Extramarital affair Issue: இல்லற வாழ்க்கைக்கு கேடு விளைவிக்கும் திருமணத்தை மீறிய உறவுகள் ஏற்படுவது ஏன் தெரியுமா?.


திருமண உறவும் - விவாகரத்தும்:


இரு மணங்கள் இணைந்து இரண்டு குடும்பங்களின் பிணைப்பிற்கு ஆதாரமாக அமைவது திருமணம் பந்தம். மேற்கத்திய நாடுகளை காட்டிலும் இந்தியாவில் திருமணம் எனும் சடங்கிற்கு அதிக மதிப்பு உள்ளது. மனித வாழ்வில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உள்ளது. ஆனால், சமீப காலங்களில் ஆண் - பெண் இடையேயான திருமண உறவு நீண்ட காலத்திற்கு நிலைப்பது என்பது குறைந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான விவாகரத்து வழக்குகள் நீதிமன்றங்களில் பதியப்படுகின்றன. சென்னையில் மட்டுமே 8 குடும்பநல நீதிமன்றங்கள் வழக்குகளை விசாரித்தபோதும், சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. இந்த விவாகரத்திற்கு புரிதல் இல்லாதது, ஒத்துப் போகாதது என்பன போன்ற பல்வேறு பிரச்னைகள் காரணமாக இருந்தாலும், திருமணத்தை மீறிய உறவு என்பது மிக முக்கிய காரணமாக உள்ளது.


திருமண உறவின் நோக்கம்:


திருமண உறவின் முக்கிய நோக்கமே ஆணும் பெண்ணும் ஒருவருக்கு ஒருவர் துணையாகவும், ஆதரவாகவும், பக்கபலமாகவும் இருந்து அன்பு நிறைந்த மகிழ்ச்சியான வாழ்க்கையை முன்னெடுப்பதே. ஆனால், இன்றைய மேம்பட்ட சமூகத்தில் இந்த நிலை இல்லை என்பதே, விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கைகள் காட்டுகின்றன. இணையரிடமிருந்து கிடைக்க வேண்டிய நமக்கான முக்கியத்துவம் குறையும் போது தான், அந்த முக்கியத்துவம் கொடுக்கும் வெளிநபரை தேடி பெரும்பாலானோர் செல்கின்றனர். இதுவே இல்லற வாழ்வின் பெரும் சிக்கலாக உருவெடுத்து, விவாகரத்து எனும் பெரும் பிரச்னையாக வெடிக்கிறது.


திருமணத்தை மீறிய உறவுக்கான காரணங்கள்:


பொதுவாக கூறப்படுவது போன்று உடல்ரீதியான தேவைகள் மட்டுமே திருமணத்தை மீறிய உறவுக்கு முக்கிய காரணமல்ல. இணையரின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுக்காதது, அவருக்கான நேரத்தை ஒதுக்காதது, மனம் விட்டு பேசாதது, பிரச்சினைகளை உரிய நேரத்தில் பேசி தீர்க்காதது,  அவரின் எதிர்பார்ப்புகளுக்கும், எதிர்காலத்திற்கும் முக்கியத்துவம் அளிக்காதது, தனிமையை உணரச் செய்வது, காயப்படுத்துவது போலவும், சிறுமைப்படுத்துவது போலவும் தொடர்ந்து பேசுவது, கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்காதது, வீட்டில் இருந்தாலும் செல்போன்கள் மற்றும் சமூக வலைதளங்களில் மூழ்கியிருப்பது போன்றவையும் முக்கிய காரணங்களாகும். மேலும் இணையரின் செயல்பாட்டில் எப்போதும் குறைகளை சொல்வது, இயலாமையை சுட்டிக் காட்டி பேசுவது, எந்த ஒரு விதத்திலும், சூழலிலும் பாதுகாப்பின்மையை உணரச் செய்வதும், திறமைகளை பாராட்டாததும், ஒரு குழந்தை பிறந்ததும் குடும்ப சூழலில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களை உரிய முறையில் அணுகாததும் கூட முக்கிய காரணங்களாகும்.  இது போன்று தனக்கான நேரமும், முக்கியத்துவமும் கிடைக்காத வேலைகளில் தான், இல்லற வாழ்வில் இருப்பவர்கள் அதையும் மீறி சென்று வெளிநபர்களுடனான பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். 


