நமது வீட்டுக் குழந்தைகளிடம் குழந்தைகளாகவே மாறி அவர்களை மகிழ்வித்து அவர்களிடம் அளவுக்கு அதிகமான அன்பைக்காட்டி சந்தோசப்படுபவர்கள் நம் தாத்தா பாட்டி. இவர்களுக்காகவே உலக தாத்தா பாட்டி தினம் என்ற ஒரு நாள் ஒதுக்கி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தாத்தா பாட்டி தினம் உலக மக்களால் வருட வருடம் கொண்டாடப்படுகிறது. இதில் ஒவ்வொரு நாட்டிலும் மாதங்கள் நாட்கள் வேறுபட்டே இந்த தினத்தை மக்கள் அதிக அளவில் கொண்டாடி வருகின்றனர். தாத்தா பாட்டி மற்றும் பேரன் பேத்திகளுக்கு இடையே இந்த நாளில் தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றன. 1961-ஆம் ஆண்டு முதுமை பற்றிய வெள்ளை மாளிகை மாநாட்டின் போது, ரிவர்டேலில் ஹீப்ரு இல்லத்தைச் சேர்ந்த ஜேக்கப் ரீங்கோல்ட், "வயதானவர்களின் புதிய உருவம்" பற்றிய செய்தியால் அதிகம் ஈர்க்கப்பட்டு, மில்லியன் கணக்கான வயதான அமெரிக்கர்களின் பங்கை அங்கீகரிப்பதில் கவனம் செலுத்தினார்.
அதே ஆண்டு, செப்டம்பர் 16, 1961 அன்று, ஹீப்ரு இல்லத்தில் தாத்தா பாட்டிகளுக்கு சிறப்பு மரியாதை செலுத்தும் முதல் நாள் நடைபெற்றது. 1963 வாக்கில் இது பிராங்க்ஸ் பெருநகரத்தில் அதிகாரப்பூர்வ விடுமுறையாக மாறியது. ஜனவரி 27, 1987 இல், தாத்தா பாட்டிகளுக்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்கு ஜேக்கப் ரீங்கோல்டின் முன்னோடி முயற்சிகள் மற்றும் அவர்களைக் கொண்டாடும் தேசிய தினத்தை காங்கிரஸினால் ஏற்படுத்தப்பட்டது.
மரியன் மெக்வேட் என்பவர் தாத்தா பாட்டிகளுக்கு 1970 ல் ஒரு சிறப்பு அங்கீகார நாளை நிறுவுவதற்கான பிரச்சாரத்தைத் தொடங்கினார். அவரது முயற்சிகள் மூலம், அவர் குடிமக்கள், வணிகம், நம்பிக்கை மற்றும் அரசியல் தலைவர்களை அணுகினார் மற்றும் தாத்தா பாட்டி தினத்திற்காக மாநிலம் தழுவிய பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
1973 ஆம் ஆண்டில், மேற்கு வர்ஜீனியாவில் முதல் தாத்தா பாட்டி தினம் ஆளுநர் ஆர்ச் மூரால் அறிவிக்கப்பட்டது.அவர்களின் பணி 1978 இல் உச்சக்கட்டத்தை அடைந்தது, தொழிலாளர் தினத்திற்குப் பிறகு முதல் ஞாயிற்றுக்கிழமை தேசிய தாத்தா பாட்டி தினமாக அறிவிக்கும் சட்டத்தை யுனைடெட் ஸ்டேட்ஸ் காங்கிரஸ் நிறைவேற்றியது.
ஜனாதிபதி பிரகடனத்தில் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் கையெழுத்திட்டார், இதனால் இந்த சிறப்பு விடுமுறையை மக்கள் கொண்டாட தொடங்கினர். அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் இந்த தினத்தை பேரக்குழந்தைகள் அனைவரும் தங்கள் தாத்தா,பாட்டி மீது வைத்திருக்கும் அன்பையும் அக்கறையும் அவர்களது ஆசையையும் அன்று வெளிப்படுத்தி அந்த தினத்தை தங்களது தாத்தா பாட்டியுடன் அவர்கள் சிறப்பிக்கின்றனர்.
பல குடும்பங்கள் குடும்பம் குடும்பமாக இந்த நாளை கொண்டாடி தங்களது அன்பினை பகிர்ந்து கொள்கின்றன மற்றும் தங்களது தாத்தா பாட்டி அவர்களுக்கு பரிசுகளை வழங்கி மகிழ்வித்து கொள்கின்றனர். பிள்ளைகளால் கைவிடப்பட்டு தனிமையில் இருக்கும் அனைவருக்கும் இது ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த விழா கொண்டாடப்படுகிறது. இன்னும் சில குடும்பங்களில் தாத்தா பாட்டிகளை கைவிடாமல் இருக்க பேரன் பேத்திகள் இந்த திருவிழாவினை பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இதுபோன்ற விழா நடப்பதனால் அனைத்து குடும்பங்களில் உள்ள தாத்தா பாட்டிகள் தங்களது பேரபிள்ளைகளுடன் மிகவும் சந்தோசமாக நேரம் செலவழிக்க முடியும். இதனாலே இந்த விழாவானது உலகம் முழுவதும் உலக தாத்தா பாட்டி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பெற்றோரும் தமது தாய் தந்தையை, பேர குழந்தைகளுக்கு முன் அவமதிப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். தற்போதைய காலகட்டங்களில் குழந்தைகளுக்கு பெரியவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எவ்வாறு பேச வேண்டும் என்ற விதிமுறைகள் இன்றி வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுகிறார்கள். தாத்தா பாட்டி மீது பேரக்குழந்தைகள் அன்பையும் பாசத்தையும் பொழிய வீடுகளில் இருக்கும் பெற்றோர் அதனை நடைமுறையில், செயல் முறையில் காண்பிக்க வேண்டும்.