பெண்களுக்கு கன்னம், மேல் உதடு, தாடை பகுதிகளில் தேவையற்ற முடி வளர்ச்சி இருக்கிறது. இது போன்ற முடி வளர்ச்சி அனைத்து பெண்களுக்கும் ஏற்படுவதில்லை. இது குறிப்பாக உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் வருகிறது. ஆண்களுக்கு இருக்கும் தாடி, மீசை போன்ற அமைப்புடன் பெண்களுக்கு முடி வளர்ச்சி இருக்கும். பெண்களில் உடலில்  சுரக்கும் ஆண் ஹார்மோன்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.




இதற்கு பெண்கள், த்ரெட்டிங், வேக்சிங் அல்லது ட்வீசிங் போன்றவற்றை செய்து தற்காலிகமாக முடியை நீக்கி வருகின்றனர். ஆனால், இதற்கு நிறைந்த தீர்வாக ஹார்மோன் பிரச்சனையை சரி செய்ய வேண்டும்.


பாலிசிஸ்டிக் ஓவரைன் சிண்ட்ரோம் - இது ஹார்மோன் குறைபாடு  பிரச்சனையாகும். இதனால் பெண்களின்  மாத விடாய் சுழற்சியில் பிரச்சனை ஏற்படும். இதில் ஆண்களின் ஹார்மோன் ஆன ஆண்ட்ரோஜென் அளவுக்கு அதிகமாக சுரப்பதால் இது போன்ற தேவையற்ற முடி வளர்ச்சி பிரச்சனை  வரும்.  இது போன்ற முடி வளர்ச்சி, மாத விடாய் சுழற்சியில் மாறுபாடு இருந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்.


 


நாளமில்லா சுரப்பி  கோளாறுகள் - நாளமில்லா சுரப்பியில் ஏற்படும் மாறுபாடு காரணமாக, மனஅழுத்த ஹார்மோன் ஆன, கார்டிசோல் அதிகரிப்பால் இந்த பிரச்சனை வருகிறது. இதனால் பெண்களுக்கு உடல்  பருமன்,வயிற்றை சுற்றி கொழுப்பு சேருதல், மற்றும் நீரிழுவு நோய் போன்ற பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள்  அதிகம்.


மரபணு காரணம் - மரபணு காரணமாக அம்மா, அக்கா, அத்தை  ஆகியோர்க்கு இந்த பிரச்சனை இருந்தால், இது போன்ற முடி வளர்ச்சி பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.




முதுமை - மாதவிடாய் சுழற்சி நின்ற பிறகு, உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக முடி வளரும். உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாக  செயல்படும். அதனால் கூட இது போன்ற முடி வளர்ச்சி பிரச்சனை முதுமையில் வரும்.


கர்ப்ப காலம் - பெண்கள் உடலில் பல படிநிலைகளில் ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்கிறது. பருவம் அடைதல்,  கர்ப்ப காலம், உடல் பருமன், மாத விடாய் சுழற்சி  நிற்கும் ஆகிய நேரங்களில்  ஹார்மோன் மாற்றங்கள் நடக்கும். அதனால் இது போன்ற தேவையற்ற முடி வளர்ச்சி வரலாம்.




அட்ரீனல் சுரப்பி கட்டிகள் - அட்ரீனல் ஹார்மோன் குறைபாடுகளால், உடலில் ஆண்ட்ரொஜென் ஹார்மோன் சுரப்பது அதிகரிக்கும். இதன்  காரணமாக கருப்பையில் கட்டிகள் வளரும். மேலும் தேவையற்ற முடி வளர்ச்சி பிரச்சனையும் இருக்கும்.


முடி வளர்ச்சி இருக்கிறது என்பதை உறுதி செய்தவுடன், மருத்துவரை அணுகி எந்த காரணத்தால் இப்படி முடி வளர்கிறது என்பதை கண்டறிந்து அதற்கான சிகிச்சை எடுத்து கொள்வது மட்டுமே நிரந்தர தீர்வாக அமையும்.