வேட்டைத்துணைவன் - 22


சிப்பிப்பாறை / கன்னி நாய்கள் பகுதி  14  


சிப்பிப்பாறை/ கன்னி நாய்களில் வரும் நிறம் “செம்மறை” என்ற அடிப்படையில் நாம் இதனை கணக்கில் எடுத்துக் கொண்டாலும், இவை தனித்துப் பிரிந்து ஒரு இனமாக உருவெடுக்கும் அத்துணை கூறுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது என்பதே என் எண்ணம்.அது எப்படி என்பதை அறிந்து கொள்வதற்கு முன்னதாக “alaknoori” என்ற நாயினத்தைப் பற்றிய அறிமுகத்தைப் பாப்போம்.


கோலாப்பூர் மன்னரான H.H.சாகு மகாராஜா, பன்றி வேட்டைக்காக ஐரோப்பாவில் இருந்து சில grey hound நாய்களை இறக்குமதி செய்தார். நாம் இதற்கு முன்னரே பார்த்தது போல அவை அனைத்தும் நமது சீதோஷண நிலைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் திண்டாடின. எனவே மேற்கொண்டு நாய்களை கொண்டு வருவதில் பன முடக்கம் செய்யாமல் வேறு ஒரு உபாயம் கண்டறிந்தார்.


ஆம் அதே வழிதான். உள்ளாரில் உள்ள கேரவன் ஹவுண்ட் நாய்களுடன் grey hound நாய்களை கலந்தார்( நினைவில் கொள்க : இந்த கேரவன் நாய்களைத் தான் உள்ளூர் மக்கள் சிலர் கர்வானி என்று குறிப்பிடுகின்றனர். போலவே இந்த நாய்களுமே கூட மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் கொடை தான் அன்றி வேறில்லை ) அதை தொடர்ந்து நல்ல கள விளையாட்டுக்கு நாய்கள் கிடைத்தன மேலும் ஊக்கத்தோடு அந்தக் கலவையில் நாய்களைச் சேர்த்து கூடுதல் நாய்களை பெருக்கினார்.  



செம்மறை நாய்


இவை அதீத திறன் கொண்டவையாகவே இருந்தாலும் காலப்போக்கில் இவை கலப்பு என்ற காரணத்தால் பெரிய பிரதிநிதித்துவம் எதுவும் இல்லாமல் மேற்கொண்டு இந்நாய்களை உற்பத்தி பண்ண ஆட்கள் இல்லாமல் குறுகி அரிதாகி போனது. கிட்டத்தட்ட இங்கு செம்மறைக்கும் அதே நிலைதான். நாலு கால்களிலும் வெள்ளை விழுந்து வரும் வரும் பூதக் கால் செம்மறை, வட்ட வட்டமாக வெள்ளையும் செவலையும் கலந்து வரும் வட்ட செம்மறை. கருப்பும் வெள்ளையும் வரும் கருமறை எல்லாம் நல்ல  சுத்தமான / ஒழுக்கமான நாய்களுக்கு உண்டான பதிப்பீட்டில் செம்மறை நாய்கள் சேர்த்தி இல்லை. இந்த இடத்தில் சுத்தம் என்றும் ஒழுக்கம் என்றும் பயன்படுத்தப்படணும் வார்த்தைக்கான பொருள் “நல்ல பிறவியின் லச்சனம்” / “ pure breed standard” என்று வைத்துக்கொள்ளலாம்.


 எதோ ஒரு வகையில் செம்மறை நாய்கள் கலப்பை கடந்து வந்தது என்ற நினைப்பு பலர் மத்தியில் இருந்ததும் அதற்குக் காரணம்தான்.  ஒரு வகையில் உண்மையும் கூட,  அப்படி அது உண்மையானால் அந்த கலப்பு எத்தகையதாக இருக்கும். முந்த பகுதியில் வரும் கதை போல அல்லாமல் வேறு எந்த வகை நாய்களின் கலப்பு இதில் சாத்தியம்?


