அழுத்தம் மிகுந்த பொருளாதார தேடல் நிறைந்த,இன்றைய காலகட்ட வாழ்க்கை சூழலில்,தூக்கமின்மை என்பது, அனைவரும் சந்திக்கும் ஒரு பிரச்சினையாக இருக்கிறது.
ஒவ்வொருவருக்கும் பொருளாதார தேவைகள்,வியாபார தேவைகள் மற்றும் பண தேவைகள் என்று, சதா சர்வ காலமும்,பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கிறது. இவற்றையெல்லாம் சரி செய்வதற்கு, உடல் அளவிலும்,மனதளவிலும் கடுமையான உழைப்பை செலுத்த வேண்டியதாக இருக்கிறது. மேலும் குழந்தைகள் எதிர்காலம்,மாதாந்திர பட்ஜெட்டில் வரும் பண தேவைகளுக்காக,கடன் பெறுவது என ஒவ்வொருவரும், சொல்ல முடியாத உடல் மற்றும் மன உளைச்சலில் சிக்கி தவிக்கிறோம்.இதன் பொருட்டு,தூக்கமின்மை என்பது,பரவலான ஒரு நோய் போலவே,எங்கும் வியாபித்து நிற்கிறது.இவற்றை சரி செய்வதற்கு சிறப்பான யோகாசனங்களை காணலாம்.
சேது பந்தாசனா:
சேது என்றால் பாலம் என்று பொருள்படும்.இதன்படி இந்த ஆசனத்தை செய்வதன் மூலம், எண்ணிலடங்கா நன்மைகள் கிடைக்கின்றன.குறிப்பாக, தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் மற்றும் பெண்களில், மாதவிடாய் தொந்தரவு உள்ளவர்கள், இந்த ஆசனத்தை அவசியம் செய்ய வேண்டும்.
சேது பந்தாசனா செய்யும் முறை:
எந்த ஆசனம் செய்வதற்கு முன்னரும், உங்கள் வயிறானது,உணவுகள் இல்லாமலும் மற்றும் கழிவுகள் இல்லாமலும் காலியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். குளித்து உடல் சுத்தமாக இருப்பதையும் உறுதி செய்து கொள்ளவும்.
யோகா செய்வதற்கான விரிப்பில் நன்றாக,முதுகு கீழே படும்படி, படுத்துக் கொள்ளவும்.எந்த ஒரு ஆசனம் செய்வதற்கு முன்னரும், மூச்சை சுத்தி செய்து கொள்ளவும். இதன்படி இடது மூக்கின் வழியாக, பொறுமையாக,நுரையீரல் நிரம்பும் அளவிற்கு மூச்சை இழுத்து,வலது புறம் வெளிவிடவும்.இதே போலவே வலது புறம் மூச்சை இழுத்து,இடது புறம் வெளிவிடவும்.இவ்வாறு மூன்று எண்ணிக்கை செய்து முடித்த பின், உங்கள் கால்களை,தொடையை அழுத்தும்படி உங்கள் உடலை நோக்கியவாறு மடக்கவும், பின்னர் இரண்டு கைகளைக் கொண்டு கால்களை பற்றிக் கொள்ளவும். பின்னர் வயிற்றின் அடிப்பகுதி மற்றும் பிரிஷ்டம் ஆகியவற்றை மேல் நோக்கி உயர்த்தவும்.அவ்வாறு உயர்த்தும்போது,உயர்த்தும் வேகத்திற்கு ஏற்றார் போல,மெதுவாக மூச்சை உள்ளே இழுக்கவும்.பின்னர் அங்கு ஆறு நொடிகள் அப்படியே இருக்கவும்.பின்னர் பொறுமையாக உடம்பின் அடிப்பகுதியை பூமியை நோக்கி கொண்டு வரவும்.அவ்வாறு கொண்டு வரும் சமயத்தில், ஏற்கனவே இழுத்து வைத்திருக்கும் மூச்சை மெதுவாக வெளிவிடவும். பின்னர் ஆறு நொடிகள் அப்படியே இருக்கவும். இதைப் போல குறைந்தபட்சம் ஆறு முறை ஒரு நாளைக்கு செய்யவும்.நாள்பட நாள் பட எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளலாம்.
உடல் சோர்வைப் போக்குகிறது. தூக்கமின்மையைப் சரி செய்கிறது.
மன அழுத்தத்தைப் போக்கி மனதை அமைதிப்படுத்துகிறது.வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.அசீரணத்தைப் போக்குகிறது.இடுப்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது.இருதய நலனைப் பாதுகாக்கிறது.அதிக இரத்த அழுத்தத்தை சரி செய்ய உதவுகிறது.
