இந்தியப் பெண்களின் அடையாளங்களில் முக்கியமான ஒன்று புடவை. உலகம் முழுவதிலும் இருக்கும் பெண்களும் ஏன் ஆண்களுமே ரசித்துக் கொண்டாடும் உடைகளில் ஒன்று புடவை.


பற்பல வண்ணங்களில் வெவ்வேறு விதங்களில் இதை அணியலாம். பொதுவாக ஐந்தரை மீட்டர் முதல் 6 மீட்டர் வரை புடவைகள் நெய்யப்படுகின்றன. பட்டு, காட்டன், ஜார்ஜெட், பூனம், நெகமம், என புடவைகளில் பல வகைகளில் உண்டு.


நம் அம்மாக்களும் பாட்டிக்களும் வாரத்தில் 7 நாட்களும் ஆண்டுக்கு 12 மாதங்களும் ஏன் சொல்லப் போனால் 24 மணி நேரமும் புடவை அணிகின்றனர்.


எப்படி அணிகின்றனர்?


புடவை அணிவதற்கு முதலில் பருத்தியால் ஆன பாவாடை அணிய வேண்டும். இதை பருத்தியால் ஆன கயிற்றால் வயிற்றில் இறுக்கிக் கட்டி, சேலை அணிவது வழக்கம்.


இந்த நிலையில், இடுப்பில் ஒரே துணியை நீண்ட நேரம் இறுக்கமாக அணியும்போது, தோல் பகுதி உரிய ஆரம்பித்து, கருப்பாக மாறுகிறது. இதேபோல தொடர்ந்து நீண்ட காலத்துக்கு உடை அணியும்போது தோல் உரிதல் மீண்டும் மீண்டும் ஏற்பட்டு புற்றுநோய் வரத் தொடங்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். இதுகுறித்த தகவலை டெல்லி தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த கேன்சர் நிபுணரான டாக்டர் விவேக் குப்தா உறுதி செய்கிறார்.


பிஹார் மற்றும் ஜார்க்கண்ட்டில் புடவை கேன்சர்


புடவை கேன்சரைப் பொறுத்தவரை சுத்தம் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் இருக்கும் பகுதிகளில் இந்த புற்றுநோய் வருவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது. பிஹார் மற்றும் ஜார்க்கண்ட் பகுதிகளில் இத்தகைய கேன்சர் கேஸ்கள் பதிவாகி உள்ளன. இந்தியா முழுவதும் பெண்களுக்கு கண்டறியப்படும் கேன்சர் வகைகளில் 1 சதவீத அளவுக்கு புடவை கேன்சர் ஏற்படுகிறது. மருத்துவ மொழியில், இதை Squamous Cell Carcinoma (SCC) என்று அழைக்கின்றனர்.


மும்பை ஆர்என் கூப்பர் மருத்துவமனையில் இதுதொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு 68 வயது மூதாட்டிக்கு புடவை கேன்சர் இருப்பது கண்டறியப்பட்டது. அவர் 13 வயது முதல் புடவை கட்டி வருகிறார். 


காங்க்ரி கேன்சர்


அதேபோல, காங்க்ரி கேன்சர் காஷ்மீரில் பரவலாகக் காணப்படுகிறது. ஸ்கின் கேன்சரான இது, காஷ்மீரில் மட்டுமே ஏற்படுகிறது. அதீத பனிக் காலத்தில் அங்குள்ள மக்கள் மண் பானையில் நெருப்புடன் அமர்ந்து, சூடு பெற்று, குளிரைப் போக்கிக் கொள்வார்கள். தொடர்ந்து இவ்வாறு செய்வதால், அவர்களின் வயிறு மற்றும் தொடைப் பகுதியில் தொடர்ச்சியாக சூடு பட்டு இந்த வகை கேன்சர் உருவாவதாகக் கூறப்படுகிறது.




இறுக்கமான உடை அணிந்தாலே ஆபத்து


அதேபோல மருத்துவ நிபுணர்கள், இறுக்கமான உடை அணிந்தாலே ஆபத்துதான் என்று எச்சரிக்கின்றனர். குறிப்பாக ஜீன்ஸ், பேன்ட் ஆகியவற்றை நெடு நேரம் இறுக்கமாக அணிந்திருப்பது உடல் நலத்துக்குக் கேடானது என்றும் இதனால் ஆக்சிஜன் ஓட்டம் தடைப்பட்டு, வெப்பநிலை உயரும் என்றும் தெரிவிக்கின்றனர்.


இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால், ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதுடன் ஓவரியன் கேன்சரும் உருவாகலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனினும் இதற்கு உறுதிப்படுத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் எதுவும் இல்லை.