இருதய பிரச்னைகளுடன் வீடியோ கேம்கள் விளையாடும் குழந்தைகளுக்கு மாரடைப்பு வரலாம் எனும் அதிர்ச்சித் தகவலை முன்வைக்கின்றனர் மருத்துவ உலகத்தினர்.


சமீபத்திய ஆய்வு ஒன்றின் படி சிகிச்சை அளிக்கப்படாத இருதய பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு வீடியோ கேம்கள் மாரடைப்பை ஏற்படுத்தக் கூடும் எனத் தெரிய வந்துள்ளது.


சில குழந்தைகள் பிறக்கும்போதே கார்டியாக் அரித்மியா எனப்படும் இருதயத் தசை செயலிழப்புடன் பிறக்கிறார்கள். ஸ்கேன் செய்து பார்த்தால் மட்டுமே இதனைக் கண்டறிய முடியும். 


இங்கிலாந்தில் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்கள் இத்தகைய பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களால் அன்றாட வாழ்க்கையைத் தொடர முடியும்.


ஆனால் மற்றொரு புறம் எந்த நேரத்திலும் அவர்களுக்கு சுய நினைவு இழப்பு, மாரடைப்பு மற்றும் மரணம் உள்பட கடுமையான விளைவுகள் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.


இதுவரை தடகள வீரர்களின் அகால மரணங்கள் கண்டறியப்படாத இருதய நிலைகளுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இப்போது முதன்முறையாக கணினி விளையாட்டுகளும் இத்தகைய மரணங்களுக்கு  காரணங்களாக இருக்கலாம் எனும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.


மேலும், ஆன்லைன் போர் கேம்கள் விளையாடும் குழந்தைகள் சுயநினைவை இழந்த 22 நிகழ்வுகளையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். விஞ்ஞானிகளின் கூற்றுப்படி அதீத ஆவல், அட்ரினலின் மற்றும் உணர்ச்சி முதலீடு ஆகியவற்றின் மூலம் இந்த பாதிப்பு வரலாம் எனக் கூறப்படுகிறது. 


ஆஸ்திரேலியாவின், சிட்னியில் உள்ள குழந்தைகளுக்கான இருதய மையத்தில் பல்வேறு இருதய ஆராய்ச்சிகள் குறித்த ஆய்வுகளின் தகவல்கள் முன்னதாக ஆராயப்பட்டன இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் முன்னதாக ஹார்ட் ரிதம் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.


 தீவிரமான களம் கொண்ட கேம்களை விளையாடுவதால் ஏற்படும் அட்ரினலின் அதிகரிப்பு, ஏற்கெனவே இருதயப் பிரச்னைகள் உள்ள குழந்தைகளுக்கு தொந்தரவுகளை மேலும் அதிகரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் வீடியோ கேம் விளையாட்டுக்களின் வெற்றி அல்லது தோல்விக்குப் பிறகு, அதிகம் உணர்ச்சிவயப்படுபவர்கள் வெகு எளிதில் பாதிக்கப்படுகின்றனர் என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 


இந்நிலையில், வீடியோ கேம்களை விளையாடும் ​​குழந்தைகளின் இருதய ஆரோக்கியத்தை பெற்றோர் உறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர் விஞ்ஞானிகள்.