‛ஆடி அடங்கும் வாழ்க்கை’ என்பார்கள். எத்தனை ஆட்டம் போட்டவரும், பிந்நாளில் தன் வாழ்க்கை முடியும் தருவாயில், அதை உணர்ந்து உள்ளத்தால் திருந்தி வாழ முயற்சிப்பார்கள். அல்லது, செய்த பாவங்களை எண்ணி வருந்தி வாழ்வார். இங்கு ஒருவர், ‛பெண் சோக்கு’ மட்டுமே வாழ்க்கை என்று வாழ்ந்தவர். இடுப்புக்கு கீழே உடல் உறுப்புகள் செயல்படாமல், வீட்டில் முடங்கிக் கிடக்கும் போதும், தீராத ஆசையும், திமிறும், அதாட்டியமும் கொண்ட ஒரு காட்டுமிராண்டி தந்தை.


ஒரு கிராமத்தை சேர்ந்த அனைத்து பெண்களையும் தன் வசமாக்கி, பலருக்கு பிறந்த குழந்தைக்கு அந்த தந்தை தான் காரணமாக இருந்திருக்கிறார் என்கிற கொடூரமான பின்னணி அவருக்கு. அதனால் அந்த ஊரே அவரை வெறுக்கிறது. அவர் இறப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறது. உடல் கட்டுமஸ்தான தோற்றத்தால் அவர் செய்த சேஷ்டைகள் மட்டுமல்லாது, கட்டிய மனைவி, மகன், மகள், பேரன், பேத்திகள் என அனைவரிடமும் எரிச்சல் கொட்டும் பேச்சு, துளியும் பாசம் இல்லாத மனம் என இந்த கிரகத்திலேயே இல்லாத ஒரு மனிதராக தெரிகிறார் அந்த தந்தை.






இப்படிப்பட்ட ஒரு குடும்பத் தலைவனை யார் ரசிப்பார்? கணவர் இறப்பது போன்ற கனவு கண்டு, அதை மகிழ்வோடு மருமகளிடம் பகிரும் மாமியார், தந்தை இந்த நொடி இறக்கமாட்டாரா, அந்த நோடி இறக்கமாட்டாரா என காத்துக் கொண்டிருக்கும் மகன். ‛தயவு செய்து நீங்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள்... நாங்கள் அவரை முடித்து விடுகிறோம்’ அந்த நபரின் குடும்பத்தாரிடம் கோரிக்கை வைக்கும் கிராமத்தினர் என, ஒருவரின் இறப்பை அவ்வளவு ஆசையாக எதிர்பார்க்கிறது பெருங்கூட்டம். 


ஆனால், அந்த நபரோ, கட்டிலில் படுத்துக் கொண்டே பக்கத்து வீட்டு பெண்ணை சைட் அடிப்பது, தன்னை சந்திக்க வரும் பெண்களை அருகில் அமர வைத்து ரசிப்பது என அழிச்சாட்டியம் செய்து கொண்டிருக்கிறார். தந்தையின் அவப்பெயரால், சமூகத்தில் தன்னால் பெருமையோடு வாழ முடியவில்லை என்கிற விரக்தியோடு தினமும் ரப்பர் தோட்டத்தில் பணிகளை தொடர்கிறார் மகன். 


இதற்கிடையில் தனது சொத்துக்களை மகனுக்கும் மகளுக்கும் தர வேண்டுமானால், அருகில் வசிக்கும் தனது ஆஸ்தான காதலியை தன்னுடன் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார் அந்த தந்தை. ஆசைகள் நிறைவேறினால், ஒருவேளை இறக்க நேரிடும் என்பதால் அதற்கு ஒப்புக்கொள்கிறது குடும்பம். வந்த பெண் என்ன செய்தார்? சொன்னபடி தந்தை சொத்தை தந்தாரா? அவரது இறப்பு நிகழ்ந்ததா? அந்த குடும்பம் என்ன ஆனது? என்பது தான் கதை.


ஒரு அப்பன் எப்படியெல்லாம் இருக்க கூடாது என்பதற்கு சரியான உதாரணமாக நடித்திருக்கிறார் அலன்சியர் லே லாப்ஸ். மது, மாது என அவரின் மோகம், தத்ரூபமாக வெளிப்படுவம், மனைவி, மகன், மருமகளை வாய்க்கு வாய் திட்டித்தீர்ப்பதும், நிஜமான ஒரு கொடூரனை காட்டுகிறார். மகனாக சன்னி வைன். பொறுமையோ பொறுமை என்பார்களே, அந்த மாதிரியான பாத்திரம். தன் தாய்க்கு எதிராக தந்தை செய்யும் கேவலங்களை கண்டு ரத்தம் துடிப்பதும், சாகட்டும் என எதிர்பார்க்கும் தந்தையை, கிராமத்தால் கொல்ல வரும் போது, அவரை பாதுகாக்கும் போதும், ‛நான் நல்ல மகன்’ என்பதை நிரூபிக்கிறார். அவருக்கு மனைவியாக அனன்யா. நாடோடிகள் படத்தில் தூக்கு சட்டியோடு ஓடிக்கொண்டிருந்த பெண்ணா என்று யோசிக்கும் அளவிற்கு, அவ்வளவு இயல்பான நடிப்பு. 


தாயாக வரும் பாலி வல்சன், நடிக்கிறாரா, வாழ்கிறாரா என்பதே கண்டுபிடிக்க முடியவில்லை. நடை, உடை, பாவம் எல்லாமே அப்படியே பொருந்தி நிற்கிறார். மகளாக வரும் கிரேஸ் ஆண்டனி, படத்தில் கலகலப்பிற்கு போதிய பலம் சேர்த்திருக்கிறார். அழு காட்சியாக எடுக்க வேண்டிய ஒரு குடும்பக் கதையை, அந்த உணர்வுகள் குறையாமல் அதே நேரத்தில் நம்மை அழுக விடாமல், குலுங்கி குலுங்கி சிரிக்கும் படியாக சிரிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் மஜூ. வழக்கமான மலையாளப்படம் தான்; ஆனால், அதில் வழக்கத்தை விட அதிகமான எதார்த்தம் இருக்கிறது. மலையாளப்படமான இது, சோனி லைவ் ஓடிடியில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியிருக்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், இது ஒரு பாக்யராஜ் டைப் திரைப்படம்.