பிரபல இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர்கள் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, யோகிபாபு, கிங்க்ஸ்லி, பிரதாப் போத்தன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘ காஃபி வித் காதல்’. இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார்.
கதையின் கரு:
ஜீவா, ஜெய், ஸ்ரீ காந்த் ஆகிய மூன்று பேரும் அண்ணன் தம்பிகள், டிடி தங்கை. கல்யாணம் முடிந்த ஸ்ரீகாந்துக்கு மனைவியின் மீது மோகம் குறைந்து விட, அவர் மனம் வெளியில் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது. இன்னொருபக்கம், நல்ல வேலையில் வசதியாக இருக்கும் ஜீவாவை, அவருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் ஐஸ்வர்யா ஏமாற்றி கழற்றி விடுகிறார்.
மற்றொரு பக்கம், சிறுவயதில் இருந்து, தன்னை உருகி உருகி காதலித்த நண்பியின் காதலை புரிந்து கொள்ளாமல், அவருக்கு கல்யாணம் ஆகப்போகிறது என்று தெரிந்தவுடன், அவரின் காதலை புரிந்து கொள்ளும் ஜெய், அவர் எப்படியாவது தனக்கு கிடைக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார். ஒரு வேளை இந்த முயற்சி தோல்வியடையும் பட்சத்தில், ஊட்டியில் ஹோட்டல் ஆரம்பிக்க வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற தேவைப்படும் நில உரிமையாளரின் மகளை மணக்கவும் ப்ளான் செய்து வைத்திருக்கிறார். இதற்கிடையே, நில உரிமையாளரின் மகளுக்கும், சோகத்தில் இருக்கும் ஜீவாவுக்கு இடையே காதல் முளைக்க, என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறார் ஜீவா.
இதனிடையே அவருக்கு அவசர அவசரமாக வீட்டில் திருமண ஏற்பாடு செய்ய, அந்த பெண்ணை ஜீவாவிற்கு கிடைக்கவிடாமல் சதி செய்கிறார் ஸ்ரீகாந்த். ஸ்ரீகாந்த் சதி செய்ய காரணம் என்ன? ஜெய்யின் காதல் என்ன ஆனது?.. ஜீவாவுக்கு திருமணம் நடந்ததா இல்லையா? போன்ற கேள்விகளுக்கான பதில்கள்தான் காஃபி வித் காதல் படத்தின் மீதிக்கதை.
சுந்தர் சியின் டெம்ப்ளேட்
கிளாமர், பாடல், காமெடி என தன்னுடைய வழக்கமான டெம்ப்ளேட் ரூட்டையே இதிலும் பின்பற்றி கதை சொல்லி இருக்கிறார் இயக்குநர் சுந்தர் சி. ஆனால் கதை இதுதானா என்று கணித்து முடிப்பதற்குள்ளே, முதல்பாதி முடிந்து விட்டது. சமீபகாலமாக வந்த சுந்தர்சியின் சில படங்களில் இடம்பெற்ற காமெடிகள் பார்த்து பழகிபோனவையாக இருந்தாலும், அவை கொஞ்சம் ரசிக்கும் படியாக இருந்தது. ஆனால் அது காஃபி வித் காதல் படத்தில் முழுக்க முழுக்க மிஸ் ஆகி இருக்கிறது.
படத்தில் நடிப்பதற்கு ஒரு நட்சத்திரப்பட்டாளமே இருந்தாலும், எந்தக்கதாபாத்திரமுடனும் நம்மால் கனெக்ட் ஆக முடியவில்லை. சரி என்னதான் நடக்கப்போகிறது என்று இரண்டாம் பாதியை பார்க்க உட்கார்ந்தால், அதன் பின்னர் இடம் பெற்ற எமோஷனும், காமெடிகளும் கொஞ்சம் கூட வொர்க் அவுட் ஆகவில்லை. கஷ்டப்பட்டே சிரிக்க வேண்டி இருந்தது. குறிப்பாக யோகிபாபுவின் காமெடி ஏமாற்றத்திலும் ஏமாற்றம். பாடலிலும் சரி, பின்னணி இசையிலும் சரி இரண்டிலுமே யுவனின் முத்திரை இல்லை. ஆக மொத்தத்தில் காமெடியையும், காதலையும் வைத்து நம்மை சிரிக்க வைக்கும் காஃபி வித் காதலின் முயற்சி கடைசியில் தோல்வியிலேயே முடிந்திருக்கிறது.