இதுவரை பூவாகவும், புன்னகையாகவும் பார்த்த தமன்னாவா இது? என்கிற மாதிரி புதுசாக வந்திறங்கியிருக்கிறார் தமன்னா. ஆம், பவுன்சர் தமன்னாவே தான் இது. இந்தியில் தயாரான பப்ளி பவுன்சர் திரைப்படம் கடந்த வெள்ளியன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியானது. 


வடக்கில் திறமையான மல்யுத்த வீரர்களை உருவாக்கும் கிராமத்தில், அதே மிடுக்கோடும் துடிப்போடும் வளரும் இளம் பெண் தமன்னா. உடல் மொழி, பேச்சு மொழி என எல்லாமே தரை லோக்கல் மற்றும் தடாலடியாக இருக்கும். அவரது ஊரில் பணியாற்றிய ஆசிரியை ஒருவரின் மகனை பார்த்ததும் தமன்னாவுக்கு காதல். அவனுக்காக டில்லி செல்ல விரும்புகிறார்.






தமன்னாவை விரும்பும் உள்ளூர் மல்யுத்தவீரர், அவரை மணக்க வீட்டாரிடம் சம்மதம் பெறுகிறார். இதற்கிடையில் அவர் பவுன்சராக பணியாற்றும் பாரில், பெண் பவுன்சர் தேவைப்பட, தன் காதலனை சந்திப்பதற்காக அந்த பணியில் சேர்கிறார் தமன்னா. வந்த இடத்தில், காதல் பொய்த்து போக, தனது மோசமான நிலையை மாற்ற முயற்சிக்கிறார் தமன்னா. 


மீண்டும் காதல் சேர்ந்ததா, தமன்னாவின் நோக்கம் நிறைவேறியதா என்பது தான் கதை. இன்னும் சொல்ல வேண்டுமானால், நாம் சொல்லி முடித்ததும் மட்டும் தான் கதை. 2 மணி நேரம் கூட இல்லாத படம். ஒரு மணி நேரம் 56 நிமிடத்தில் முடிகிறது. சொல்ல வந்ததை சொல்லி முடித்துவிட்டார்கள். இப்படியும் படம் எடுக்கலாம். முடிந்து விட்டதா என்பதைப் போல கடிகாரத்தை பார்க்க வைத்துவிட்டார்கள். 


பெரிய திறமையான கதையெல்லாம் இல்லை. ஆனால், திரைக்கதையில் மெனக்கெட்டிருக்கிறார்கள். காமெடி, காதல், சோகம், வேகம் என எல்லாமே கலந்து தந்திருக்கிறார்கள். தமன்னாவிற்கு தனி அப்ளாஷ் தரலாம். ஒரிஜினல் பவுன்சராகவே அவர் தெரிகிறார். காதலனாக வரும் அபிஷேக் பஜாஜ், தந்தையாக வரும் சவுரவ் சுக்லா, உள்ளூர் பவுன்சராக வரும் ஷகில் வைட் என எல்லாருமே தத்ரூபமாக நடித்திருக்கிறார்கள். 






மதூர் பண்டர்கரின் தான் நினைத்ததை இயக்கியிருக்கிறார். அதில் ஜெயித்தும் இருக்கிறார். தன்சிக் பக்ஜி மற்றும் கரன் மல்ஹோத்ராவின் இசையும், பின்னணியும் ரசிக்கும்படியாக உள்ளது. ஸ்டார் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இத்திரைப்படம், கலகலப்பாக, குடும்பத்துடன் பார்க்கும் படியான ஒரு பொழுதுபோக்கு திரைப்படம்.