அவதார் கார்ட்டூனை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள வெப் சிரீஸ் அவதார் தி லாஸ்ட் ஏர் பெண்டரின் விமர்சனத்தைப் பார்க்கலாம்.


அவதார்: தி லாஸ்ட் ஏர்பெண்டர் (Avatar: The Last Airbender)


நிக்லோடியன் தொலைக்காட்சியில் கடந்த 2005ஆம் ஆண்டு ஒளிபரப்பான அனிமேஷன் தொடர் “அவதார் : தி லாஸ்ட் ஏர்பெண்டர்” (Avatar: The Last Airbender). மைக்கேல் டான்டே டிமார்டினோ ( Michael Dante DiMartino)  பிரையன் கொனிட்ஸ்கோ (Bryan Konietzko) ஆகியோர் இந்த அனிமேஷன் தொடரை உருவாக்கினார்கள். சுட்டி டிவியில் இந்தத் தொடர் தமிழில் ஒளிபரப்பானது. 




நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என ஐந்து இயற்கை சக்திகளை அடிப்படையாக வைத்து ஃபேண்டஸி கதையாக இந்தத் தொடர் உருவாக்கப்பட்டது. நெருப்பு அரசன் மற்ற மூன்று நிலத்தைச் சேர்ந்தவர்களை தன் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கத்தில் போரைத் தொடங்குகிறான்.


இந்தப் போரை நிறுத்தவும், நெருப்பு அரசனை அழிக்கவும், நான்கு சக்திகளையும் கட்டுப்படுத்தக் கூடிய அவதார் என்கிற தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவனால் மட்டுமே முடியும். வெறும் 12வயதே ஆன ஆங் அடுத்த அவதார் ஆக தேர்ந்தெடுக்கப்படுகிறான். விளையாட்டுத் தன்மையுடன் இருக்கும் இந்த சிறுவன், நெருப்பு அரசனின் கைகளில் இருந்து உலகத்தை தனது நண்பர்கள் கட்டாரா மற்றும் சாக்கோவுடன் இணைந்து எப்படிக் காப்பாற்றுகிறான்  என்பதே இந்தத் தொடரின் கதை.


அனிமேஷன் தொடராக வெளியானபோது உலக அளவிலான ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது இந்தத் தொடர். இந்தத் தொடரில் உள்ள நகைச்சுவைத் தன்மை, தத்துவம், கலாச்சார சித்தரிப்புகள் என பல அம்சங்களை விமர்சகர்கள் பாராட்டியிருக்கிறார்கள்.


சொதப்பலாகிய படம்




இந்தத் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு இதே கதை முழு நீள படமாக வெளியானது. ஆனால் அனிமேஷன் தொடர் ரசிகர்களிடம் ஏற்படுத்திய பிரமிப்பை ஈடுசெய்யத் தவறியது திரைப்படம். 2 மணி நேர படத்திற்குள்ளாக இவ்வளவு பிரமாண்டமான கதையாக சொல்ல இயக்குநர்கள் தவறிவிட்டார்கள்.


இதனைத் தொடர்ந்து தற்போது நெட்ஃப்ளிக்ஸ் இதே கதையை லைவ் ஆக்‌ஷன் வெப் சீரிஸாக வெளியிட்டிருக்கிறது. முந்தைய படத்தின் அளவுக்கு இல்லையென்றாலும் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை இந்தத் தொடர் பெற்று வருகிறது.


நம்பலாமா, நம்பக்கூடாதா!




 நீங்கள் ஒரு அவதார் ரசிகர் என்றால் நிச்சயமாக இந்தத் தொடரை பார்க்கலாம். ஏற்கெனவே இரண்டு முறை பார்த்த கதை தான் என்றாலும், இந்த முறை சிறிய சிறிய திருத்தங்கள் கதையில் மிகச் சிறப்பாக கையாளப் பட்டிருக்கின்றன. வெவ்வேறு கதைகள் பின்னலாக சற்று புதுமையான அனுபவத்தை வழங்குகின்றன.


கிராஃபிக்ஸ் காட்சிகள் எந்தவித பிசிறும் இல்லாமல் மிகத் தத்ரூபமாக இந்தத் தொடரில் கைகூடி இருக்கின்றன. அதே நேரத்தில் சண்டைக் காட்சிகளும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. முதல் இரண்டு எபிசோட்கள் கொஞ்சம் தொய்வாக தெரிந்தாலும், அடுத்தடுத்த எபிசோட்களில் பிரமாண்டம் பெரிதாகிக் கொண்டே செல்கிறது. மேலும் கதை சொல்லலில் நிதானமும் தெளிவும் கூடுகிறது.


