Eleven Movie Review: இரட்டையர்கள் கொலையும்.. விடைதேடும் போலீசும் - த்ரில்லர் ரசிகர்களுக்கு விருந்தா லெவன்? முழு விமர்சனம்
நடிகர் நவீன்சந்திரா நடிப்பில் இயக்குனர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கியுள்ள லெவன் திரைப்படத்தின் விமர்சனத்தை கீழே காணலாம்.
லோகேஷ் அஜில்ஸ்
நவீன் சந்திரா, ரியா, அபிராமி
திரையரங்கம்
தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகராக உலா வரும் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் படம் லெவன்.
த்ரில்லர் படம் லெவன்:
தொடர்ச்சியாக நடக்கும் கொலைகள், அந்த கொலைகளை விசாரிக்கும்போது உயிரிழந்தவர்கள் அனைவரும் இரட்டையர்கள், அந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி திடீரென விபத்தில் சிக்க, அவருக்கு பதிலாக விசாரணைக்கு வரும் புதிய அதிகாரியாக நாயகன், உயிரிழந்த அனைவரும் ஒரே பள்ளியில் படித்த இரட்டையர்கள் இந்த சூழலில் புதிய காவல்துறை அதிகாரி அந்த கொலையாளிகளை எப்படி கண்டுபிடித்தார்? கொலையாளி யார்? ஏன் இரட்டையர்கள் குறிவைத்து கொல்லப்பட்டனர்? போன்ற கேள்விகளுக்கு சஸ்பென்ஸ் கலந்து விடையளிக்கிறது லெவன் திரைப்படம்.
விறுவிறுக்கும் திரைக்கதை:
காவல்துறை அதிகாரியாக கம்பீரத்துடனும், மிடுக்குடனும் நடித்துள்ளார் நவீன்சந்திரா. அவருடன் ரியா, அபிராமி, ஆடுகளம் நரேன், திலீபன் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இந்த படத்தை லோகேஷ் அஜில்ஸ் இயக்கியுள்ளார்.
எரிந்த நிலையில் கிடைக்கும் சடலத்துடன் தொடங்கும் கதைக்களமும், விபத்தில் சிக்கிய காவல்துறை அதிகாரிக்கு பதில் புதிய அதிகாரியாக பொறுப்பேற்ற நவீன்சந்திரா கொலையாளியை பிடிக்க எடுக்கும் முயற்சிகளும், அதில் இருந்து கொலையாளி தப்பிப்பதும் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் இயக்குனர் திரைக்கதை அமைத்துள்ளார்.
இரட்டையர்களில் ஒருவராக வரும் ரித்விகா நடிப்பில் அசத்தியுள்ளார். நவீன் சந்திராவின் காதலியாக வரும் ரியாவிற்கு குறைவான காட்சிகளே உள்ளது. படத்தின் பலமாக அமைந்திருப்பது பள்ளி காட்சிகள். அந்த காட்சியை அழுத்தமான திரைக்கதை அமைத்ததற்காக இயக்குனருக்கு பாராட்டுகள்.
அஜ்மல்கான் - ரேயா ஹரி ஏஆர் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகாந்த் எடிட்டிங் செய்துள்ளார். த்ரில்லர் விருந்து எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த படம் சிறந்த விருந்தாகும்.





















