தேசிய விருது 2024
கடந்த ஆண்டு திரைப்பட விழாக்களில் வெளியாகி பின் ஓடிடி தளத்திற்கு வந்த மலையாளப் படம் ஆட்டம். ஆனந்த் ஏகர்ஷி இந்தப் படத்தை இயக்கியுள்ள இப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டம் படத்தின் முழு விமர்சனம் இதோ
ஆட்டம் (Aattam)
13 நபர்களைக் கொண்ட ஒரு நாடகக் குழு. இந்த நாடகக் குழுவில் அஞ்சலி ஒருவரைத் தவிர (ஜரின் ஸிஹாப்) மற்ற அனைவரும் ஆண்கள். அஞ்சலிக்கு பாலிய பருவத்தில் இருந்து நண்பனாகவும் தற்போது அவளது காதலனாக இருப்பவன் வினய். நாடகத்தில் நடிப்பவர்கள் அனைவரும் பகுதி நேரமாக ப்ளம்பர் , செஃப் , டிராவல்ஸ் என ஏதோ ஒரு வேலை செய்து வருபவர்கள். இதில் கொஞ்சம் செல்வாக்கான ஒருவர் என்றால் நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ரவி.
சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்த காரணத்தால் ரவி பரவலாக அறியப்படுபவனாக இருக்கிறான். தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி தங்கள் நாடகத்தை அரங்கேற்ற சில வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதால் முக்கிய கதாபாத்திரம் அவனுக்கு கொடுக்கப்படுகிறது. பல வருடங்களாக இதே நாடகக் குழுவில் இருக்கும் வினய்க்கு இது பிடிப்பதில்லை. இப்படியான நிலையில் இந்த குழுவின் நாடகத்தைப் பார்த்து பிடித்துபோய் ஒரு வெள்ளைக்கார தம்பதிகள் தங்களது ரெஸார்ட்டில் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்கிறார்கள். அஞ்சலில் உட்பட 13 நபர்களும் இந்த பார்ட்டியில் கலந்துகொள்கிறார்கள்.
குடி, ஆட்டம் , பாட்டம் , வம்புச் சண்டைகள் என செல்லும் இந்த பார்ட்டி முடிந்த அடுத்த நாள் அதிகாலை அஞ்சலி யாரிடமும் சொல்லாமல் கிளம்பி விடுகிறாள். விசாரிக்கையில் தான் தூங்கிக் கொண்டிருந்தபோது தன்னை தகாத முறையில் யாரோ தொட்டதாக அவள் வினயிடம் கூறுகிறாள். அந்த நபரின் முகத்தை தான் பார்க்கவில்லை என்றும் அவள் கூறுகிறாள். அஞ்சலியிடம் பாலியல் சீண்டல் செய்த அந்த ஒரு நபர் யார் என்பதை விசாரிக்கும் நோக்கில் கதை நகர்கிறது.
விமர்சனம்
படத்தின் பெரும்பகுதி வசனங்களால் மட்டுமே நகரும் வகையான படம் ஆட்டம் . இதனால் சஸ்பென்ஸ் , த்ரில் எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு இந்தப் படம் கொஞ்சம் சோர்வை அளிக்கலாம். ஆனால் இந்தப் படத்தின் நோக்கம் சுவாரஸ்யத்தைக் கடந்த ஒன்றை விவாதிப்பதே. ஒரு சமூகத்தில் ஒரு பெண் தான் பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாக கூறும் போது அதனை ஆண்கள் அந்த பெண்ணின் காதலன் உட்பட எப்படி கையாள்கிறார்கள். அவளிடம் என்ன மாதிரியான கேள்விகளை கேட்கிறார்கள் என்பதை பலகோணங்களில் இருந்து அராய்கிறது இந்தப் படம்.
படத்தில் இறுதிவரை யார் குற்றவாளி என்பதை தெரிவிக்காமல் ஒரு கட்டத்திற்கு மேல் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சந்தேகப் பட வைக்கிறார் இயக்குநர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த 12 ஆண்களில் யாரை சந்தேகப்பட்டாலும் அவர் அந்த குற்றத்தை செய்திருப்பார் என்று ஏதோ ஒரு வகையில் நம்ப முடிகிறது.
மொத்த கதையையும் நியாயப்படுத்தும் வகையில் கிளைமேக்ஸ் அமைந்துள்ளது. எல்லா விஷயங்களையும் வெளிப்படையாக சொல்லாமல் பார்வையாளர்களின் புரிதலுக்கு சில விஷயங்களை சொல்லாமல் விட்டிருக்கலாம் என்பதே படத்தின் மீதான விமர்சனமாக வைக்கப்படுகிறது. ஓடிடி ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தலாம்.