தென் மாவட்டங்களில் குறிப்பாக கரிசல் பூமியில் உள்ள  செவல்பட்டி,  அம்மையார்பட்டி, ஏழாயிரம் பண்ணை, சித்திரம்பட்டி, சாமித்தேவன்பட்டி, கரிசப்பட்டி,  நரியன்குளம்,  கோவில்பட்டி சிவகாசி வட்டார கிராமங்கள், ஜமீன் கோடாங்கிபட்டி, விளாத்திகுளம், தென்னம்பட்டி போன்ற தூத்துக்குடி வட்டார கிராமங்களில் மட்டும் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு வரையில் சொற்ப எண்ணிக்கையில் காணப்பட்ட செம்மறை நாய்களை மொத்தமாக தொகுத்துப் பார்க்கும் போது ஒன்றை நாம் புரிந்து கொள்ள முடியும்.


செம்மறை நாய்கள் அனைத்துமே ஆஜானுபாகுவானவை இல்லை என்ற போதும். பிற நிறங்களில் இருந்து எல்லா வகையிலும் பெரிய நாய்கள் பல செம்மறையில் தான் இருந்தது. உடல் சட்டம் – தலைக் கட்டு – கால் கணம் என எல்லா வகையிலும் இவற்றில் பெரியவை உண்டு. ஏன் திறனிலும் கூட இவை சளைத்தவை அல்ல. ஒப்பீடு அளவில் கோவக்குறியும் இவற்றில் அதிகம் உண்டு தான். first breed “ A” – கூர்முக நாய்கள் என்றால் அவற்றில் கலந்த second breed “B “ என்னவாக இருக்கும்.?


ஒரு வேலை அந்த “B” கொஞ்சம் பருவெட்டான நாட்டு நாய்கள் என்றால் கலப்பு விகிதம் 50 – 50 தான். அல்லது சில நேரங்களில் முக்கால் தரம் வாய்க்கும். உயரம் இயல்பு நாட்டு நாயின் உயரத்தில் இருந்து சற்று அதிகரிக்கலாம். இதை இருபிளட் அல்லது இருபிறவு என்று கூறுவார்.அதாவது போதுச் சொல்லால் குறிக்கவேண்டும் என்றாலும் cross breed.


 இப்போது எஞ்சி இருக்கும் செம்மறையில் 70 விழுக்காடு இப்படி தோற்றம் உடையவை தான்.  அப்படி வந்த அதே நாய்கள் உடன் ( இருபிறவு) மீண்டும் “Third breed c “ஆக ஒரு கூர் முக நாயை சேர்க்கும் போது நல்ல உடல் சட்டம் உயரத் தாக்கு உடைய நாய்கள் உண்டாவதுண்டு.


இதில் முதல் கலப்பில் பங்கு கொண்ட சுத்த நாட்டு நாய் செவலை என்னும் பட்சத்தில் அதுவே செம்மறையாக வந்திருக்கும். நினைவில் கொள்க ! செம்மறை வழியில் ஒற்றை நிறம் வந்தால் அது செவலையாக மட்டுமே இருக்கும். அதே போல அதிலும், துடக்கத்தில் வந்து இறங்கிய பல தரப்பட்ட கூர் முக நாய் இனங்களின் எதோ ஒரு வித்தின் நீட்சியாக தொடர்ந்த நாய்களும் இருக்கக் கூடும்.


காரணம்,  இதே நிறம் வட நாட்டு நாய்களிலும் உண்டு!  சொல்லப்போனால் சிலர் இதுவும் நமது நாய்கள் தானே என்று எண்ணிக்கொண்டு சில ரெட்டை நிற கேரவன் நாய்களைக் கொண்டு வந்து கலந்து விட்டு செம்மறை தான் இது என்று சொன்ன கதைகளும் உண்டு. இந்த இடத்தின் தெரிந்தே கலந்த ஆள்களை கலக்கும் ஆள்களை கலக்கப் போகும் ஆள்களை கணக்கில் கொள்ள தேவை இல்லை அது முற்றிலும் வேறு கதை.


இன்றைய சூழ்நிலையில் அப்படி பெரிய செம்மறைகள் மிகக்குறைவு தான் எதோ அரிதாக சில தென்படுகிறது அவ்வளவே. ஒரு வேலை எனக்கு செம்மறை வேண்டும் என்று பலர் கேட்டு. அத புகழ் பாடி நாலு பேர் youtube வீடியோ விட்டால் latest  கலப்புகள்  வெளியே நல்ல பிள்ளை போல வருமே ஒழிய பழைய செம்மறை வர சாத்தியங்கள் குறைவு தான்.