திருச்சி ஸ்ரீரங்கம் கோபுரத்திற்கு முன்பாக இருக்கும் ஸ்ரீ ராகவேந்திரா மடம் அருகிலேயே உள்ளது இந்த ராகவேந்திரா அன்னபூரணி மெஸ். இதை உணவகம் என்று சொல்வதைவிட வீடு என்றே சொல்லலாம். ஏனெனில் இங்கு உரிமையாளர்கள் தனது வீட்டிலேயே உணவகத்தை நடத்தி வருகின்றனர். மேலும் இதனை உணவகம் என்று சொல்லாமல் கோபாலன் வீடு என்று அனைவரும் கூறுகின்றனர் . இந்த உணவகத்தின் உரிமையாளர் கோபாலன் தனது வீட்டிலேயே வீட்டுமுறை உணவை வழங்க வேண்டும் என்பதற்காகவே, ஆரோக்கியமான முறையில் நல்ல உபசரிப்புடன் இந்த உணவகத்தைத் தொடங்கினார். 1993ஆம் ஆண்டு கோபால ஐயங்கார் என்பவர் தனது மனைவியுடன் சேர்ந்து இந்த உணவகத்தை தொடங்கியுள்ளார். அப்போது அவர் தனது வீட்டிலேயே இந்த மெஸ்ஸை நடத்தி வந்தார்.
மேலும் இந்த மெஸ்ஸில் தயாரிக்கும் உணவுகள் அனைத்துமே பல்வேறு பிரபலங்களுக்கும் மிகவும் பிடித்ததாக உள்ளது. குறிப்பாக நிழல்கள் ரவி, இயக்குனர் திருமுருகன் மற்றும் பல்வேறு அரசியல்வாதிகள் பலருக்கும் இந்த உணவகம் மிகவும் பிடித்தமானதாகும். மேலும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இங்கு தயாரிக்கும் முறுக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறுகின்றனர்.
இந்த உணவகத்தின் உரிமையாளர் கோபாலன் கடந்த வருடம் இறந்து விட்டதையடுத்து, அவரின் மகன் மற்றும் மகள் ஆகியோர் சேர்ந்து கூட்டுக் குடும்பமாக இந்த உணவகத்தை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த உணவகத்தில் காலையிலிருந்தே முழு சாப்பாடு கிடைக்கிறது. குறிப்பாக சாப்பாடு, குழம்பு, ரசம், கூட்டு , பொரியல் வகைகள் அனைத்துமே காலையிலிருந்து இவர்கள் தயாரிக்க ஆரம்பித்து விடுகின்றனர். இதற்கு காரணம் என்னவென்று பார்த்தோமேயானால்,வேலைக்கு செல்பவர்கள் மற்றும் கல்லூரி செல்பவர்கள் ஆகியோருக்காக மதிய உணவு பேக்கிங் செய்து கொடுப்பதற்காக, இதுபோன்று காலையிலேயே தயாரிப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
அதுமட்டுமல்லாமல்,காலையில் கிடைக்கும் காய்கறி வகைகள் பத்து மணிக்கு மேல் கிடைக்காது. ஏனெனில் இவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை புதிதாக கூட்டு, பொரியல் போன்றவற்றை தயார் செய்கின்றனர். இதுவே இவர்களது மிகப்பெரிய சிறப்பு ஆகும். மேலும் இங்கு வருபவர்களையும் அவர்கள் அன்புடன் உபசரிக்கின்றனர். இந்த உணவகத்தில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் தோசை வகைகள் மிகவும் ஸ்பெஷலாக இருக்கும். குறிப்பாக, இங்கு மிளகு நெய் தோசை, தக்காளி மிளகு தோசை, கருவேப்பிலை இஞ்சி சீரகம் கலந்த தோசை என்று வித்தியாசமான முறையில் இவர்கள் தயாரிக்கின்றனர்.
மேலும் வீட்டிலேயே அரைத்த மாவு மற்றும் வீட்டிலேயே தயார் செய்யப்பட்ட மசாலாக்களை மட்டுமே இவர்கள் பயன்படுத்துகின்றனர். அதைப்போன்று சாதம் வகைகளும் சாம்பார் சாதம், வத்த குழம்பு சாதம் என்று பல்வேறு வகைகளில் கிடைக்கின்றன. மேலும், இவை அனைத்துமே அவர்கள் அந்த நேரத்தில் தயார் செய்து கொடுக்கின்றனர். இதன் காரணமாக இங்கு அனைத்துமே பிரஷ்ஷாக இருக்கின்றது. எனவே ஸ்ரீரங்கம் சென்று வருபவர்கள் கண்டிப்பாக இந்த மெஸ்க்கு சென்றால் அவர்களுக்கு ஒரு ஆரோக்கியமான உணவு மற்றும் பிரஷ்ஷான உணவு கிடைக்கும் என்பது உறுதி. மேலும், இந்த உபசரிப்புக்காகவே இங்கு கூட்டம் அலை மோதுகின்றது. இது போன்ற சிறப்பிற்காகவே இந்த உணவகத்திற்கு செல்லலாம்.