Baba Black Sheep Review in Tamil: அறிமுக இயக்குநர் ராஜ்மோகன் இயக்கத்தில் அபிராமி, ஆர்.ஜே.விக்னேஷ், நரேந்திர பிரசாத், அப்துல் அயாஸ், அம்மு அபிராமி, சேட்டை ஷெரீஃப், வினோதினி, போஸ் வெங்கட், சுப்பு பஞ்சு, ஜி.பி.முத்து உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் ‘பாபா பிளாக் ஷீப்’. சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். இந்த படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம்.
படத்தின் கதை
இன்றைய சமூகத்தில் சர்வ சாதாரணமாக அதிகரித்து வரும் மாணவ, மாணவியர்களின் தற்கொலை, மன அழுத்தப் பிரச்சினைகள், பெற்றோரின் கண்டிப்பான வளர்ப்பு, இணையத்தில் மூழ்கி கிடக்கும் பிள்ளைகள் ஆகியவை பற்றி பேசியுள்ளது ‘பாபா பிளாக் ஷீப்’ படம்.
சுரேஷ் சக்கரவர்த்தி ஒரே வளாகத்தில் குறுக்கே சுவர் எழுப்பி ஆண்கள் பள்ளி, இரு பாலர் பயிலும் பள்ளியை நடத்தி வருகிறார். அவர் மரணத்திற்குப் பிறகு பள்ளி ஒருங்கிணைக்கப்படுகிறது. ஆனாலும் 11 ஆம் வகுப்பு படிக்கும் ஆண்கள் பள்ளியை சேர்ந்த 5 பேருக்கும், இரு பாலர் பயிலும் பள்ளியை 5 பேருக்கும் இடையே அதிகார மோதல் ஏற்படுகிறது. ஒரு சண்டையில் இரு குழுவும் ஒன்றாக இணைகிறார்கள். அப்போது இவர்கள் கையில் பெயர் குறிப்பிடாமல் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துக் கொள்ளப் போவதாக எழுதிய கடிதம் கிடைக்கிறது.
அந்த கடிதத்தை எழுதியது யார்? .. இந்த தற்கொலை முயற்சி தடுக்கப்பட்டதா? இதுபோன்ற பிரச்சினைகளுக்கும் என்னதான் தீர்வு? என்பதை தன் பாணியில் பேசியுள்ளார் ‘பாபா பிளாக் ஷீப்’ படத்தின் இயக்குநர் ராஜ் மோகன்.
நடிப்பு எப்படி?
ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் பார்த்து பழகிய பல முகங்கள் படம் முழுவதும் வருவதால் ரசிகர்கள் படத்துடன் எளிதாக கனெக்ட் ஆகி விடுவார்கள். ஓரளவு கதையில் எல்லோருக்கும் பங்கு கொடுத்து குட் மார்க் வாங்குகிறார் ராஜ் மோகன். கம்பேக் கொடுத்த அபிராமியின் பின்னணி கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்தை அடிப்படையாக கொண்டு காட்சிப்படுத்தப்பட்டாலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையின் அர்த்தத்தை உணர ஒரு கதை உள்ளதை ஜி.பி.முத்துவை வைத்து சொன்னது சிறப்பு. அம்மு அபிராமி - அப்துல் அயாஸ் இடையேயான காட்சிகள் ஓரளவு ஓகே ரகம்.
படம் எப்படி?
ராஜ்மோகன் தனது முதல் படம் என தெரியாத அளவுக்கு திரைக்கதை அமைத்துள்ளார். முதல் பாதி முழுக்க முழுக்க 2கே கிட்ஸ்கள் அட்ராசிட்டி, பள்ளி கால வாழ்க்கை, பள்ளிக்காதல், வகுப்பறை அலப்பறைகள் பற்றி பேசி கலகலப்பாக மாறியுள்ளது. இரண்டாம் பாதி அப்படியே வேறு டிராக்கில் கதை பயணித்தாலும் சொல்ல வந்த கருத்தை தொட்டுச் சென்றுள்ளது படம். ஆனால் இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
மொத்த படத்தையும் விட கிளைமேக்ஸ் டைட்டிலில் வரும் சிறப்பு வீடியோ ‘ப்ரோ... சூப்பர் ப்ரோ’ ரகம் தான்.சில குறைகளை களைந்து விட்டு படம் பார்த்தால் ‘பாபா பிளாக் ஷீப்' ரசிகர்களை கவரும்..!