நம் வீட்டின் அஞ்சரைப் பெட்டியில் தவிர்க்க முடியாத ஒரு பொருள் சிவப்பு மிளகாய். மிளகாய் மிக முக்கியமான ஒரு மசாலா வகை.  மிளகாயில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் செரிமானத்துக்கு உகந்தது. நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. எடைக்குறைப்பு சிகிச்சை, மலச்சிக்கல், உமிழ்நீர் சுரப்பு, ரத்தத்தின் சர்க்கரை அளவைச் சீராக வைப்பது போன்றவைகளுக்கு மிளகாய் உதவுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.  ஆனால், அளவுக்கு அதிகமாக மிளகாயை உணவில் சேர்க்கு கொள்ளும்போது அஜீரணக் கோளாறு, பெப்டிக் அல்சர், வயிற்றுப் புற்றுநோய் மற்றும் உள் அழற்சி (Internal Inflammation) போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும்.


பாரம்பரிய முறைப்படி,  சிவப்பு மிளகாயை வெயிலில் காயவைத்து, பொடி செய்து, சேமித்து வைத்து அடிக்கடி பயன்படுத்திய காலம் உண்டு. ஆனால் இப்போது  சந்தையில் கிடைக்கும் பாக்கெட் மிளகாய் பொடியைத்தான் பயன்படுத்துகிறோம்.  அப்படி நாம் பயன்படுத்தும் மிளகாய் தூளில்’ சிவப்பு செங்கல் தூள், மணல் அல்லது டால்க் பவுடர் கலப்படம் செய்யப்படுவது உங்களுக்குத் தெரிந்ததுதான்.


இந்த தகவல் நமக்கு அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருந்தாலும், அதை எப்படி தெரிந்து கொள்வது என்பதை பார்க்கலாம்.  இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் (FSSAI) சிவப்பு மிளகாய் தூளில் உள்ள கலப்படத்தை சோதிக்க பரிசோதனை முறைகளை வழங்கியுள்ளது. இதை பின்பற்றி நீங்கள் பயன்படுத்தும் மிளகாய் பொடி கலப்படம் செய்யப்பட்டதா என்று தெரிந்து கொள்ளுங்கள்.  


நீங்கள் செய்ய வேண்டியது:


ஒரு டம்பளரில் சிறிதளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள் சேர்க்கவும். இதிலிருந்து ஒரு சிறியளவு மிளகாய் பொடியை  எடுத்து உங்கள் கையில் தேய்க்கவும். அப்படி செய்யும்போது, நீங்கள்  கரடுமுரடானதாக உணர்ந்தால், மிளகாய் தூளில் கலப்படம் செய்யப்படுகிறது என்ற அர்த்தம். அதில் சோப்பு போலவோ அல்லது மிருதுவாக இருக்கிறதென்றால், அதில் சோப்ஸ்டோன் சேர்க்கப்பட்டிருக்கிறது. உங்களுக்குச் சந்தேகம் ஏற்படும்போது, இந்த சோதனையை முயற்சி செய்து பாருங்கள்.


ஆரோக்கியமான உணவை சமைப்பதில் கவனம் எடுத்துக் கொள்வது போலவே, அதை தயாரிக்க பயன்படும் பொருட்களும் தரமானதாக இருப்பதாக பார்த்துக் கொள்ளுங்கள்.  


மிளகாய் பொடியில் கலப்படம் இருக்கிறதா என்பதை கணடறிவது எப்படி என்பது குறித்த வீடியோவைப் பார்க்க.