நம்மில் பலருக்கும் காலை முதல் இரவு வரை காபி, டீ போன்ற பானங்கள் இல்லாமல் நாட்கள் நகராது. காபி நம்மை சுறுசுறுப்பாக மாற்றும் ஒரு உற்சாக பானமாக பார்க்கிறார்கள். ஆனால் நாம் சோர்வாக இருக்கும்போது காபி, டீ போன்ற காபின் கலந்த பானங்கள் குடித்தால் மேலும் நீரிழப்பு ஏற்பட்டு தூக்கம் கண்ணைக் கட்டும். அதனால் தான் காஃபி குடித்ததும் நம்மிடம் உள்ள சோம்பல் எல்லாம் வெளிப்பட்டு விடுகிறது.
நாம் இக்கட்டுரையில் காலையில் காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றிக் காணலாம். அதாவது ஐரோப்பிய இதய இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு முடிவுகளின்படி, “ காலையில் காபி குடிப்பவர்கள், நாளின் எந்த நேரத்திலும் காபி குடிப்பவர்களை விட ஆரோக்கியமானவர்களாக இருப்பார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் குறைந்த அளவில் காபி குடிப்பவர்கள், அன்றாட வாழ்வில் காபி குடிக்காதவர்களை விட ஆரோக்கியமாக இருப்பார்கள் என சொல்லப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சிக்காக, அமெரிக்காவைச் சேர்ந்த கிட்டத்தட்ட 40,000 பேரிடம் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.
அந்த நபர்களின் உணவு முறை முதல் அவர்கள் காபி குடிக்கும் நேரம் வரை அனைத்தையும் ஆய்வு செய்து முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டதட்ட 1999 மற்றும் 2018 க்கு இடையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஒன்று அல்லது இரண்டு கப் அல்லது அதற்கு மேற்பட்ட காபி குடிப்பவர்களுக்கு அல்லது காலையில் ஒரு முறை காபி குடிப்பவர்களுக்கு நோய் அபாயம் குறைவாக இருப்பதாக ஆய்வில் தெளிவாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாதம் நிறுத்தினால் என்ன ஆகும்?
மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையில் காபி ஒரு தீர்வாக மாறிவிட்ட நிலையில் அந்த பழக்கத்திலிருந்து விடுபடுவது மிகவும் கடினம். நீங்கள் ஒரு மாதத்திற்கு காபி குடிப்பதை நிறுத்தினால் உங்கள் உடல் எவ்வாறு செயல்படுகிறது என்பது பலருக்கும் கேள்வியாக இருக்கும். காபியால் நல்லது இருந்தாலும், அதேசமயம் உடல் உபாதைகளும் இருக்கத்தான் செய்கிறது. அப்படியான நேரத்தில் நாம் காபியை நிறுத்த பரிந்துரை செய்யப்படுகிறோம்.
ஒருவேளை நீங்கள் தொடர்ச்சியாக 30 நாட்கள் காபி எடுத்துக்கொள்ளாமல் இருந்தால் முதல் சில நாட்களில் தலைவலியை ஏற்படுத்தும். அடுத்து ஒற்றைத் தலைவலிக்கு வழிவகுக்கும். உடல் சோர்வாக உணர தொடங்கும். டோபமைன் என்ற ஹார்மோன் பாதிக்கப்படுவதால் கோபமாகவும் எரிச்சலாகவும் உணர்வீர்கள். காபி இல்லாமல் இருப்பதற்கு உங்கள் மூளை பழகுவதற்கு சிறிது காலம் எடுக்கலாம். இவற்றை நீங்கள் சமாளிக்க முடிந்தால், உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.