அருண் குமார் இயக்கத்தில் சித்தார்த் நிமிஷா சஜயன், நடித்து உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சித்தா’ இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. பண்ணையாரும் பத்மினியும் ,சேதுபதி , சிந்துபாத் உள்ளிட்ட படங்களை இயக்கிய  அருண் குமார் இயக்கியிருக்கும் ‘சித்தா’, பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் தொடர் நிகழ்வுகளை உணர்ச்சிகரமான ஒரு கதையாக சொல்லியிருக்கிறார்.


சித்தா


படத்தில் சக்தி (நிமிஷா சஜயன்) தன்னுடைய இளம் பருவத்தில் தனது உறவினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதை சொல்கிறார். அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் சித்தா (சித்தார்த்) அந்த ஆள் இப்போது எங்கு இருக்கிறான் என்று சொல்ல சொல்கிறான். உடனே சக்தி ”அதுல இருந்து நான் எப்படி வெளிய வந்தேனு நீ கேக்கமாட்ட இல்ல“ என்கிறார். பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் பெண் குழந்தைகளுக்கு இந்த உலகின் மேல் மீண்டும் நம்பிக்கையை வரவழைக்க வேண்டிய தேவையை வலியுறுயுத்துகிறது சித்தா!


கதை


தனது அண்ணன் இறந்த பின் அவரது மகளான சுந்தரியை தனது அண்ணியுடன் சேர்ந்து வளர்த்து வருகிறார் ஈஸ்வரன் ( சித்தார்த்). ஈஸ்வரனின் பள்ளிப் பருவத்துக் காதலியாக வருகிறார் சக்தி ( நிமிஷா சஜயன்) சந்தர்ப்ப சூழ்நிலையால் இவர்களின் காதல் பிரிந்துவிட, மீண்டும் தங்களது உறவை புதுப்பித்துக் கொள்கிறார்கள்.


இதனிடையில் தனது நண்பன் வடிவேலுவின் அக்கா மகளான பொன்னியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஈஸ்வரன் மீது பழி வருகிறது. இந்தப் பிரச்சனைகளுக்கு மத்தியில் முதல் பாதி நிற்க, பெண் குழந்தைகளை கடத்திச் சென்று அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யும்  ஒருவன் சுந்தரியைக் கடத்திச் செல்கிறான். இந்தக் குற்றவாளியை அடையாளம் கண்டு சுந்தரியை தேடும் த்ரில்லராக இரண்டாம் பாதி தொடர்கிறது.


படம் எப்படி?


மிகவும் தீவிரமான ஒரு கதைக்களத்தை எடுத்துக் கொண்டு எந்த வகையிலும் அரசியல் சரிநிலை தவறாமல் மிக உணர்ச்சிவசமான ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறார் அருண் குமார். பொதுவாகவே பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் செய்திகளைப் பார்க்கும் பெரும்பாலான மக்களின் கருத்தாக இருப்பது குற்றவாளியை தெருவில் நிற்க வைத்து சுடவேண்டும் அல்லது கொடூரமான தண்டையை வழங்கவேண்டும் என்பதே!


பெண் குழந்தைகளின் பெற்றோருக்கு இயல்பாகவே இருக்கும் பதற்றம், அவர்களின் கோபம் இவற்றை எல்லாம் நேர்மையாக பிரதிபலிக்கும் அதே வேளையில், பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு இந்த உலகத்தில் மேல், மனித உறவுகளின் மேல் நம்பிக்கை போய்விடும். அவர்களது இழந்த அந்த நம்பிக்கையை திருப்பிக் கொடுப்பதே முதன்மையானது என்பதை வலியுறுத்தியுள்ளார் இயக்குநர்.


 நடிகர்கள்


சித்தா மற்றும் சுந்தரிக்கு இடையிலான உறவு, சித்தா மற்றும் அவனது நண்பன் வடிவேலுவுக்கு இடையிலான உறவு மற்றும் துணிச்சலான ஒரு கதாபாத்திரமான சக்தி என ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் மிகத் தெளிவாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்!


சித்தார்த் தனது கடந்த காலப் படங்களைவிட மிக எளிதாக உணர்ச்சிகளை பிரதிபலிக்கிறார். மலையாளத்தில் பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த நிமிஷா சஜயன்  உடல்மொழி, முகபாவனை என சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறார். வலி நிறைந்த ஒரு படம் தான் சித்தா. ஆனால் எந்த வகையிலும் அந்த வலியை வைத்து பார்வையாளர்களின் அனுதாபத்தைப் பெற வேண்டும் என்று இயக்குநர் முயற்சிக்கவில்லை.