எந்தவொரு உறவாக இருந்தாலும், அது நீடிக்க இருவரிடையே பரஸ்பர உரையாடல் மிக அவசியம். உங்கள் இணையர் உங்கள் பக்கம் இருக்க விரும்பினால், உங்கள் மனதில் பட்டவற்றை நீங்கள் அவருடன் உரையாட வேண்டும். நீங்கள் பாராட்டப்படாமல் இருந்தாலோ, காதலிக்கப்படுவதை உணர முடியாமல் இருந்தாலோ, அதனை இணையரிடம் உணர்த்த வேண்டும். உங்கள் மனதில் தோன்றும் கஷ்டங்களை நீங்களே வைத்துக் கொண்டு துன்பப்படுவதை விட, இணையிடம் நேரடியாக உரையாடி, பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். 


உறவுகளில் உரையாடல்களின் முக்கியத்துவம் குறித்தும், பேசப்படாத எதிர்பார்ப்புகள் ஒரு உறவை எப்படி அழிவுக்குக் கொண்டு போகும் என்பதையும் சர்வதேச அளவில் பிரபலமான உளவியல் நிபுணர் மருத்துவர் நிகோல் லிபெரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பிறரிடம் நம் சிந்தனைகளை வெளிப்படுத்தாமல், பிறர் நம் மனதைப் புரிந்துகொள்ள வேண்டும் என நினைப்பது எவ்வளவு மோசமானது என்பதை அவர் அதில் பேசியுள்ளார். 


இதற்கு உதாரணமாக அவர் மோனிக் என்ற பெண்ணின் கதையைப் பற்றி பேசியுள்ளார். மோனிக் தன்னைப் பாதிக்கும் விவகாரங்கள் குறித்து பேசத் தெரியாதவர். மேலும், அவருக்கு இருக்கும் எதிர்பார்ப்புகள் குறித்து வெளிப்படுத்தாதவர். அவரது பெற்றோர் எப்போது கடினமான உரையாடல்களில் இருந்து விலகும் எண்ணம் கொண்டவர்களாக இருந்ததால், மோனிக் ரகசியமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். தற்போது குடும்பத்துடன் வசித்து வரும் மோனிக், தன்னுடைய கணவர் ஜேசனிடம் தன் மனதில் பட்டதை உரையாடாமல் இருப்பதால், அந்த உறவில் தன்னைச் சிறுமையாக உணர்கிறார். இந்த உதாரணத்தின் மூலமாக மருத்துவர் நிகோல் வெளிப்படுத்தப்படாத எதிர்பார்ப்புகள் நம்மை அதிகம் பாதிக்கக்கூடியவை எனக் கூறுகிறார். இதுகுறித்து அவர் கூறியவை:



1. உங்களை வெளிப்படுத்துவதற்கு உங்கள் செயல்கள் பெரிதும் பயன்படும் என்றாலும், எதையாவது எதிர்பார்த்து உங்கள் குடும்பத்தினருக்கு அனைத்தையும் செய்வது சிக்கல். அது உங்களை யாரும் விரும்பவில்லை என்ற எண்ணத்தை உங்களுக்கு அளிக்கும். 


2. எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடையாத போது,  நாம் அதிருப்தி அடைகிறோம். இது சண்டைகள் உருவாக காரணமாக அமைகிறது. 


3. இது உங்கள் இணையரை உங்களிடம் இருந்து தூரமாக விலக்கும். 


4. பேசாமல் இருப்பதால் உருவாகும் வெற்றிடம் சரியாவதற்குப் பல ஆண்டுகள் பிடிக்கலாம். 






வெளிப்படுத்தப்படாத எதிர்பார்ப்புகளைச் சரிசெய்வது எப்படி? 


இதற்கும் சில டிப்ஸ் கொடுத்துள்ளார் மருத்துவர் நிகோல்..


1. உங்கள் இணையிடம் பேசுங்கள். எவ்வளவு கடினமாக இருந்தாலும், உங்களுக்குத் தேவையானது என்ன என்பதையும், நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதையும் அவர்களிடம் சொல்லுங்கள்.


2. அதீத யோசனைகளில் இருந்து விடுபட்டு, உங்கள் இணையர் உங்களுக்காக செய்யும் பாசிட்டிவானவற்றின் மீது கவனம் செலுத்துங்கள்.


3. உங்கள் இணையரிடம் இருந்து உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நீங்கள் திட்டமிட்டு, அவரை அதில் பங்காற்றச் செய்யுங்கள். இது இருவருக்கும் மகிழ்ச்சியைத் தரலாம்.