கணவன், மனைவி செய்ய வேண்டியவை என்ன?


ஓடி ஓடி உழைத்து பணம் சம்பாதித்து இணையரின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதால் மட்டுமே இல்லற வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட்டு விடாது. இணையரின் எண்ணங்களுக்கான முக்கியத்துவமும், அவர்களுக்கான நேரமும் ஒதுக்குவதும் அவசியமாகும்.



  • வீட்டில் இருக்கும்போது செல்போன் மற்றும் சமூக வலைதளங்களில் மூழ்கி இருக்காமல், இணையரிடம் மனம் விட்டு பேசுங்கள்.

  • மனஸ்தாபம் ஏற்பட்டால் அதனை வளர்ப்பதை விடுத்து உடனடியாக பேசி தீர்க்க பாருங்கள்

  • ஏதேனும் சண்டை ஏற்பட்டால் காலம் தாழ்த்தாமல் அன்று இரவுக்குள்ளே அதற்கான சுமூகமான முடிவை எட்டி, மறுநாளை மகிழ்ச்சியானதாக தொடங்குங்கள்

  • இணையரின் சின்ன, சின்ன ஆசைகளுக்கு முக்கியத்தும் கொடுங்கள்

  • இணையரின் எதிர்காலம் மற்றும் பணி தொடர்பான முயற்சிகளுக்கு முடிந்தவரை பக்கபலமாக இருங்கள்

  • குறைகளை தொடர்ந்து சுட்டிக்காட்டுவதை தவிர்த்து, அவர் தன்னை மெருகேற்றிக் கொள்ள உதவுங்கள்

  • இணையரின் திறமைகளை மனமகிழ்ந்து பாராட்டுங்கள்

  • ஆண்/பெண் பேதமின்றி அனைவருமே பாராட்டுக்கு ஏங்குபவர்கள் தான். எனவே யார் எந்த விஷயத்தில் சிறப்பாக செயல்பட்டாலும் பாராட்டுவது உறவு வலுவடைய சாதகமாக அமையும்

  • இணையரின் எதிர்பார்ப்புகளை புரிந்து செயல்படுவதும் உறவுகளுக்கு நல்லது

  • பணம் இருந்தாலே வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என்ற பொய்யான பிம்பத்தை நம்பாமல், குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள்

  • எந்தவொரு சூழலிலும் உங்களின் இணையரை தனிமையை உணரச் செய்வது திருமண உறவிற்கு எந்தவகையிலும் நல்லதல்ல

  • ஏதேனும் முக்கிய முடிவுகள் எடுக்கும்போது இணையரின் கருத்துகளையும், பரிந்துரைகளையும் கேட்பதும் நல்லது 

  • தன்னுடன் இருக்கும் நேரங்களில் இணையர் மிகவும் பாதுகாப்பாக உணர்வதை உறுதி செய்யுங்கள்

  • குழந்தை பிறப்பினால் பெண்ணின் உடலில் எற்படும் மாற்றங்களை புரிந்து கொண்டு, அவரை புரிந்து கணவர் நடந்துகொள்வதும் அவசியமாகும்


மொத்தத்தில் இணையருக்கான நேரத்தையும், உரிய முக்கியத்துத்தையும் கொடுத்துவிட்டாலே, திருமண வாழ்வில் ஏற்படும் பல முக்கிய இடர்பாடுகளை மிக எளிதாக கடந்து விடலாம் என்பதே உண்மையாகும்.