குழந்தைகள் நாணயங்களை விழுங்கி விட்டால் பெற்றோர்கள் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என எழும்பூர் மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். 

Continues below advertisement

குழந்தை வளர்ப்பில் கவனம்

குழந்தை வளர்ப்பு என்பது சாதாரண விஷயம் இல்லை என்பது பெற்றோராக மாறும் அனைவருக்கும் அறிந்த விஷயமாகும். கண்ணின் இமைபோல குழந்தைகள் பிறந்தது முதல் குறிப்பிட்ட வயது வரை பாதுகாக்க வேண்டிய கடமை இருக்கும். பிடித்தது, பிடிக்காதது, ஒவ்வாமை ஏற்படக்கூடாது என உணவுப்பொருள் தொடங்கி உடைகள் வரை நாம் கவனமுடன் தேர்வு செய்ய வேண்டும். 

நமது அம்மா, அப்பா தலைமுறையினருக்கு பாட்டி, தாத்தா போன்றவர்கள் குழந்தை வளர்ப்பு முறையை கவனித்துக் கொண்டார்கள். ஆனால் பெரும்பாலானோர்கள் எப்படி வளர்க்க வேண்டும் என்பதை சொல்லிக் கொடுக்காமல் சென்று விட்டார்கள். இதனால் இன்றைய தலைமுறையினருக்கு கற்றுக் கொடுக்க முடியாமல் பெரும்பாலான வீடுகளில் பெற்றோர்கள் தவித்து வருகின்றனர். இதனால் புதிதாக குழந்தை பெற்றுக் கொள்ளும் இளம் தம்பதியினர் குழந்தைகளை கவனிப்பதில் படாதபாடுபட்டு விடுகின்றனர். 

Continues below advertisement

உணவு கொடுப்பதில் கவனம்

குழந்தைகளும் வளரும் பருவத்தில் கையில் கிடைப்பதை எல்லாம் வாயில் போட்டுக் கொள்ளும் பழக்கத்தை கொண்டுள்ளது. சுவரில் இருக்கும் மண் தொடங்கி எதுவாக இருந்தாலும் முதலில் தங்கள் வாயில் வைப்பார்கள் என்பது எல்லா நேரமும் யாராவது ஒருவர் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதனால் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் எந்த பொருளையும் கீழே வைக்கக்கூடாது என சொல்வார்கள். 

ஆனால் சில நேரங்களில் உணவுப்பொருட்கள் கூட குழந்தையின் சுவாசக் குழாய்களிலும், உணவுக்குழாய்களிலும் சிக்கி உயிருக்கே ஆபத்தை விளைவிக்கிறது. வயதுக்கேற்ப ஒவ்வொரு உணவுப் பொருட்களையும் எப்போது கொடுக்க தொடங்க வேண்டும், எப்படி கொடுக்க வேண்டும், எவ்வளவு காரம் சேர்க்க வேண்டும் என பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது. எனினும் காலம் மாறி விட்டது என பல இளம் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு முன்கூட்டியே அனைத்து உணவுகளையும் கொடுத்து பழக்குவது தவறானது என சொல்லப்படுகிறது. 

நாணயம் விழுங்கினால் என்ன செய்யலாம்?

இதனிடையே 3 வயதுக்கு குறைவான குழந்தைகள் கையில் எக்காரணம் கொண்டு பட்டன், பேட்டரி போன்ற பொருட்களை விளையாட கொடுக்கக்கூடாது. உடைகள் கூட பட்டன் இல்லாமல் தேர்வு செய்யலாம். இவை வாயில் போட்டு மெல்லும்போது அது மூச்சுக்குழாய்களில் சிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதனால் நீண்ட நாள் சளி, இருமல் பிரச்னை ஏற்பட்டு சரியாக கவனிக்காவிட்டால் நுரையீரல் தொற்று உண்டாகலாம். சில குழந்தைகள் நாணயங்களை விழுங்கி விடுவார்கள். அவை மூச்சுத்திணறல் பிரச்னை உண்டாக்கி விடும். 

எனவே குழந்தைகள் ஏதாவது பொருட்களை விழுங்கி விட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். மயக்கமாகி விட்டால் குழந்தையின் தலையை கீழே சாய்த்து தோள்பட்டைகளுக்கு இடையில் வேகமாக தட்டி முதலுதவி அளிக்க வேண்டும். அதேசமயம் லேசான பாதிப்பு இருந்தால் முதலுதவி செய்ய வேண்டாம். மருத்துவரிடம் அழைத்து வந்தாலே போதும் எனவும் கூறப்பட்டுள்ளது.