சென்னை உள்பட முக்கிய நகரங்களில் வீடு, அடுக்குமாடிக் குடியிருப்பு, வீட்டுமனை ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. அதே சமயம் வீட்டுக் கடன்கள் மீதான வட்டிவிகிதம் வீழ்ச்சியடைந்து வருகிறது. வீட்டுக் கடனுக்கான வட்டி தொடர்ச்சியாகக் குறைந்துகொண்டே வருவதால், லோன் வேண்டி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதுவும் ஆன்லைன் மூலம் வீட்டுக் கடனை விண்ணப்பித்து கடன் பெறுவது மிகவும் அதிகரித்துள்ளது. எனினும், வங்கிகள் லோன் வழங்கலாமா அல்லது வேண்டாமா என்பதை விண்ணப்பதாரர் மீதான ஒருசில பரிசோதனைக்குப் பிறகே முடிவெடுக்கும். அதுபோல நாம் முன்னரே கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்று பார்க்கலாம்.
- நீங்கள் வாங்க திட்டமிட்டுள்ள சொத்து, அது வீட்டு மனையாக இருந்தாலும் அல்லது ஃப்ளாட் ஆக இருந்தாலும் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனையா / ஃப்ளாட்டா என்பதைச் சரிபார்ப்பது மிகவும் முக்கியம். ஒருவேளை கட்டுமான நிறுவனம் சம்பந்தப்பட்ட நிலம் அல்லது வீட்டுக்கு ஒப்புதல் எதுவும் பெறவில்லை என்றால், வங்கிகள் கடன் வழங்க மறுத்துவிடும். ஆகையால், கட்டுமான நிறுவனம் பிரபலமானதா, நம்பிக்கையானதா, வீடு சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களும் சரியாக இடம்பெற்றுள்ளனவா என்பதைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
- கட்டுமான நிறுவனத்தின் மீது சந்தேகம் அல்லது அவர்களைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டுமெனில், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையமான `ரெரா' (RERA - Real Estate Regulatory Authority's) இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.
- ஒரு வீட்டைக் கட்டுவதாக இருந்தாலும் அல்லது ஒரு ஃப்ளாட் வாங்குவதாக இருந்தாலும், எவ்வளவு ரூபாய்க்கு வாங்குகிறோம் என்பது மிக முக்கியம். ஆகையால், நீங்கள் வாங்க நினைக்கும் வீடு குறித்து, குறிப்பிட்ட ஒரு பட்ஜெட்டை மனதில்வைத்து, அதற்குத் தகுந்தாற்போல் வீட்டுக் கடன் வாங்குங்கள். ஒருவேளை பட்ஜெட் அதிகமாக இருந்தால், வீட்டுக் கடனுக்கான வட்டியும் அதிகமாகும். செலுத்தவேண்டிய தவணைக் காலமும் அதிகமாக வாய்ப்பு இருக்கிறது என்பதை மனதில்கொள்ளுங்கள்.
- நீங்கள் ஒரு வீட்டை வாங்குகிறீர்கள் என்றால், அந்த வீட்டின் சொத்துமதிப்பைப் பொறுத்து உங்களுடைய கையிலிருந்து 10 சதவிகிதம் அல்லது 20 சதவிகிதம் வரை டவுன் பேமென்ட்டாகச் செலுத்தவேண்டியதிருக்கும். உங்களால் முடிந்தால், இதைவிட அதிகமான பணம்கூடச் செலுத்தலாம். ஆனால், கூடுதலாக வேறு எதற்கெல்லாம் கட்டணம் என்பதைத் தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
- வீட்டுக் கடன் மட்டுமல்ல, எந்த ஒரு கடனாக இருந்தாலும் கடன் வழங்குபவர்கள் வீட்டுக் கடன் வேண்டி விண்ணப்பிப்பவர்களுக்குக் குறிப்பிட்ட சில தகுதிகள் இருக்கின்றனவா என்பதைப் பார்த்த பிறகே கடன் வழங்குவர். இவற்றில் மிகவும் முக்கியமானது, உங்கள் கிரெடிட் ஸ்கோர். ஆகையால், உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருக்கிறதா என்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள்.
- இதுதவிர, உங்கள் வருமானம், வயது, வேலை, கடன் தொகை மற்றும் சொத்துப் பிணையம் (collateral security) போன்ற பிற விவரங்கள் பார்க்கப்படும். இவை அனைத்தும் வீட்டுக் கடன் வழங்குபவர்கள் கடனாளிகளைத் தீர்மானிப்பதற்கான முக்கிய நிபந்தனைகள்.
- வீட்டுக் கடனைப் பொறுத்தவரை, எங்கு கடன் வாங்க உள்ளீர்கள், எவ்வளவு வட்டிவிகிதம் என்பது மிக முக்கியக் காரணிகள். எவ்வளவுக்கு எவ்வளவு வீட்டுக் கடனுக்கான வட்டிவிகிதம் குறைவாக உள்ளதோ, அவ்வளவுக்கு அவ்வளவு உங்களுடைய மாதந்திர வட்டி, அதாவது இ.எம்.ஐ மிகக் குறைவாக இருக்கும். எனவே, எந்த வங்கியில் கடன் வாங்கினாலும் அந்த வங்கி அதிகாரியிடம் குறைந்தபட்ச வட்டிவிகிதத்தில் கடன்பெற முயலுங்கள்.
- குறைந்த வட்டிவிகிதத்தில் கடன் பெற்றிருந்தாலும், முக்கியமாக வங்கிகளிடம் வீட்டுக் கடன் வாங்கும்போது மிதவை வட்டி (floating interest) அல்லது நிலையான வட்டி (fixed interest) என இரண்டுவிதமாக வாங்கலாம். இதில் நிலையான வட்டியில் கடன் வாங்கினால், கடன் தொகை முழுவதும் முடியும் வரை இதை வட்டியில்தான் செலுத்தவேண்டியதுவரும்.
- இதுவே மிதவை வட்டியில் கடன் வாங்கினால், ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிக் கடனுக்கான வட்டியைக் குறைக்கும்போது அதற்கான பலனையும் நீங்கள் அனுபவிக்கலாம். ஆகையால், பலரும் மிதவை வட்டியிலே கடன் வாங்குகின்றனர். நீங்களும், உங்களுடைய வங்கி அதிகாரியுடன் கேட்டு, மிதவை வட்டியில் கடன் பெறுங்கள்.
- வீட்டுக் கடன் எடுக்கப்பட்டவுடன், அந்தக் கடன் சுமை உங்கள் குடும்பத்தின் மீதுதான் விழும். எனவே, உங்களுடைய வீட்டைப் பாதுகாத்திட இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது நல்லது. ஏனெனில், இயற்கைச் சீற்றம், மழை, வெள்ளம் என்பது எதிர்பாராத ஒன்று. அதைத் தடுத்து நிறுத்துவது நம் கையில் இல்லை. ஆகையால், ஒவ்வொருவரும் கட்டாயம் வீட்டைப் பாதுகாக்கும் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது நல்லது.
- இதனால், வீட்டில் உள்ள பொருள்கள் மற்றும் கட்டடத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டால் கவரேஜ் கிடைக்கும். டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், விலை உயர்ந்த எலெக்ட்ரானிக் பொருள்கள், ஃபர்னிச்சர் போன்ற அனைத்துக்கும் கவரேஜ் கிடைக்கும். மழை, புயல் போன்றவற்றால் வீடு இடிந்து விழுந்தாலோ, பாதிக்கப்பட்டாலோ இழப்பீடு கிடைக்கும் என்பதால் யோசித்துத் திட்டமிடுங்கள்.