நடிகர் விஷ்ணுவிஷால் மற்றும் தெலுங்கு நடிகர் ரவிதேஜா ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கும் திரைப்படம் கட்டா குஸ்தி. கதாநாயகனாக விஷ்ணுவிஷாலே நடித்திருக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக பொன்னியின் செல்வனில் பூங்குழலியாக, நம்மை கிறங்கடித்த  ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார்.


இவர் தவிர நடிகர்கள் முனீஸ்காந்த், கருணாஸ், கார்த்திக் சுப்புராஜின் தந்தையான கஜராஜ் என பல நடிகர்கள் நடித்துள்ளனர். இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கி இருக்கும் இந்தப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து இருக்கிறார். 


 


 


                 


கதையின் கரு 


சிறுவயதிலேயே அப்பா அம்மாவை இழந்த வீராவுக்கு ( விஷ்ணுவிஷால்) ஊர் பஞ்சாயத்து தலைவராக இருக்கும் கருணாஸூம், அவர் சந்திக்கும் பிரச்னைகளும்தான் உலகம். அடிப்படையிலேயே பெண் என்பவள் ஆணுக்குள் கீழ்தான், அவள் எப்போதும் ஆணுக்கு அடங்கி இருக்க வேண்டும் என்ற சிந்தனையோடு இருக்கும் கருணாஸ், அதை வீராவுக்கும் புகுத்துகிறார். 


இந்த நிலையில்தான் தனக்கு வரும் பெண் தன்னை விட அதிகம் படித்திருக்க கூடாது. முடி நீளமாக இருக்க வேண்டும் என பல கண்டிஷன்களோடு வீராவுக்கு பெண் தேடும் படலம் நடக்கிறது. அப்படியே கட் செய்தால், கட்டா குஸ்தி கற்று போட்டிகளில் பதக்கங்களை வென்று, அந்த கனவை சுமந்து இருப்பதாலேயே மாப்பிள்ளை கிடைக்காமல் திணறி கொண்டிருக்கிறது கீர்த்தியின் ( ஐஸ்வர்யா லட்சுமி) குடும்பம்.


இந்த நிலையில் கீர்த்தியின் சித்தப்பா (முனீஷ்காந்த்) சில பல பொய்களை சொல்லி வீராவுக்கு கீர்த்தியை மண முடித்து வைக்கிறார். இதற்கிடையே பிரச்னை ஒன்றின் வாயிலாக, முனீஷ்காந்த் சொன்ன பொய்கள் வீராவுக்கு தெரிய வர, அதன் பின்னர் என்ன நடக்கிறது?  கீர்த்தியின் கட்டா குஸ்தி கனவு பலித்ததா? இருவரும் இணைந்து வாழ்ந்தார்களா? உள்ளிட்டவைகளுக்கான பதில்கள்தான் கட்டா குஸ்தி படத்தின் கதை!


எப்.ஐ.ஆர் படத்திற்கு பிறகு விஷ்ணு விஷாலுக்கு நல்லதொரு படமாகவே வந்திருக்கிறது கட்டா குஸ்தி. சொகுசுசாகவே வாழ்ந்து, தெனாவெட்டாக சுற்றும் வீரா கதாபாத்திரத்திற்கு நன்றாகவே பொருந்தி இருக்கிறார் விஷ்ணு. படத்தின் சில காமெடி காட்சிகளில் அவரது காமெடித்தனம் முழுமையாக வொர்க் அவுட் ஆகவில்லை என்றாலும், பல இடங்களில் நன்றாகவே வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. 


படத்தில் பெயருக்குத்தான் விஷ்ணு கதாநாயகன்.. ஆனால் உண்மையில் படத்தின் கதாநாயகன் யார் என்றால் படத்தின் கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமிதான். பொன்னியின் செல்வனில் பூங்குழலியாக கிறங்கடித்த ஐஸ்வர்யா, இதில் ஆக்‌ஷனில் அதகளம் செய்து இருக்கிறார்.




 
முதல் பாதியில் தன் குடும்பம் சொன்ன பொய்யை மறைக்க, அவர் செய்யும் தில்லாலங்கடிகள், தன் கணவன் உயிருக்கு ஆபத்து என்றவுடன் ரெளடிகளை காட்டுமேனிக்கு பொழந்து கட்டுவது உள்ளிட்டவை தியேட்டரில் அப்லாஸை அள்ளுகிறது. அப்படியே இராண்டாம் பாதியில் தனது சுயமரியாதைக்கு ஒரு இழுக்கு என்றவுடன் வீராவின் மாமாவை கன்னத்தில் அறைவது, கணவனுக்கு எதிராக போட்டியில் இறங்குவது உள்ளிட்டவற்றிலும் தூள் கிளப்பியிருக்கிறார். இவை தவிர பெண்களை அடிமைகளாக நினைக்கும் கருணாஸ், சித்தப்பாவாக முனீஷ்காந்த், கருணாஸின் மனைவி உள்ளிட்ட கதாபாத்திரங்களும் கவனம் ஈர்த்து இருக்கின்றன. ஆனால் இரு வில்லன்களையும் நம்மால் வில்லன்களாக ஒத்துக்கொள்ள முடியவில்லை. 




இயக்குநர் செல்ல அய்யாவு அனைவரும் சிரிக்கும் படியான கதையை படமாக்கி இருக்கிறார். படத்தில் ஓரளவிற்கு எல்லா காமெடிகளும் வொர்க் அவுட் ஆகியிருந்தாலும், முதல் பாதியில் காமெடியை அளவுக்கு அதிகமாக வைத்திருந்ததை தவிர்த்து இருக்கலாமோ என்ற எண்ணம் வந்தது. காரணம்..  ஒரு கட்டத்தில் எப்பப்பா கதைக்குள்ள போவீங்க என்ற எண்ணத்தை அது வரவழைத்து விட்டது.


இராண்டாம் பாதியில் வீரா கதாபாத்திரம்  வாயிலாக,பெண்களை இன்னமும் அடிமைகள் என நினைத்து சுற்றிக்கொண்டிருக்கும் ஆண்களுக்கு சொன்ன மெசெஜ்ஜூம், அதை சார்ந்து எழுதப்பட்ட வசனங்களும் சிறப்பு. ஆனால் விஷ்ணு விஷாலின் கதாபாத்திரத்தை இன்னும் அழுத்தமாக எழுதியிருக்கலாம். ஜஸ்டின் பிரபாகரனின் இசை ஓகே ரகத்திற்கும் கீழ்தான். இருப்பினும் இவை எல்லாவற்றையும் தாண்டி, ஒரு கமர்சியல் காமெடி என்டர்டெய்னராக கட்டா குஸ்தி ஜெயிக்கவே செய்திருக்கிறது.