துல்கர் சல்மான், ராஜ்குமார் ராவ், குல்ஷன் தேவையா, டி.ஜே. பானு உள்ளிட்டவர்கள் நடித்துள்ள கன்ஸ் & குலாப்ஸ் இணையத் தொடர் நெட்ஃப்ளிக்ஸில் கடந்த 18-ஆம் தேதி வெளியாகி உள்ளது. தி ஃபேமிலி மேன் என்கிற புகழ்பெற்ற தொடரை இயக்கிய ராஜ் & டிகே ஆகிய இருவர் இந்தத் தொடரை இணைந்து இயக்கியுள்ளார்கள். நகைச்சுவையும் காதலும் நிறைந்த போர்க்களமாக அமைந்துள்ளது கன்ஸ் & குலாப்...
கப்பு முக்கியம் பிகிலு..
1990-களில் குலாப்கஞ்ச் என்கிற கிராமத்தை மையமாகக் கொண்டு நடக்கிறது இந்த மொத்த தொடரின் கதையும். மருத்துவ பயன்பாட்டிற்காக அபின் விளைவிக்க விவசாயிகளுக்கு அனுமதி அளித்திருக்கிறது. ஆனால் அரசாங்கத்திற்கு ஒரு சிறு அளவை மட்டுமே உற்பத்தி செய்துவிட்டு கிராமத்தில் இருக்கும் மொத்த விவசாயிகளையும் தான் சொந்தமாக வியாபாரம் செய்ய அபின் விளைவிக்க வைக்கிறார் குலாப்கஞ்சின் மிகப்பெரிய தாதாவான காஞ்சி. பல போராட்டங்களுக்குப் பிறகு இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. தனக்கு பிறந்த தனது மகனிடம் தனது தொழிலை ஒப்படைத்து விட வேண்டும் என்பதே இவரது ஆசை. ஆனால் விதி அவருக்கு வேறு திட்டங்கள் வைத்திருக்கிறது.
நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்
இந்த அபின் கடத்தலை விசாரித்து அதை தடுத்து நிறுத்த அதே ஊருக்கு தனது குடும்பத்துடன் வந்து சேர்கிறார். போதை பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அர்ஜுன் வர்மா (துல்கர் சல்மான்). நேர்மையான தனது குணத்திற்காக ஏற்கனவே அதிகார பலத்தில் இருப்பவர்களால் ஏமாற்றப்பட்டு வந்திருக்கும் அர்ஜுன் எந்த வித பலனும் இல்லாமல் தனது வேலையை நேர்மையாக செய்கிறார். இதற்காக அவர் ஊரில் இருக்கும் பெரிய பெரிய தாதாக்களையும் பகைத்துக் கொள்கிறார். இவ்வளவு நேர்மையாக இருக்கும் ஒருவர் தானும் ஏதாவது தப்பு செய்யாமல் இருக்க வேண்டும் இல்லையா? சபலமடையாத மனிதர்கள் இருக்கிறார்களா. அந்த சபலமே அவரது நேர்மைக்கு எதிராக வந்து நிற்கிறது.
ஸ்பானர் டிபு
காஞ்சியின் மிக முக்கியமான அடியாளான டைகர் பாபுவின் மகன் டிபு என்கிற மெக்கானிக். பல பேரைக் கொன்ற தனது தந்தையின் இறப்பில் கூட, அவனால அழ முடிவதில்லை. தனது அப்பாவைப்போல் மட்டும் தான் ஆகிவிடக்கூடாது என்பதே டிப்புவின் ஒரே நோக்கம். அதே ஊரில் இருக்கும் சந்திரலேகா என்கிற ஆங்கில ஆசிரியையைக் காதலித்து வருகிறான். ஆனால் விதி அவனை அவனது அப்பாவின் பாதையில்தான் அழைத்துச் செல்கிறது. டிப்பு என்கிற இவனது பெயருக்கு முன்னதாக ஸ்பானர் என்கிற அடைமொழி ஏன் வருகிறது தெரியுமா?
ரோஜாப்பூக்கள்
தனக்கு பாடம் எடுக்கும் டீச்சரை காதலிக்கும் ஒருவன், காதல் செய்பவர்களுக்கு காதல் கடிதங்கள் எழுதி தரும் ஒருவன் என மொத்தம் மூன்று பள்ளி நண்பர்கள். ஒற்றுமையாக இருக்கும் இந்த மூன்று பேரின் நட்பு ஒரு பெண்ணின் வருகையால் சவால்களை எதிர்கொள்கிறது.
நான்கு முனைகளில் இருந்தும் இந்த மனிதர்கள் ஒரே கதைக்குள் கோர்க்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களின் வாழ்க்கை ஒருவரோடு ஒருவர் எப்படி சந்தித்துக் கொள்கின்றன பின் எப்படி இவர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவுகிறார்கள் என்பதே க்ளைமேக்ஸ். எல்லாவற்றையும் விட சுவாரஸ்யமான ஒருவர் உள்ளார் என்றால் இவர்கள் அனைவரின் வாழ்க்கையிலும் வரும் ஒரே வில்லன் ஆட்மாராம் (குல்ஷன் தேவைய்யா).
1990-களில் நடப்பதாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தத் தொடர் டைட்டில் கார்ட், மற்றும் பின்னணியில் ஓடும் பழைய இந்திப் பாடல்கள் மட்டுமே அந்த காலத்திற்கான அம்சங்களாக இருக்கின்றன. விறுவிறுப்பான ஒரு ரெட்ரோ உணர்வைக்கொடுக்க முயற்சித்தாலும் 7 எபிசோடுகளைக் கொண்ட சீரிஸ் ஒரு கட்டத்திற்கு மேல் சுவாரஸ்யம் தேங்கி பூங்காக்களில் சுற்றும் ரயில் போல் லைட்டாக போர் அடிக்கிறது. பின் கடைசி எபிசோடில் திடீரென்று டிராக்கை விட்டு பிய்த்துக்கொண்டு ஓடுகிறது.
இத எதிர்பார்க்கவில்லை
எதிர்பார்க்காத ஒரு விஷயம் என்றால் தொடக்கத்தில் இருந்தே சீரியஸாக இல்லாமல் எல்லா பயங்கரமான காட்சியின்போதும் வெடித்து சிரிக்கும் வகையிலான நகைச்சுவைக் காட்சிகள் தொடர்ந்து இருந்து வந்ததே. இன்னும் சொல்லப்போனால் முழுவதும் காமெடியான ஒரு தொடராக எடுப்பதற்கான அத்தனை சாத்தியங்களும் இதில் இருக்கவும் செய்கின்றன.