தூக்கம் மனித உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பது அனைவரும் அறிந்ததே! ஆனால், சீரான தூக்கம் இல்லையென்றால் உடலில் பல்வேறு கோளாறுகள் ஏற்படும் என்று எச்சரிக்கிறது மருத்துவ உலகம். அவசர வாழ்க்கை முறையில் முறையான ‘ஸ்லீப் டைம்’ என்பதை நிர்வகிப்பது எல்லாருக்கும் மிகவும் சிரமமான ஒன்று.
எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்..?
ஆசியா பசிபிக், இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா பகுதிகளில் இருந்து பி&ஜி ஹெல்த் மருத்துவ மற்றும் தொழில்நுட்ப விவகாரங்களைக் கையாளும் குழு விஞ்ஞானி டாக்டர் யோங்சியாட் வோங்கின் கூற்றுப்படி, உடல் சரியாக செயல்பட, ஒருவருக்கு சீரான தூக்கம் கிடைக்க வேண்டும். ஒரு நாளுக்கு எவ்வளவு மணி நேரம் தூக்கம் கிடைக்கிறது என்பது முக்கியம் அல்ல என்கிறார்.
ஒருவர் இரவில் 10 மணிநேரம் படுத்தே கூட இருக்கலாம்; தூங்கலாம். ஆனால், அவர்களுக்கு சீரான தூக்கம் கிடைக்குமா? என்பது கேள்வி. இன்றைய காலத்தில் மனிதர்கள் ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்வது என்பது கடினமானது ஆனாலும், நன்றாக உறங்குவது மிகவும் அவசியமானது என்கின்றனர் மருத்துவர்கள். மேலும், தேவையான அளவு தூக்கம் இல்லாததால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும் குறிப்பிடுகின்றனர்.தூக்கம் ஓய்விற்கானது அல்லது; நன் உடல் வளர்ச்சிக்கு தூக்கம் மிகவும் அவசியம் என்று வலியுறுத்துகின்றனர் மருத்துவர்கள். வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன்கள் இரவில்தான் சுரக்கின்றனர்.தூக்கம் இல்லையென்றால் வளர்ச்சி தடைப்படும்.
இன்சோம்னியா:
மன அழுத்தம், மன உளைச்சல் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் தூக்கம் பாதிக்கப்படும். இந்நிலை அதிகரித்தால் இன்மோம்னியா ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும்.
பலருக்கும் படுத்தவுடன் தூங்குவதில் சிக்கல் இருக்கும். எதாவது ஒன்றை பற்றி ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபடுது பலர் எதிர்கொள்ளும் சிக்கலாக உள்ளது. படுக்கைக்கு சென்றதும் தூக்கம் வருவதில் சிக்கல் ஏற்படும். வெகு நேரம் ஆனாலும் தூக்கம் வராது. இப்படியான சிக்கல்களை எதிர்கொள்பவர்கள் இன்சோம்னியா பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள் என்று அர்த்தம்.
Sleep Onset Insomnia - ஸ்லீப் ஆன்செட் இன்சோம்னியா என்பது தூங்குவதற்கு சிறிது நேரம் எடுக்கும். ’Sleep Maintenance Insomnia’ என்பது தூக்கத்தில் அடிக்கடி விழித்து கொள்வது.நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும்போதே காரணமின்றி விழிப்பு ஏற்படுவது. இப்படியான பிரச்சனைகளும் இந்த வகையில் வரும். ஆழ்நிலை தூக்கம் இல்லாமல் இருப்பதும் இன்சோம்னியாதான். சிலருக்கு இரவு முழுவதும் தூக்கமே வராத நிலையில் கூட இன்சோம்பியா பிரச்சனை இருக்கும்.
தூக்கம் வராதது ஏன்? பாதிப்பு என்ன?
ஒழுங்கான வாழ்க்கை முறை இல்லாதது, சரியான உடல் இயக்கம் இல்லாதது ஆகியவற்றினால் தூக்கம் பாதிக்கப்படும்.
இரவு நேரத்தில் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, மொபைல் பார்ப்பது உள்ளிட்ட எல்க்ட்ரானிக் கேஜட்களைப் பார்த்துக்கொண்டிருந்தாலும் தூக்கம் வருவதில் சிக்கல்கள் இருக்கும்.
இரவு அதிகமாகச் சாப்பிட்டாலோ, அதிகமாக காரம், எண்ணெய் உள்ள உணவுகளை எடுத்துக்கொண்டாலோ தூக்கம் பாதிக்கப்படும். ஏனெனில், உணவு செரிக்க அதிக நேரம் எடுக்கும்.செரிமானக்கோளாறுகள் ஏற்படும்.
மனதில் எதையாவது நினைத்து கவலைபடுவது, மனஅழுத்தம், மன உளைச்சல் இருந்தாலும் தூக்கம் பாதிக்கப்படும். இவையெல்லாம் 'ஸ்லீப் ஆன்செட் இன்சோம்னியா' ஏற்பட முக்கியக் காரணங்கள்.
தொடர்ந்து தூக்க பிரச்சனைகள் இருப்பதால், இதயக் கோளாறு, பக்கவாதம், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம்,போன்ற மற்ற உடல்நலக் கோளாறுகளும் ஏற்படலாம். பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி, ஹார்மோன் சுரப்பு பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
தீர்வுகள்
சீரான உடற்பயிற்சிகள்,சூரிய ஒளி உடலில் படுவது,தூங்குவதற்கு முன்பு டி.வி., மொபைல் பார்ப்பது உள்ளிட்டவற்றை தவிர்ப்பது, இரவு தூங்கச் செல்வதற்கு 3 மணிநேரம் முன்பாகவே சாப்பிடுவது என இப்படியான நடைமுறைகளை பின்பற்றுவது நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
யோகா, தியானம் செய்யலாம். மனம் ரிலாக்ஸ் ஆகும்
இரண்டு வாரங்களுக்கு மேலாக தூக்கம் சார்ந்த பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.
சீரான தூக்க நேரத்தை பின்பற்ற வேண்டும். இரவில் சீக்கரம் தூங்கி, அதிகாலையில் எழுவதை வழக்கமாக்கி கொள்வது நல்லது.