பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் Dream Warrior Pictures நிறுவனத்தின் கீழ் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான் சுல்தான். கார்த்தி நாயகனாக அதிரடி காட்ட தமிழில் முதன்முதலில் களமிறங்கியுள்ளார் க்யூட் நடிகை ராஷ்மிகா மந்தனா. நெப்போலியன், லால், சதிஷ், யோகிபாபு, பொன்வண்ணன் மற்றும் நடிகை அபிராமி உட்பட பலர் இந்த படத்தில் நடித்திருக்கும் ஸ்டார் கலவை சுல்தான். கிராம பின்னணியில் கதையம்சத்தை கையாண்டுள்ளார் இயக்குநர் பாக்கியராஜ்.





கிராமத்து தாதாவாக தனக்கே உரித்தான கம்பீரமான தோற்றத்துடன் காட்சியளிக்கிறார் நெப்போலியன். தாதாவான நெப்போலியனுக்கு விசுவாசமான ஒரு ரவுடிக்கூட்டம். சிறுவயதிலேயே தாயை இழந்த கார்த்தி தந்தையின் நிழலில் அவருடைய ரவுடித்தனத்தை பின்பற்றியே வளர்ந்து வருகிறார். ஒரு கட்டத்தில் தந்தை மரணிக்க அந்த ரவுடி கூட்டத்திற்கு அடுத்த தலைவனாக களமிறங்குகிறார் கார்த்தி. அதேபோல தந்தையின் இறுதிக்காலம் வரை அவரோடு கூட இருந்த அந்த ரவுடி கும்பலின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் நினைக்கிறார்.




ஹீரோவுக்கு கூடுதல் வேலையைக் கொடுக்க ஒரு பிரச்னையோடு வருகிறார் வில்லன். கார்த்தியின் ஊரில் விவசாயம் செய்யவிடாமல் தடுக்க வருகிறது ஒரு நிறுவனம். (தமிழ் சினிமாவின் விவசாய சீசனா இது?) அந்த நிறுவனத்தை தனது ரவுடி கும்பலை (அண்ணன்களை) கொண்டு விரட்டியடித்தாரா சுல்தான்? மக்களையும் விவசாயத்தையும் காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை. அப்பாவுக்கும் மகனுக்கும் உற்ற நண்பனாக வந்து தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் லால். யோகிபாபுவும் சதீஷும் காமெடியில் ஸ்கோர் செய்ய, முதன்முதலில் தமிழில் களமிறங்கியுள்ள ராஷ்மிகாவிற்கு பலமான கதாபாத்திரம் இல்லாமல் தவிக்கிறார். 




 படத்தின் மிகப்பெரிய பலம் யுவனின் பி.ஜி.எம்தான். பாடல்களும் ரசிகர்களை திரையரங்குகளில் நடனமாடவைக்கிறது. என்றுமே யுவன், யுவன்தான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். மிகப்பெரிய நடிகர் பட்டாளத்தை மிக நேர்த்தியாக கையாண்டுள்ளார் இளம் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன். படத்தின் நீளம் ரசிகர்களின் எனர்ஜியை சற்று குறைக்கிறது என்பது மைனசாக இருந்தாலும் கார்த்தியின் ஆக்ஷன் கலந்த நடிப்பு அதை கொஞ்சமாக மறக்கடிக்கிறது. மொத்தத்தில் கார்த்தியின் சுல்தான் காமெடி, ஆக்ஷன், ரொமான்ஸ் கலந்த ஒரு பக்கா கமர்ஷியல் பேக்கேஜ்.