யார் ஒருவர், வாழ்நாள் முழுவதும் இளமையாய் இருப்பதற்கான மருந்தை அல்லது அதற்கான வழிமுறையைக் கண்டுபிடிக்கிறாரோ, அவர் உலகின் பணக்காரர் பட்டியலில் கண்டிப்பாக இடம்பிடிப்பார். முதுமையை மறைக்க நரை முடியை கறுப்பாக்குகின்றனர்; முகம் பொலிவாக இருக்க வகை வகையான கிரீம்களைத் தடவுகின்றனர், முகத்தில் தோல் சுருக்கத்தைப் போக்க சிகிச்சை எடுக்கின்றனர். இளமையாய் இருக்கப் பலவகையான வழிமுறைகளைப் பின்பற்றுகின்றனர்.
ஆனால், இவை அனைத்தும் தற்காலிகமானவையே. சில மணி நேரமோ சில நாட்களோ மட்டுமே திரை போட்டு மூடி மறைக்க முடியும். அதிலும், சிலவகையான வழிமுறைகள் தீங்கு விளைவிக்கக்கூடியவை. வெளித்தோற்ற மாற்றங்களை மறைக்க முயன்றால், அது தற்காலிகமாக மட்டுமே அமையும். அகத்தில் மாற்றினால் மட்டுமே அது நிலையான இளமையைக் கொடுக்கும். அந்த நிலையான இளமையின் ரகசியம், கவலையைக் கண்ணுக்கு எட்டாத தூரத்துக்கு எறிவதே. கவலையைக் களைந்தால் அது இளமையை நமது முகத்தில் என்றும் நிலைத்திருக்கச் செய்யும்.
அரியானா கிராண்டே, விக்டோரியா பெக்காம் மற்றும் கிம் கர்தாஷியன் போன்ற ஆடை வடிவமைப்பாளரான வேரா வாங், எப்போதும் இளமையான தோற்றம் கொண்டவர் என்று அனைவராலும் புகழப்படுபவர். அவருக்கு 70 வயது ஆகிறது என்று அவரே சத்தியம் செய்து சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள், ஆனால் அதுதான் உண்மை. பெரும்பாலும் உலகத்தினர் அனைவரும் விரும்புவது அதைத்தான். தங்களுக்கு எவ்வளவு வயதானாலும் அது வெளி தோற்றத்தில் தெரிந்து விட கூடாது என்பதே அனைவரின் ஆசையாக இருக்கும். அதற்காக ஸ்பெஷலாக வேரா வாங் என்ன செய்கிறார் என்று அவரே கூறுகிறார்.
72 வயதான அவர் பிபிசி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "இளமையைக் காப்பதற்காக நான் தனியாக ஒன்றும் செய்ததே இல்லை" என்று கூறியுள்ளார். உலகெங்கிலும் உள்ள பேஷன் ஷோக்களில் வேரா வாங் பல பிரபலங்களுக்கு ஆடைகளை வடிவமைத்து அணிவித்துள்ளார். அவரது இளமைத் தோற்றம் மக்களை எப்போதுமே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விஷயம். அதுவும் ஆரஞ்சு நிற கிராப் டாப் உடன், ஒரு வெள்ளை நிற ஷார்ட்ஸ் போட்டுகொண்டு அவர் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் போஸ்டிற்கு பிறகு அவருடைய இளமை குறித்த பேச்சுக்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
இந்த வரவேற்பை அந்த பதிவிற்கு அவரே எதிர்பாக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார். பார்ப்போர் அனைவரும் அவரது இளம் தோற்றத்தை புகழ்வது அவருக்கு மிகவும் பிடித்திருப்பதாக கூறுகிறார். யாருக்குத்தான் பிடிக்காது! இது குறித்து அவர் பேசுகையில், "ஆனால் அதே நேரத்தில் அந்த இளமையின் ராகசியம் என்ன என்று எல்லோரும் கேட்பதுதான் என்னால் எதிர்கொள்ள முடியாத கேள்வியாக உள்ளது. ஏனெனில், நான் அதற்கென தனிப்பட்ட முறையில் ஒன்றுமே செய்வதில்லை. ஆனால் என்னுடைய சுய பரிசோதனையின்படி, தூக்கம் ஒரு முக்கிய காரணம். என்னை ஒரு நல்ல ஷேப்பில் இருக்கச்செய்வது தூக்கம்தான். பிறகு, என் மன அழுத்தத்தை, வேலை டென்ஷனை குறைக்க அவ்வபோது வோட்கா காக்டெய்ல் குடிக்கிறேன். அதன்மூலம் என் பிஸியான வேலை பளுவில் இருந்து ஒரு உடனடி மாற்றம் என் தனிப்பட்ட வாழ்வுக்கு கிடைக்கிறது. அதனை தாண்டி ஒவ்வொருவரும் அவரவருக்கு பிடித்ததை அவர்களுக்கு தெரிந்த வழியில் செய்தாலே போதும். வாழ்க்கை நன்றாகவே இருக்கும். இளமை தோற்றமே என்பதெல்லாம் இப்போது ஓல்ட் ஃபேஷன் ஆகிவிட்டது. உங்களுக்கு எப்படி வாழ தோன்றுகிறதோ அப்படியே வாழுங்கள்." என்று கூறினார்.