ஆரோக்கியமற்ற உணவு முறை, சுற்றுச்சூழல் மாசு  போன்ற பல்வேறு காரணங்களால் சைனஸ் பாதிப்பு ஏற்படும். இருமல், மூக்கடைப்பு, அடிக்கடி ஏற்படும் தும்மல்,தலைபாரம், மூக்கில் நீர் வடிதல், காய்ச்சல், உடல்சோர்வு, மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவைகள் சைனஸின் அறிகுறிகள்.  இளம்வயதினர் முதல் சைனஸ் பிரச்சினை இருக்கும் பெரும்பாலானோர்க்கு, எப்போது குணமாகும் என்ற ஏக்கம் இருக்கும்.   நம் மூக்கை சுற்றியுள்ள காற்று அறைகளை சைனஸ் என்கிறோம்.  இந்தப் பாதையில் சளி தொல்லை ஏற்படும்போது, அடைப்பு காரணமாக மூச்சுத் திணறல், காற்றறைகளில் வலியும், கிருமித் தொற்றும் ஏற்படுகிறது. சைனஸ் தீவிரமானால் மூளைக்காய்ச்சல், மூளை அயற்சி ஏற்பட வாய்ப்புள்ளது.  நாள்பட்ட சைனஸ் தொல்லைக்கு சித்த மருத்துவத்தில் நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.


சைனஸ் உடலில் ஏற்படும்  குளிர்ச்சியால் ஏற்படுகிறது என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது.  ஆனால் இது  உண்மையில்லை என்கிறார் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த சித்த மருத்துவர் யோக வித்யா.  சைனஸ் என்பது உடலின் வெப்பம் அதிகரிப்பதால் ஏற்படுவது.  குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால் மற்ற அனைவருக்கும் சைனஸ் பிரச்சினை வரும் என்பதிலும் உண்மையில்லை.  பெரும்பாலானோர் சிறு வயதிலிருந்தே விட்டமின் சி அதிகம் இருக்கும் எலுமிச்சை உள்ளிட்ட உணவுப் பொருட்களை குழந்தைகளுக்கு கொடுப்பது கிடையாது.  இதனால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்காமல் போகிறது.



சைனஸ் - விளக்கப்படம்


 


சைனஸ் பிரச்சினை ஏற்படுவதற்கு முக்கிய காரணம், மலச்சிக்கல்.  உடலில் இருந்து சரியாக மலம் வெளியாகாமல் இருந்தால், உடலின் வெப்பம் அதிகரிக்கும்.  சைனஸ் வராமல் தடுக்க சிறுநீர் , மலம் உடலிலிருந்து தாமதிக்காமல் சரியாக வெளியேற்றப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 


சித்த மருத்துவத்தில் கடுக்காய் சூரணம் இதற்குத் தீர்வாக சொல்லப்படுகிறது.  தினமும் இரவு கடுக்காய் சூரணத்தை வெந்நீரில் கரைத்து அருந்தி வந்தால் மலச்சிக்கல், மலக்கட்டு போன்ற பிரச்சினைகல் ஏற்படாது.


சைனஸிற்குத் தீர்வு:
• பெருஞ்சீரகப் பொடி, மிளகுத் தூள், பனங்கற்கண்டு சம அளவு எடுத்து அதில் ஒரு ஸ்பூன் அளவு தண்ணீரில் கலந்து பருகலாம்.


• ஆடாதொடை இலை, வேர் இரண்டையும் கைப் பிடியளவு எடுத்து நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து, அதை நன்கு கொதிக்க வைத்து ஒரு பங்கு நீராக வற்றியதும், தேன் கலந்து அருந்தலாம்.


• தூதுவளை இலையைப் பொடி செய்து தேன் கலந்து உண்ணலாம்.


• கற்பூர வள்ளி இலையை சாறு எடுத்து  கற்கண்டு சேர்த்து 15 மிலி அளவு அருந்தலாம்.