மகரந்த ஒவ்வாமை என்பது , பூக்களில் இருந்து வெளியாகும் கண்ணுக்குத் தெரியாத தூசு போன்ற துகள்கள்  காற்றிலே பரவி ஒருவருடைய சுவாசத்தின் வழியாக உடலினுள் நுழைந்து ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. ஆகவே இதனால் பலரும் பாதிக்கப்படுகிறார்கள்.


அலர்ஜி அல்லது ஒவ்வாமை என்பது எந்த நேரத்திலும்  பாதிக்கக் கூடிய ஒன்றாகும். ஒவ்வாமை ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன. பூக்களின் மகரந்த தூள்கள் மற்றும் காற்றில் பறக்கும் பூஞ்சை வகைகள். காற்றில் கலந்திருக்கும் தூசு படிமங்கள், உணவுகள், செல்லப்பிராணிகள், வீட்டில் ஒட்டடை என பல்வேறு வகையான ஒவ்வாமைக்கான காரணங்கள் இருக்கின்றன.


ஒவ்வொரு மலர்களிலும் ஏராளமான மகரந்தங்கள் உள்ளன.  செடி கொடிகளில் உள்ள மலர்கள், மரங்களில் பூக்கும் மலர்கள் என எல்லாவற்றிலும் மகரந்தங்கள் இருக்கின்றன. இந்த மகரந்தங்கள் காற்றில் வேகமாக பரவுகின்றன. இது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.


தும்மல்,
தோல் அரிப்பு, இருமல், மூக்கில் நீர் வடிதல், கண் எரிச்சல் போன்றவைதான் ஒவ்வாமையின் அறிகுறிகளாக கருதப்படுகிறது. இவை வெளிப்புற அறிகுறிகளாக  இருந்தாலும் ,உடலின் உள்ளே ஒருவகை எரிச்சல் ,அரிப்பு தன்மை, ஆஸ்துமா ,நெஞ்சு இறுக்கும் போன்றவை காணப்படும்.


காற்றில் இந்த மகரந்தம் பரவுவதாலோ அல்லது ஒரு பூக்கள் நிறைந்த மரத்தின் கீழ் தொடர்ந்து நிற்பதாலோ ஆஸ்துமா உள்ள நபருக்கு அந்த நோய் மேலும் அதிகரிக்கிறது.


தானிய வகைகள் ,சிறிய விதைகள், செடிகள், மரங்கள், புல் மற்றும் களைகளில் இருந்து காற்றினால் சிதறடிக்கப்பட்டு வரும் மகரந்தம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. இதில் அதிகளவாக ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் .மகரந்தம் சுவாசத்தில் கலப்பதால் அவை நுரையீரல் வரை சென்று பாதிப்பினை ஏற்படுத்துகிறது.
 
பெரிய அளவிலான பூந்தோட்டங்கள் ,காலநிலையினால் ஏற்படும் கடுமையான மாற்றங்கள் அதிகளவான மகரந்த செறிவு போன்றன ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. 


ஆஸ்துமா நோய் உள்ளவர்களுக்கு இந்த காற்றில் கலந்துள்ள மகரந்தம் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது .இந்த மகரந்த பரவலை நாம் எளிதாக தடுத்து விடவும் முடியாது .ஆகவே ஒவ்வாமையை தடுக்க பாதுகாப்பாக இருக்கவேண்டும் மற்றும் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளவேண்டும். மகரந்த ஒவ்வாமையினால் ஏற்படும் சில நோய் அறிகுறிகளை பார்க்கலாம்:


1.மூக்கு ஒழுகுதல் அல்லது நாசி அரிப்பு போன்றன ஏற்படுகின்றன.


2. சைனஸ், தலை வலி மற்றும் ஒருவகை அழுத்தம் இது முகவலிக்கு வழிவகுக்கிறது.


3. கண்கள் சிவத்தல் மற்றும் கண்களில் அரிப்பு ,நீர் வடிந்துகொண்டே இருப்பது போன்ற வெண் படல அழற்சி  ஏற்படுகிறது


4. தொண்டை வலி மற்றும் இருமல்


5.கண்களுக்குக் கீழே வீக்கம் மற்றும் நீல நிற தோற்றம்


6. ஆஸ்துமா நோய் அதிகரிப்பு.



மகரந்த ஒவ்வாமைக்கான சில உடனடி தடுப்பு நடவடிக்கைகள்..


1 .நாசிப் பாதையை சுத்தம் செய்ய வேண்டும், மூக்கிலிருந்து மகரந்தத்தை அகற்ற உப்பு நீர் கொண்டு சுத்தம் செய்யலாம்


2. நாசி ஸ்ப்ரேக்களைப் பயன்படுத்துவதன் மூலம் மூக்கு,நாசி அடைப்பு, அரிப்பு போன்றவற்றை சரி செய்யலாம்.


 3. வெளியில் சென்று வந்ததும்  துணிகளை நன்கு சுத்தம் செய்து அணிந்து கொள்ள வேண்டும்.


 4. துணிகளை வீட்டிற்கு வெளியே  தொங்கவிடாமல் உலர்த்தியில் போட்டு உலர வைக்கவும்.


5. வீட்டை சுத்தம் செய்ய வேக்கம் கிளீனர் , போன்ற பாதுகாப்பான கருவிகள் மூலம் சுத்தம் செய்யலாம்.


6. மகரந்தத் தூளைப் போக்க ஒவ்வொரு இரவும் தூங்குவதற்கு முன் குளிக்கவும்.


7. தலையணை உறைகள் மற்றும் போர்வைகள் உட்பட  படுக்கையை வாரத்திற்கு ஒரு முறை சூடான மற்றும் சோப்பு நீரில் கழுவ வேண்டும்.


8 .முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உங்களுக்கு மகரந்தம் ஒவ்வாமை இருந்தால், வறண்ட அல்லது காற்று வீசும் நாட்களில் வீட்டுக்குள்ளேயே இருக்கலாம்.


9. வெளியே சென்று வரும் போது மகரந்த தூள்கள் படியாதவாறு மாஸ்க் அணிய வேண்டும்


10. மலர்களின் மகரந்த பருவத்தில் வீடுகளின்  கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கவும் 


நம் உடலுக்கு சேராத சில பொருட்கள் உள் நுழையும்போது நம் உடல் காட்டும் இயற்கையான எதிர்ப்புதான் ஒவ்வாமை என்கிறோம். நாம் எடுத்துக்கொள்ளும் உணவு,  மாசடைந்த சுற்றுப்புற சூழல், தட்பவெப்பம் போன்ற மேலும் பல காரணங்கள்  ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமாகிறது