ஆர்க்கரியாம். சமீபத்தில் மலையாளத்தில் வெளியான திரைப்படம். திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா காலம் என்பதால் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. கொரோனா காலத்தில் ஒரு கொரோனா கால படமாகவே இருக்கிறது ஆர்க்கரியாம். ''யாருக்கு தெரியும்?'' என்ற வார்த்தையின் மலையாள வார்த்தைதான் 'ஆர்க்கரியாம்'. நாம் யார் என்பது ஒவ்வொருவரின் பார்வையிலும் மாறுபட்டே இருக்கிறோம். நியாய தர்மங்கள் இருந்தாலும், குற்றத்தின் கோணங்கள் வேறுபட்டவை. இங்கு யாருக்கு யார் நல்லவர்கள்? யாருக்கு கெட்டவர்கள்? யாருக்கு தெரியும்? என்ற ஒருவித கேள்விகளை நமக்குள் எழுப்புகிறது ஆர்க்கரியாம்.
2020 கொரோனா தொடங்கும் காலம், மனைவி பார்வதி, அவரது இரண்டாம் கணவர் ராய் மும்பையில் வசிக்கின்றனர். பார்வதியின் மகள் ஹாஸ்டலில் தங்கி பள்ளியில் படிக்கிறார். கொரோனா பரவல் ஊரடங்கு இவற்றை எல்லாம் யோசித்து மும்பையில் இருந்து கேரளாவில் உள்ள தன்னுடைய கிராமத்து வீட்டிற்குச் செல்ல யோசிக்கின்றனர். ஆனால் ஊரடங்கால் மகளை கேரளா அழைத்து வரமுடியவில்லை. பார்வதியும், கணவரும் மட்டுமே சொந்த கிராமத்திற்கு வருகின்றனர். பார்வதி சிறுமியாக இருக்கும் போது அவரது தாய் இறந்துபோக,கிராமத்தில் தனியாக வசித்து வருகிறார் பார்வதியின் தந்தை பிஜி மேனன். அவர் ஒரு ஓய்வுபெற்ற கணித ஆசிரியர். நீண்ட நாட்களுக்கு பிறகு மகள், மருமகனுடன் வசிக்கும் நாட்களை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
மும்பை போன்ற மாநகரில் இருந்து ஒரு கேரளா கிராமத்தின் தனி வீடு. பப்பாளி, கொய்யா, பலா என வீட்டில் விளையும் பழங்கள், பெரிய தோட்டம் என பரபரப்பான வாழ்க்கையில் இருந்து திடீரென விலகி நிற்கிறது படம். இதற்கிடையே ராயின் தொழில் நஷ்டத்தால் ஏற்படும் திடீர் பணத்தேவை, பார்வதியின் முதல் கணவரின் முன்கதை, அவை எழுப்பும் கேள்விகள் என ஒரு நாவலைப்போல பயணித்து முடிவடைகிறது படம்.
ஊரடங்கு காலத்தையும், கொரோனா பேரிடர் நேரத்தையும் கண்முன்னே கொண்டு வருகிறார்கள். ஊரடங்கால் ஹாஸ்டலில் உள்ள மகளை வீட்டிற்கு அழைத்துவர முடியாதது, இபாஸ், மாஸ்க் என கொரோனா காலம் நம் கண் முன்னே விரிகிறது. ஒளிப்பதிவாளரான சானு ஜான் வர்கீஸ் இந்த படத்தை தனது முதல் படமாக இயக்கியுள்ளார். இவர் விஸ்வரூபம் படத்தின் ஒளிப்பதிவாளர். படத்தின் முதல்பாதி கதாபாத்திரங்களை அவசரமில்லாமல் மெல்ல மெல்ல விவரிக்கிறது. இடைவேளை வரையுமே படத்தில் எந்த பதட்டமும், ட்விஸ்டும் பரபரப்பும் இல்லை.
இடைவேளைக்கு பிறகு அதிகமாக இறுக்காமல் ஒரு முடிச்சைப் போட்டு பின்னர் அதனை மெல்ல அவிழ்க்கிறார்கள். ஒரு நாவலை வரி வரியாக படிப்பது போலவே இருக்கிறது முழுப்படமும். வழக்கமான சினிமா ரசிகர்களை கொட்டாவி விட வைத்துவிடும் வேகம். இது வெகுஜன சினிமாவாக எடுக்கப்படவில்லை. மலையாளத்தில் அவ்வப்போது இதுமாதிரியான திரையில் ஓடும் நாவல்கள் எடுக்கப்படுகின்றன. அதிக உள்மடிப்புகள் கொண்டதாகவும், சின்ன சின்ன உரையாடல்கள், நிஜ ஒலிகள், மெளனங்கள் என கேரள கிராமத்துக்குள் ஒரு கேமராவை வைத்துவிட்டு வந்தது போல நகர்கின்றன காட்சிகள்.
நடிகை பார்வதியின் நடிப்புப் பசிக்கு இந்த படத்தில் இரை இல்லை. மிகச்சாதாரணமாக வந்து போகிறார். ஆனாலும் வழக்கம்போல தன்னுடைய இயல்பான நடிப்பால் கவர்கிறார். பிஜுவும், சராபுதீனும் படத்தை நகர்த்தி செல்கிறார்கள். நடிப்பில் தரம், இயல்பு.
ஏற்கெனவே குறிப்பிட்டது போல மெல்ல நகரும் காட்சிகள் நமக்கு நாவலை வரி வரியாய் படிக்கும் உணர்வைத் தருவது, அதன் வேகமும் அனைத்து ரசிகர்களையும் கவராது. வெகுஜன சினிமாவுக்கான பரபரப்பும், வேகமும், சத்தமும் இந்த படத்தில் இல்லை. ஒரு நாவலை திரையில் படிக்கும் பொறுமை இருந்தால் ஆர்க்கரியாம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கலாம். ஆர்க்கரியாம்?
ரத்தமும் சதையுமாய் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் - எப்படி இருக்கிறது கள?