பண்டிகையோ, நல்ல செய்தியோ உடனே நம்ம வீடுகள்ல, கேசரி, பாயசம் செஞ்சு அதைக் கொண்டாடுவோம். கொஞ்சம் வித்தியாசமாவும், சுவாரஸ்யமாவும் ஏதாவது ஸ்வீட் செய்யலாம்னு நினைச்சிருக்கீங்களா? சீக்கிரமா, ஈஸியா செஞ்சு முடிக்க இதோ ஒரு ரெசிப்பி இருக்கு. தம் அடை அல்லது தம்மடைன்னு சொல்லப்படுற இந்த ரவா ஸ்வீட் காயல்பட்டினத்துல ரொம்ப ஃபேமஸ்..
தேவையான பொருட்கள் என்னென்ன?
ரவை - 2 கப்
அடர்த்தியான தேங்காய்ப்பால் - 3 கப் (கெட்டி பால்)
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 2 கப்
பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை
நெய் - கொஞ்சம்
ரோஸ் எசென்ஸ் - ஒரு துளி
ஏலக்காய்த் தூள் - கால் டீஸ்பூன்
செய்முறை என்ன தெரியுமா?
ரவையில் தேங்காய்ப்பாலை ஊற்றி இட்லி மாவு எந்தப் பதத்தில் அரைப்போமோ, அந்தப் பதத்தில் கலந்துகொள்ளுங்கள். கலந்த இந்த மாவை, ஐந்து மணி நேரத்துக்கு அப்படியே ஊறவிடுங்கள்.
பிறகு இந்த கலவையுடன் ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா, ஏலக்காய்த் தூள், எசென்ஸ், சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்து சர்க்கரை நன்றாக கரையும்வரை கரண்டியால் கலக்குவிட்டுக்கோங்க. குழியுடன் இருக்கும் மோல்டு கிண்ணத்தில் சிறிதளவு நெய் தடவி, அதன் மீது கொஞ்சம் மைதா மாவைத் தூவி விங்கள். அதன் மீது சிறிதளவு ரவை கலவையை ஊற்றி, மைக்ரோவேவ் அவனில் 200 டிகிரி வெப்ப நிலையில் 20 நிமிடங்கள் வைத்து எடுங்கள். அவ்ளோதான் தம்மடை என்னும் தம் அடை ஸ்வீட்டு ரெடி.
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சிதான் காயல்பட்டினம். இந்த ஊருல தம்மடை மட்டுமல்ல. இன்னும் நிறைய உணவுகள் இங்க ரொம்பவே பிரசித்தமானது. இஸ்லாமியர்கள் அதிகமா வசிக்கும் இந்த ஊருல, கோழியாப்பம், உழுவா கஞ்சி, சுதுரியா, இனிப்பு கொழுக்கட்டை, மரவள்ளிகிழங்கு புட்டு, மாசி கொழுக்கட்டை, ஒத்த பணியம், சங்கு சேமியா, பனங்கிழங்கு பசிறாறு, சக்கரவள்ளிகிழங்கு கொழுக்கட்டை, பரு அரிசிமாவு புட்டு, ஒட்டு மாவு அல்லது சீனி மாவு அல்லது பரு அரிசிமாவு, கறி அடை இப்படி எக்கச்சக்கமான பாரம்பரிய உணவுகள் ரொம்ப பிரசித்தமானது. காயல்பட்டினம் போனா, இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க.