உலகளவில் அதிகளவு மக்கள் வழிபடும் மார்க்கங்களில் ஒன்றாக இஸ்லாம் உள்ளது. இஸ்லாமியர்களின் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று பக்ரீத் பண்டிகை(Bakrid Festival) ஆகும். தியாகப் பெருநாள் என இஸ்லாமியர்களால் பெருமிதத்துடன் குறிப்பிடப்படும் இந்த பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதற்கு ஒரு தனி வரலாறே உண்டு.


பக்ரீத் பண்டிகை:


சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஈராக்கில் வாழ்ந்து வந்தவர் இப்ராஹிம். இவருக்கு நீண்ட நாட்களாக குழந்தைப் பேறு இல்லாமல் இருந்து வந்தது. இந்த சூழலில், அல்லாவின் அருளால் இப்ராஹிமுக்கும், அவரது இரண்டாவது மனைவி ஆசராவுக்கும் ஒரு ஆண் மகன் பிறந்தது. அந்த குழந்தைக்கு இஸ்மாயில் என்று பெயரிட்டனர்.


இஸ்மாயில் தனது பெற்றோர்களுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார். இஸ்மாயில் தனது பதின்ம பருவத்தை எட்டியபோது, ஒருநாள் இப்ராஹிமின் கனவில் இறைவன் தோன்றினார். அவர் தனக்கு இஸ்மாயிலை பலி தருமாறு கட்டளையிட்டார். பெற்ற பிள்ளையாக இருந்தாலும் இறைவனின் கட்டளை என்பதால் அதை முழு மனதுடன் இப்ராஹிம் ஏற்றுக்கொண்டார். இறைவனின் கட்டளையை தனது மகன் இஸ்மாயிலிடமும் கூறினார். இஸ்மாயிலும் முழு மனதுடன் இறைவனின் கட்டளையை ஏற்றுக்கொண்டு பலிக்கு தயாரானார்.


தியாகப் பெருநாள்:


முழு ஏற்பாடுகளுடன் இஸ்மாயிலை பலியிட இப்ராஹிம் தயாரானார். இஸ்மாயிலை பலியிட தோன்றியபோது, இறைத் தூதர்களில் ஒருவரான சிஃப்ரயில் தோன்றினார். அவர் இப்ராஹிமை தடுத்து, இஸ்மாயிலுக்கு பதிலாக ஒரு ஆட்டை கொடுத்து அதை அறுத்து பலியிடுமாறு கூறினார். இதையடுத்து, ஆட்டை இறைவனுக்காக இப்ராஹிம் பலி தந்தார். இறைவன் விடுத்த கட்டளைக்காக பெற்ற மகனையே பலியிட துணிந்த இப்ராஹிமின் தியாகத்தையும், இறைவனின் கட்டளையை ஏற்று தன்னை பலியாக்கிக் கொள்ள முன் வந்த இஸ்மாயிலின் தியாகத்தையும் போற்றும் வகையில் பக்ரீத் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்படுவதாக இஸ்லாம் மார்க்கம் கூறுகிறது. மேலும், இஸ்மாயிலின் வழி வந்தவர்களே அராபியர்களாக கருதப்படுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


தமிழ்நாட்டில் வரும் திங்கள் கிழமை பக்ரீத் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் ஆடுகள், கோழிகள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.