற்சி செய்து பாவ்லா காட்டி ரசிகர்களை ஏமாற்றுகிறார் மம்மூட்டி.
மனதில் நின்ற கதாப்பாத்திரங்கள்!
கதை அப்படி இப்படியென்றிருந்தாலும், படத்தில் நடித்த சில கதாப்பாத்திரங்கள் ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்தன. அந்த கேரக்டர்கள் யாரென்று தெரியுமா?
ஆமினாவாக ஐஸ்வர்ய லக்ஷமி-எல்லாப்படங்களிலும் வித்தியாசமான பெண்ணாக வலம் வரும் ஐஸ்வர்யா, இந்த படத்திலும் அநீதிகளை எதிர்த்து போராடும் வழக்கறிஞராக வருகிறார். உயிரிழக்கும் தருவாயில் வலி தாங்காமல் துடிக்கும் காட்சியில் கல் மனதையும் கரையை வைக்கிறார், ஐஸ்வர்யா.
காமியோ ரோலில் சரத்குமார்-மம்மூட்டியுடன் லைனில் நிற்க வைக்க வேண்டியவர்தான் சரத்குமார். வெற்றி வேல் என்ற காவல் அதிகாரியாக வரும் இவருக்கு விரல் விட்டு என்னக்கூடிய வசனங்களைத்தான் கொடுத்துள்ளனர்.
சர்ப்ரைஸ் தந்த ஏஜண்ட் டீனா-விக்ரம் படத்தில் ‘ஏஜண்ட் டீனா’ என்ற கதாப்பாத்திரத்தில் வந்த நடிகை வசந்தி, கிரிஸ்டோபர் படத்தில் வடிவுக்கரசி எனும் கேரக்டரில் வந்து ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்தார். அதிலும் கண்களில் கோபத்துடன் துப்பாக்கியை வைத்துக் கொண்டு சண்டையிடும் காட்சியில் புல்லரிக்க வைக்கிறார். இவருக்கு இன்னும் கொஞ்சம் கூட இப்படத்தில் வேலை கொடுத்திருக்கலாம்.
வில்லனாக வினய்-டாக்டர் படத்தில் வில்லனாக அறிமுகமான வினய், கிரிஸ்டோபர் படத்திலும் அதே வில்லத்தனத்தைக் காட்ட முயற்சி செய்கிறார். சைலண்டாக மனைவியை காதருகே போய் மிரட்டும் காட்சிகளில் கொடூர முகத்தை கண்முன் நிறுத்துகிறார்.
கொடுத்த வேலையை கச்சிதமாக செய்த நடிகைகள்-மம்மூட்டியின் முன்னாள் மனைவியாகவும், உள்துறை அமைச்சராகவும் வரும் சினேகா வயதானாலும் அழகாகவே தெரிகிறார். தன் பங்கிற்கு படத்தில் என்ன செய்ய வேண்டுமோ அதை சிறப்பாகவே செய்திருக்கிறார். அமலா பால், நேர்மையான காவல் அதிகாரியாகவும், பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்ணாகவும் வந்து ரசிகர்களை பல இடங்களில் நெகிழ வைக்கிறார்.
மொத்தத்தில் இரண்டரை மணி நேர டீசன்ட் ஆக்ஷன் த்ரில்லர் படமாகவும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு குரல் கொடுக்கும் படமாகவும் மனதில் நிற்கிறது கிரிஸ்டோபர். ஆனால்,நன்றாக செய்த கேக்கை, கடைசி நேரத்தில் கெட்டுப்போன க்ரீமை ஊற்றி கெடுத்தது போல, கிரிஸ்டோபர் படமும் சொதப்பலான திரைகதையினால் கெட்டுப்போகிறது. இன்னும் கொஞ்சம் திருப்பங்களையும் சஸ்பென்ஸ்களையும் தூவியிருந்தால், கிரிஸ்டோபர் இன்னும் பெரிதாகவே பேசப்பட்டிருக்கும்.