இத்தாலியின் குறுகலான போகன்வில்லாக்கள் பூத்த தெருக்களுக்காகவென்றே வடிவமைக்கப்பட்டவை வெஸ்பா ரக வண்டிகள். தரையில் தவழும் திமிங்கிலம் போன்ற வடிவம் மற்றபடி வேறெந்த டிசைனும் இல்லாமல் நூறு வண்டிகளுக்கு மத்தியிலும் தனியாகத் தெரியும் நிறத்தில் தயாரிக்கப்படும் வெஸ்பாக்களுக்கு யார்தான் விசிறியாக இருக்க மாட்டார்கள்?. இப்படியான வெஸ்பா வண்டியைச் சுற்றிதான் அண்மையில் வெளியான ஹாலிவுட் திரைப்படம் லூக்காவின் கதையும் அமைந்திருக்கிறது. 




அனிமேஷன் படங்களுக்குப் பெயர்போன பிக்சர் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறது.பிரபல ஹாலிவுட் திரைப்படமான ’மோனா’ போன்ற முட்டைவிழிக் குட்டிச்சுட்டி உருவக் கேரக்டர்களை உருவாக்குவதற்கு பெயர்போன அந்த நிறுவனம் இந்தப் படத்திலும் அனிமேஷனில் அசத்தியிருக்கிறது. முழுக்க முழுக்க இத்தாலியின் கடல் மற்றும் கடற்கரையோர ஊர்களை மையமாக வைத்து இந்தக் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆழ்கடலின் அத்தனை நீலங்களையும் அனிமேஷனில் காண்பித்து அசத்தியிருக்கிறார்கள். 




கடல் மான்ஸ்டர் இனத்தைச் சேர்ந்த சிறுவன் லூக்கா. கடல் மான்ஸ்டர்களுக்கு மீன் போன்ற உடம்பில் மனிதர்கள் போன்ற கைகால்கள் இருக்கும்.  கடலில் இருந்து வெளியேறி நிலத்துக்கு வரவேண்டும் என்பது சிறுவன் லூக்காவின் ஆசை. அவனுக்கு அல்பர்ட்டோ என்கிற நண்பன் இருக்கிறான். அவனும் ஒரு கடல் மான்ஸ்டர். கடல் மான்ஸ்டர்கள் இருவரும் ஒருநாள் நிலத்துக்கு வருகிறார்கள்.




அங்கே வெஸ்பா வண்டியைப் பார்க்கிறான் சிறுவன் லூக்கா. அதன்பிறகு எப்படியேனும் ஒரு வெஸ்பா வண்டியை வாங்க வேண்டும் அதில் உலகம் சுற்றவேண்டும் என்பது லூக்கா மற்றும்  ஆல்பர்ட்டோவின் கனவாகிறது. சிறுவன் லூக்காவின் வெஸ்பா கனவு நிறைவேறுகிறதா என்பதுதான் மீதிக்கதை. லூக்காவின் அம்மா, அப்பா, பாட்டி..போர்ட்டுரோஸோ கிராமத்தின் மனிதர்கள், வில்லன் விஸ்காண்ட்டி, அங்கே அவன் சந்திக்கும் தோழி கிலியா என கலர்புல் கதாபாத்திரங்கள் படம் முழுக்க இருக்கின்றன.




இந்தக் கதையை உருவாக்குவதற்காக படக்குழு தனி ஆய்வுக்குழு ஒன்றை அமைத்தது. இத்தாலியின் கிராமங்களில் இன்றும் சொல்லப்படும் கதைகளில் இருந்து இந்தக் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. கொரோனா காரணமாக முதன்முறையாக அமெரிக்காவில் அல்லாமல் முழுக்க முழுக்க வெளிநாடான இத்தாலியில் வைத்தே இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஜூன் 18ல் தியேட்டர்களில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பெருந்தொற்று காரணமாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியிட்டிருக்கிறார்கள். 


படம் குறித்துப் பேசியுள்ள அதன் இயக்குநர் என்ரிக்கோ காசரோஸோ, ‘இது முழுக்க முழுக்க பெர்சனல் கதை. என்னுடைய ஃபெஸ்ட் பிரெண்டை நான் என்னுடைய 11 வயதில்தான் கடற்கரையோரம் சந்தித்தேன். அவன் பெயர் அல்பர்ட்டோ. நான் ரொம்ப அமைதி, அவன் சேட்டை...துருதுரு... இப்படியான ப்ரெண்ட்ஷிப்பைக் கதையாக்கனும்னு நினைச்சேன்’ என்கிறார். 


படத்தின் மையக்கருவே ப்ரெண்ட்ஷிப்தான்.    சின்ன வயதில் நமக்குக் கிடைக்கும் ப்ரெண்ட்ஷிப்களுக்கு நம்முடைய வாழ்க்கையின் போக்கையே மாற்றிவிடக் கூடிய சக்தி உண்டு.அவர்களோடுதான் நம் முதன்முதல் கனவுகளை உருவாக்குகிறோம். அப்படியான லூக்கா-ஆல்பர்ட்டோ-கிலியா நட்பை அழகாகச் சொல்லியிருக்கிறது இந்தப்படம். படம் பார்த்துமுடித்ததும் உங்களுடைய அரை டவுசர் காலத்து மணல்வீடு கட்டும், சைக்கிள் டயர் ஓட்டி விளையாடும் நட்புகள் நிச்சயம் உங்கள் நினைவுக்கு வரக்கூடும்.