Lift Movie Review: தமிழில் வெளியான ஹாரர் திரைப்படங்களில் இருந்து பெருமளவில் வித்தியாசமாகத் தனித்து நிற்கிறது `லிப்ட்’. கார்ப்பரேட் உலகின் நெருக்கடியில் பணியாற்றும் ஐ.டி. இளைஞர்கள் இருவர் ஐ.டி நிறுவனத்தின் கட்டிடத்திற்குள் சிக்கிக் கொள்வதும், அதன் பின்னணியில் நிகழும் அமானுஷ்ய நிகழ்வுகளையும் வைத்து உருவாகி, இறுதியில் தற்காலத்தின் மிக முக்கிய பிரச்னை ஒன்றைக் க்ளீஷேவான சோசியல் மெசேஜ் வடிவத்தில் சொல்லியிருக்கிறது இந்தப் படம். 


சென்னைக்கு மாற்றலாகி, டீம் லீடராகப் பொறுப்பேற்க முதல் நாள் அலுவலகம் வரும் குருவுக்கும் (கவின்), அங்கு ஏற்கனவே ஹெச்.ஆராகப் பணியாற்றும் ஹரிணி (அம்ரிதா) ஆகிய இருவருக்கும் இடையே கசப்பான குட்டி ஃப்ளாஷ்பேக் ஒன்று இருக்கிறது. எனினும், ஹரிணி குருவைப் பிடித்திருப்பதாக சொல்ல, குரு ஹரிணியை நிராகரிக்கிறான். எதிர்பாராத விதமாக, மேலிடத்தில் இருந்து குருவை நள்ளிரவு வரை பணியாற்ற உத்தரவிட, குரு அந்தக் கட்டிடத்திலேயே இருக்கும் சூழல் உருவாகிறது. அதன்பின் நிகழும் ஹாரர் சம்பவங்களால், குருவால் கட்டிடத்தை விட்டு வெளியேற முடியாதபடி ஆகிறது. அதே கட்டிடத்தில் ஹரிணியும் சிக்கிக் கொண்டிருக்க, இருவரும் எப்படி தப்பித்தார்கள், அந்தக் கட்டிடத்தின் பின்னணி என்ன என்பதையும் மீதிக்கதையில் பேசியுள்ளது `லிஃப்ட்’.



அறிமுக இயக்குநர் வினீத் வரபிரசாத் மிக முக்கியமான சமூகப் பிரச்னையை ஹாரர் திரைக்கதையில் இணைத்திருக்கிறார். தமிழில் பிற படங்களில் இருந்து வேறுபட்டு, ஹாரர் வகைப் படங்களுக்கு நியாயம் சேர்க்க முயன்றுள்ளார் வினீத். அதற்காக அவரைப் பாராட்டலாம். ஆனால் ஹாரரும், அவர் குறிப்பிடும் பிரச்னையும் இணையும் இடம் பலவீனமாக அமைக்கப்பட்டு, அவர் பேசியிருக்கும் பிரச்னை இடைச்செருகலாக மாறியிருக்கிறது. அழகான கார்ப்பரேட் கட்டிடத்தை அச்சமூட்டுவதாக மாற்றும் பணியைச் சிறப்பாக  செய்திருக்கிறார்கள் கலை இயக்குநர் எம்.எஸ்.பி.மாதவன், ஒளிப்பதிவாளர் எஸ்.யுவா ஆகியோர். பல இடங்களில் பயமுறுத்தியிருக்கும் ஜி.மடாவின் படத்தொகுப்பு சில இடங்களில் காணாமல் போகிறது. பிரிட்டோ மைக்கேலின் `இன்னா மயிலு’, `ஹேய் ப்ரோ’ ஆகிய இரு பாடல்களில் துள்ளலாக இருக்கும் இசை, ஹாரர் படத்திற்கேற்றவாறு மாறி பலம் சேர்த்திருக்கிறது.


கவின் தன் வேடத்திற்கேற்ற நடிப்பைச் சிறப்பாக வழங்கியிருக்கிறார். சில இடங்களில், விஜயைப் போல நடிக்க முயன்றாலும், நடிப்பில் குறையேதும் இல்லை. அம்ரிதா, அப்துல் எனப் பலரும் தங்கள் பங்களிப்பை வழங்கியிருக்கின்றனர். 



கார்ப்பரேட் நிறுவனங்களில் நிகழும் உழைப்புச் சுரண்டல் குறித்து பெரிதும் பேசப்படாத நிலையில், அதனை மையப்படுத்தியிருக்கிறது `லிஃப்ட்’. எனினும் அதனை ஹாரருக்குள் நுழைப்பதில் சிக்கல் தென்படுகிறது. மேலும், ஹாரர் அம்சங்களிலும் ஏகப்பட்ட லாஜிக் பிழைகள். பேய்கள் ஏன் கவினையும் அம்ரிதாவையும் துரத்துகின்றன என்ற படத்தின் மிக முக்கியமான கேள்விக்குப் பதில் சரியாக விளக்கப்படவில்லை. அதுவே படத்தின் மிகப்பெரிய பலவீனமாக இருக்கிறது. 


இறுதிக்காட்சிகளில் சோசியல் மெசேஜ் பாடம் நடத்தாமல் இருந்திருந்தால், தமிழின் மிகச்சிறந்த ஹாரர் படங்களுள் ஒன்றாக `லிஃப்ட்’ இடம்பெற்றிருக்கும். 


`லிஃப்ட்’ படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ளது.