இந்தத் தொடரின் மிகப்பெரிய பலவீனம் என்றால் முக்கிய கதாபாத்திரம் ஆங் இடத்தில் நடிக்க கார்டன் கார்மியரை தேர்வு செய்தது தான். தோற்றத்தில் ஆங் போலவே இருந்தாலும் நடிப்பில் மிக செயற்கையான பாவனைகளை கையாள்கிறார். ஒரு குழந்தை மாதிரி அவரது நடிப்பு இல்லாமல், ஹாலிவுட் டீன் ஏஜ் படங்களில் வரும் போலியான ரியாக்‌ஷன்களை கொடுத்து நம்மை கடுப்பேற்றுகிறார்.






கட்டாராவாக நடித்துள்ள Kiawentiio Tarbell மற்றும் சாக்கோவாக நடித்துள்ள Ian Ousley தங்களது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.


8 எபிசோட்கள் கொண்ட முதல் சீசன்


அதே நேரத்தில் அனிமேஷன் தொடரின் மிகப்பெரிய பலமாக இருந்த ஒன்று நகைச்சுவை. சந்தோஷம், துக்கம் என எல்லா சூழலிலும் ஏதோ ஒரு வகையில் நகைச்சுவை இருந்துகொண்டே இருக்கும். குறிப்பாக ஆங் இயல்பிலேயே நகைச்சுவை குணம் அதிகம் கொண்ட ஒரு நபராக உருவாக்கப்பட்டிருப்பான். ஆனால் இந்தத் தொடரில் அந்த நகைச்சுவை சுத்தமாக இல்லாமல் செண்டிமெண்ட் அதிகம் திணிக்கப்படுகிறது.


அது ஒரு கட்டத்திற்கு மேல் எரிச்சலூட்டவும் செய்கிறது. மேலு இளவரசன் ஜூகோவின் மாமாவாக வரும்  ஐரோ கதாபாத்திரத்திரம் எவ்வளவு ரசிக்கும் வகையிலான அம்சங்கள் இருந்தும், ஒற்றைப் பரிணாமத்தில் மட்டுமே காட்டப்படுகிறது. அனிமேஷன் தொடரைப் பொறுத்தவரை ஒரு சில எபிசோட்கள் மையக் கதையோடு இணைந்து இல்லாமல் தனியாக சிறு சிறு உப கதைகளும் அதில் இணைக்கப்பட்டிருக்கும்.


அது ஒரு வகையில் பார்வையாளர்களுக்கு ஒரு வெரைட்டியைக் கொடுக்கும். ஆனால் இந்தத் தொடரில் அப்படியான விஷயங்கள் பெரிதாக கருத்தில் எடுக்கப்படாமல் நேரடியாக அடுத்து அடுத்து என கதையை மட்டுமே ஒரே நோக்கமாக வைத்து நகர்கிறார் இயக்குநர்.


கார்ட்டூன் ரசிகர்களை திருப்திப்படுத்தியதா?


இசையைப் பொறுத்தவரை அனிமேஷன் தொடரில் இடம்பெற்ற இசையை பெரும்பாலான இடங்களில் அப்படியே பயன்படுத்தி இருப்பது நாஸ்டாலஜிக் ஆக இருக்கிறது. முந்தைய அவதார் தொடர்களை பார்த்தவர்களுக்கு சலிப்பு ஏற்படாத வகையில் படத்தொகுப்பில் சில முயற்சிகளை செய்து, கதை சொல்லலில் சில திருப்பங்களை செய்திருப்பது சிறப்பு. செவ்விந்தியர்கள். அரேபியர்கள், மங்கோலியர்கள் என பல்வேறு இனத்தைச் சேர்ந்த கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்ககள் பேசும் வசனங்களில் அமெரிக்க ஹாலிவுட் படங்களின் நெடி மட்டுமே இருக்கிறது. 


மொத்தம் எட்டு எபிசோட்கள் கொண்ட முதல் சீசன், ஆங் நீர் தேசத்தை நெருப்பு தேசத்தின் தாக்குதலில் இருந்து காப்பாற்றுவது வரை முடிகிறது. மீதிக் கதை இரண்டாம் சீசனில் வர இருக்கிறது. படத்தைக் காட்டிலும் சில குறைபாடுகள் இந்தத் தொடரில் சரி செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் கதாபாத்திரங்களின் இயல்புகள் இன்னும் கூட விரிவாக எடுத்து சொல்லப் பட்டிருக்கலாம்.


கொஞ்சம் ஆசுவாசப்படும் வகையில் நகைச்சுவையை சேர்த்திருக்கலாம். அடுத்த சீசனில் இதை செய்வார்கள் என்று நம்பலாம். நிச்சயமாக ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் சில எபிசோட்கள் நெட்ஃப்ளிக்ஸின் இந்தத் தொடரிலும் இருக்கின்றன.