இன்று (செப்டம்பர் 10 ) உலக தற்கொலை தடுப்பு தினமாக முன்னெடுக்கப்படுகிறது. உலகம் முழுவதும் தினம்தோறும் அதிகரிக்கும் தற்கொலை எண்ணிக்கை, எதிர்கால தலைமுறை குறித்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 13 , 14 வயது குழந்தைகள் , இளைஞர்கள் என சிறகடித்து பறக்க வேண்டிய வயதினர்தான் இப்படியான தற்கொலை முடிவுகளால் மரணிக்கின்றனர். அதற்கு முக்கிய காரணம் மன அழுத்தமும் அது ஏற்படுத்தக்கூடிய விபரீத உணர்வுகளும்தான். எப்போது தற்கொலை எண்ணம் வரும்பொழுது நிகழ்காலத்தையும் கடந்த காலத்தையும் பற்றி யோசிக்கவே கூடாது. எல்லோருக்குமே எதிர்காலம் என்ற ஒன்று உண்டு . கடினமான சூழலை எதிர்கொள்ள இந்த நேரம் சிறப்பானதாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் நிச்சயமாக வாழ்க்கையும் , அனுபவங்களும் , வயதும் எல்லா சூழலையும் கடப்பதற்கான பக்குவத்தை ஏற்படுத்தும் என்பதை மறந்துவிடக்கூடாது.
நண்பர்கள் , உறவினர்கள் என உங்களுக்கு நெருக்கமானவர்கள் சிலர் இதே தற்கொலையால் உயிரிழந்திருக்கலாம். எனக்கு தெரிந்த சிலரே “ நேற்று இரவு கூட எனக்கு கால் பண்ணான்..இப்படி முடிவெடுப்பான்னு நினைக்கல “ , “ ரொம்ப நாளாவே யாரோடையும் அவன் செட் ஆகல...தனியாவே இருந்தான் “ , “ எனக்கு கால் பண்ணான் , கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன் “ இப்படியான வார்த்தைகளை ரிபீட்டடா சொல்ல கேட்டிருக்கிறேன். தற்கொலை என்ணத்தில் இருக்கும் நபர்கள் பெரும்பாலோனோர் யாரிடமாவது ஆறுதல் தேடி அலைவார்கள் , அல்லது தனிமையில் தங்களை கிடத்திக்கொள்வார்கள் . அப்படியானவர்கள் உங்கள் நண்பர்கள் அல்லது நெருக்கமானவர்களாக இருந்தால் அவரின் நலனில் உங்களுக்கு பங்கிருக்கிறது. தற்கொலையை கணிப்பது எப்போதுமே கடினமாக இருந்தாலும், சில எச்சரிக்கை அறிகுறிகளை ஒருவர் கவனிக்கலாம் என்கிறார் மருத்துவர் சிங்.
அறிகுறிகள் :
- யாருடனும் இருக்கவே பிடிக்காது.
- சமூகத்தில் இருந்து தனித்து வாழவே விரும்புவார்கள்
- தோற்றம் மற்றும் சுகாதாரத்தில் மாற்றங்கள்
- தன்னிடம் இருக்கும் பொருட்கள் அல்லது பிடித்தமானவற்றை அடுத்தவர்களிடம் கொடுப்பது.
- mood swings என சொல்லக்கூடிய அதிகப்படியான மனநிலை மாற்றம்.
தற்கொலை என்பது மனநோயா ?
நிச்சயமாக இல்லை என கூறுகின்றனர் மருத்துவர்கள். சில ஆய்வுகளின்படி 10 இல் நான்கு இறப்புகள் மட்டும்தான் மனநோயால் ஏற்படுகின்றன. மீதமுள்ள இறப்புகளுக்கான கீழ்கண்டவற்றால் ஏற்பட்டிருக்கின்றன
- நிதிப்பிரச்சனை
- தொழில் நஷ்டம்
- வீட்டில் நடக்கும் வன்முறை அல்லது பிரச்சனை
- வேலையின்மை
- நாள்பட்ட தீவிர நோய்கள்
- திருமண பிரச்சனை
- நேசிப்பவரின் மரணம்
- தேர்வு முடிவுகள்
- ஆண்மையின்மை
- வேலை அழுத்தம்
- போதைப்பொருள் அல்லது மதுவின் தாக்கம்
தீர்வு :
தற்கொலை செய்துக்கொள்ள நினைப்பவர்கள் உண்மையில் அடுத்தவர்களிடம் பேசக்கூட விரும்புவதில்லை. ஆனால் அவர்களின் பிரச்சனைக்கு ஆறுதல் கூற விரும்பினால் உங்களிடம் அந்த எண்ணத்தை பகிர்ந்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர்கள் உதவிக்கு அப்பாற்பட்டவர்கள் என்கின்றனர் மருத்துவர்கள். ஆனால் அவர்களை சிகிச்சையால் மீட்க முடியும் என்கிறது மருத்துவ குழு . தற்கொலை என்பது தனிப்பட்ட முடிவு என்பார்கள் . அது எப்படி தனிப்பட்ட முடிவாக இருக்க முடியும் பாதிக்கப்பட்ட நபரைத் தவிர, தற்கொலை அவர்களின் அன்புக்குரியவர்களையும் பாதிக்கிறது அல்லவா! . தற்கொலை செய்து கொள்ள நினைக்கும் ஒருவரிடம் நீங்கள் அதை பற்றி கேட்டால், அவர்கள் நிம்மதியாகவும் ஆறுதலாகவும் உணர்வதாக சில ஆய்வுகள் நிரூபித்துள்ளன.எனவே தற்கொலை வாழ்வின் சிறந்த முடிவாக ஒருபோது இருக்கவே முடியாது!