சிலருக்கு மாதவிடாய் நேரத்தில் தலைவலிக்கிறதா? அது மென்ஸ்ட்ரூவல் மைக்ரைன் நோயாக இருக்கலாம். இது குறித்து மருத்துவர் சுதிர்குமார் என்ற நரம்பியல் நோய் மருத்துவர் சில கருத்துகளை பகிர்ந்துள்ளார். ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் இவர் நரம்பியல் நோய் சிகிச்சை நிபுணராக இருக்கிறார்.


மாதவிடாய் நேரத்து சிரமங்கள்:


32 வயதான டினா என்ற பெண் தனது மாதவிடாய் நேர வேதனை குறித்து பகிர்ந்திருந்தார். அவருடைய ட்விட்டர் பக்கத்தில் டினா, பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் வேளையில் அடிவயிற்று வலி ஏற்படும், மூட் ஸ்விங்ஸ் ஏற்படும் ஆனால் எனக்கு 3 முதல் 4 கடுமையான தலைவலி ஏற்படும். எனக்கு குழந்தை பிறப்பதற்கு முன்புவரை இதுபோன்ற உபாதை ஏதும் ஏற்பட்டதில்லை. ஆனால் அதன் பின்னர் எனக்கு மாதவிடாயின் போது தலைவலி ஏற்படத் தொடங்கியது.


தலைவலி வர ஆரம்பித்த பின்னர் மாதவிடாய் சுழற்சியும் தவற ஆரம்பித்தது. சரியாக 28 நாட்களில் வந்த மாதவிடாய் தள்ளித்தள்ளிப் போக ஆரம்பித்தது. அனலாக் ஸ்கேலில் மிகுந்த வலியைக் குறிக்கும் எண் 10 என்றால் எனது வலியின் அளவு 7 ஆக இருந்தது. இது எனது தனிப்பட்ட வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பணியிடத்திலும் சமாளிக்க முடியாமல் வலியால் சிரமப்பட்டதால் ஒருக்கட்டத்தில் வேலையை ராஜினாமா செய்தேன்.


அதன் பின்னர் நான் பார்க்காத கைனக்காலஜிஸ்ட் இல்லை. பொது மருத்துவரையும் நாடினேன். ஆனால் மாதவிடாயின் போது ஏற்பட்ட தலைவலி தீரவில்லை. அப்போது தான் என்னை ஒரு மருத்துவர் நரம்பியல் நோய் சிகிச்சை நிபுணரை சந்திக்கச் சொன்னார். அவர் பல்வேறு பரிசோதனைகளையும் செய்து எனக்கு உள்ளது pure menstrual migraine (PMM) அதாவது மென்ஸ்ட்ரூவல் மைக்ரைன் என்று கண்டறிந்தார்.


மென்ஸ்ட்ரூவல் மைக்ரைன் ஏன் ஏற்படுகிறது?


நிபுணர்களின் கூற்றின்படி, மென்ஸ்ட்ரூவல் மைக்ரைன் என்பது ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் ஏற்படுகிறது. இதை ஹார்மோன் ஹெட் ஏக் என்றும் கூறுகின்றனர். சிலருக்கு இது பீரியட்ஸுக்கு முன்னர் ஏற்படும். இன்னும் சிலருக்கு இது பீரியட்ஸின் 2ஆம் நாள் தொடங்கி சில நாட்கள் நீடிக்கும். க்ளீவ்லேண்ட் கிளினிக் மருத்துவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிய்யில் மாதவிடாயின்போது ஈஸ்ட்ரோஜென் அளவு குறைவதால் இந்த தலைவலி ஏற்படுவதாகக் கண்டறிந்தனர்.






மென்ஸ்ட்ரூவல் மைக்ரைன் எப்படித் தடுக்கலாம்?
 
மருத்துவர் சுதிர் குமார், மாதவிடாய் நாட்களான அந்த ஐந்து நாட்களில் மருத்துவ சிகிச்சையினால் இந்த தலைவலியிலிருந்து விடுதலை பெறலாம் என்கிறார். மெக்னீஸியம் அதிகமுள்ள உணவை உட்கொள்ளலாம். உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொள்ளலாம். அதன் பின்னர் நெர்வ் ஸ்டிமுலேஷன் இன்னும் பிற சிகிச்சைகளை செய்து இதிலிருந்து குணம் பெறலாம் எனக் கூறுகிறார்.


டினாவுக்கு எல்லா பரிசோதனைகளும் செய்துவிட்டு நாங்கள் சிகிச்சையை ஆரம்பித்தோம். முதல் மாதம் முடிந்ததும் அவரது தலைவலி குறைய ஆரம்பித்தது. 5 நாட்கள் வரை தலைவலியில் தவித்த அவர் ஒரே ஒரு நாள் மட்டுமே தலைவலிக்கு ஆளானார். அதேபோல் தலைவலியின் தீவிரமும் குறைந்தது. இப்போது டினா மீண்டும் பணியில் சேர்ந்து சுதந்திரமாக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.