நுரையீரலைப் பலப்படுத்துகிறது. ஆஸ்துமா உள்ளிட்ட மூச்சுக் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.தலைவலியைப் போக்க உதவுகிறது.மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் உபாதைகளை போக்க உதவுகிறது.கால்களில் சோர்வைப் போக்குகிறது.தைராய்டு சுரப்பின் செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது.முதுகுத் தசைகளைப் பலப்படுத்துகிறது. முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்கிறது.கழுத்து மற்றும் மார்பு பகுதிகளை விரிவடைய செய்து தளர்த்துகிறது.
பாலாசனம்:
குழந்தை விளையாடி முடித்த களைப்பில்,மிகவும் இலகுவாக, பூமியில் முகம் மார்பு வயிறு அனைத்தும் படும்படி படுத்து கிடக்கும். இது குழந்தைக்கு மிகச் சிறப்பான ஓய்வையும் தூக்கத்தையும் மற்றும் இலகுத்தன்மையையும் தரும் இத்தகைய குழந்தை தூங்கும் நிலையில் இந்த ஆசனத்தை நாம் செய்வதினால் இது பாலாசனம் என்று பெயர் பெறுகிறது. மன அழுத்தம் நீங்கி சிறப்பான தூக்கத்தை இந்த ஆசனம் தருகிறது. மேலும் முதுகுத்தண்டு பிரச்சனை உள்ளவர்களுக்கும்,தொடை, அடிவயிறு மற்றும் பெண்களின் மாதாந்திர பிரச்சினை உள்ளவர்களுக்கும்.இந்த ஆசனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பாலாசனம் செய்யும் முறை:
ஒரு விரிப்பில் மண்டியிட்டு அமர்ந்து கொண்டு,முதலில் மூச்சு சுத்தி செய்து கொள்ள வேண்டும். பின்னர் கைகள் இரண்டையும் இருபுறமிருந்து மேல் நோக்கி உயர்த்தியவாறு,இரு பக்க காதுகளை தொடும்படி கொண்டு வரவும்.இவ்வாறு கைகளை உயர்த்தும்போது,மூச்சை அதே வேகத்திற்கு ஏற்றார் போல் மெதுவாக உள்ளே இழுக்கவும்.இந்த நேரத்தில் முதுகுத்தண்டு ஆனது,நேராக இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும். பின்னர் முன்புறம் நோக்கி முதுகை கைகளோடு சேர்த்து வளைந்து, உங்கள் நெத்தி தரையை தொடும்படி செய்யவும்.இவ்வாறு செய்யும் தருணத்தில்,மூச்சை மெதுவாக வெளியே விடவும். பின்னர் இதே நிலையில் ஆறு முறைகள் மூச்சை உள்ளிழுத்து வெளியிடவும்.இந்த நேரத்தில் இயலும் என்றால், கைகளை முன்னோக்கி நீட்டியபடி வைத்துக் கொள்ளவும். இல்லையெனில்,உங்கள் அருகாமையில்,தொடைகளை ஒட்டி வைத்துக் கொள்ளவும்.ஆறு முறைகள் மூச்சை உள்ளே இழுத்து வெளியே விட்ட பிறகு திரும்பவும் பழைய நிலைக்கு வரவும். இந்த ஆசனத்தை செய்வதன் மூலம் முதுகுத்தண்டு மற்றும் நுரையீரல் வலுப்பெறுவதோடு அடிவயிற்று கொழுப்பு மற்றும் செரிமான பிரச்சனை மேல் வயிற்றுப்போக்கு உடல் மற்றும் மனம் சார்ந்த நிறைய பிரச்சனைகள் சரியாகின்றன.
மேற் சொன்ன இரண்டு ஆசனங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய சமன் செய்யும் ஆசனங்கள் ஆகும் யோகாசனத்தை பொறுத்தவரை உங்கள் உடம்பை முன்புறம் நோக்கி வளைத்தால் சமன் செய்வதற்கு பின்புறம் நோக்கி வளைக்க வேண்டும். உங்கள் முதுகு ஒருபுறம் மேல் நோக்கி வளைந்தது என்றால் அதை சமன் செய்வதற்கு பாலாசனத்தில் முன்புறம் வளைகிறது. இந்த இரண்டு ஆசனங்களை அவசியம் செய்து, ஆழ்ந்த உறக்கத்தை பெறுங்கள். மேலும் இந்த ஆசனத்தை பெண்கள் தொடர்ந்து செய்து வர,அடிவயிற்றில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு கரைவதோடு,மாதவிடாய் பிரச்சனைகள் முழுவதுமாக குணமடைகிறது.மேலும் செரிமான பிரச்சனைகளுக்கு, நிரந்தர தீர்வு கிடைக்கிறது.
யோகாசனங்களை நிபுணர்களின் துணையின்றி செய்யக்கூடாது. நிபுணர்களிடம் கற்ற பிறகே செய்ய வேண்டும்