தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஒடிச, உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களீல் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வெப்ப அலைகளில் இருந்தும் கோடை வெயில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்க நிபுணர்கள் சொல்லும் அறிவுரைகளை காணலாம்.
வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இங்கு வரும் 26-ம் தேதி வரை வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியல் வரை அதிகரிக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பநிலையை சமாளிக்க அதற்கேற்றவாறு உணவு சாப்பிடுவது, உடலின் வெப்பநிலையை சீராக இருக்க குளிர்ச்சி தரக்கூடிய பழங்கள், உணவுகள், நீர்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை சாப்பிடுவது மிகவும் நல்லது என பரிந்துரைக்கப்படுகிறது.
அதிக வெப்பத்தினால் உடலில் கொப்பளங்கள், வியர்க்குரு ஏற்படுவது, ஆகியவற்றை தவிர்க்க அதிகமாக நீர் குடிக்க வேண்டியது மிகவும் அவசியம். எலுமிச்சை உப்பு கலந்து ஜூஸ் குடிப்பதும் உடலில் எலக்ட்ரோலைட் வியர்வையின் மூலம் வெளியாவதை தடுக்கும். இளநீர் குடிக்கலாம். வெளியே வேலைப் பார்ப்பவர்களுக்கு சூழல் மிகவும் கடினமானதாக இருக்கும். பணி சூழல் காரணமாக பலருக்கும் நிழலில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைப்பதில்லை. அவர்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். அடிக்கடி முகம், கை கால் கழுவுவது உள்ளிட்டவற்றை செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர்.
அவசியம் தவிர்த்து காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கலாம் என்பது மருத்துவர்கள் பொதுவான அறிவுரையாக இருக்கிறது.
சிட்ரஸ் சத்து மிகுந்த பழங்கள்
எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, நெல்லிக்காய் உள்ளிட்ட பழங்களில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இவை சிட்ரஸ் பழங்கள் என்று அழைக்கப்படுகிறது.இதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை உண்டு. நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள் இந்த வகை பழங்களைச் சாப்பிடலாம். உடலுக்குக் குளிர்ச்சி ஏற்படுத்தும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.
வெப்ப அலைகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க சில டிப்ஸ்
- மதிய நேரத்தில் (12.00P.M-3.00P.M ) வெளியில் செல்வதைத் தவிர்க்கவும்.
- தாகம் எடுக்கவில்லை என்றாலும் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை பழக்கமாக்கி கொள்ளுங்கள்.
- அதிக உடலுழைப்பு தேவைப்படும் வேலைகளை மதிய நேரங்களில் செய்வதைத் தவிர்க்கவும்.
- வெளியே செல்லும்போது எப்போது ஒரு பாட்டிலில் தண்ணீர் எடுத்து செல்வதை கடைபிடியுங்கள்.
- குளிர்பானங்கள், தேநீர், காபி, மது போன்றவற்றை குடிப்பதை தவிர்க்கவும்.
- புரதச்சத்து அதிகம் உள்ள உணவைத் தவிர்க்கலாம்.
- வெளியில் வேலை பார்ப்பவராக இருந்தால் குடையோ அல்லது தொப்பியோ உடன் கொண்டு செல்லவும்.
- உடல் சோர்வுற்றலோ அல்லது காய்ச்சல் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுகவும்.
- மோர், எலுமிச்சை தண்ணீர் போன்ற வீட்டில் செய்யும் பானங்களைப் பருக வேண்டும். அதிகம் சர்க்கரை உள்ள கடைகளில் கிடைக்கும் குளிர்பானங்கள் வேண்டாம்.
- வளர்ப்புப் பிராணிகளை நிழலிலே வைக்க வேண்டும். அதிக தண்ணீர் கொடுக்க வேண்டும்.
- உங்கள் வீட்டைக் குளிர்ச்சியாக வைத்திருக்க முயற்சிக்கலாம்.
வெப்ப அலைகளில் இருந்து தப்பிக்க இரண்டு வேளையும் குளிக்கலாம். பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். இறுக்கமான உடைகள் அணிவதை தவிர்க்கவும். அதிக காரம், மசாலா இல்லாத உணவுகளை சாப்பிடலாம்.