கண்களின் ஆரோக்கியம் ரொம்பவே முக்கியம். மிகக் குறைந்த அளவிலான தூக்கம், கண்களுக்கு குறைந்த அளவு ஓய்வு கொடுப்பது ஆகியவை க்ளகோமா (glaucoma) நோய்க்கான அறிகுறிகள் ஆகும். 


இது தொடர்பாக பிரிட்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள ஆய்வு கட்டுரையில் க்ளகோமா நோய் குறித்தான ஆபத்துகள் பற்றி குறிப்பிட்டுள்ளது. 


நீண்ட நாட்களாக புகைப்பழக்கம் உள்ள ஆண்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஆகியோருக்கு க்ளகோமா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


மேலும், இந்த ஆராய்ச்சியில் ஒருவருக்கு தூக்கம் எவ்வளவு முக்கியம் என்பது குறித்து பேசப்பட்டுள்ளது. தேவையான அளவை விட, குறைந்த நேரம் தூங்குபவர்கள், இரவு நேரத்தில் தூங்காதவர்கள் ஆகியோருக்கு க்ளகோமா நோய் எளிதில் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், பார்வைத் திறன் குறைபாடு உள்ளவர்களில் பெரும்பாலானோர் க்ளகோமா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2040 ஆம் ஆண்டிற்குள் உலக அளவில் 112 மில்லியன் மக்கள் க்ளகோமா நோயினால் பாதிக்கப்பட கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த ஆய்வுக்காக பல்வேறு மனிதர்களின் தூக்க நேரங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில் குறைவான தூங்குபவர்களுக்கு க்ளகோமா நோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு குறைந்தது 7 மணி நேரம் முதல் 9 மணி நேரம் வரையிலான தூக்கம் தேவையானதாகும். 


இன்சோமேனியா (Insomnia) -வால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு க்ளகோமா நோயால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 


மன அழுத்தம், மனச் சோர்வு உள்ளிட்டவை தூக்கத்திற்கு எதிரிகள்.


க்ளகோமா என்றால் என்ன?


க்ளகோமா என்பது கண்ணின் நரம்பை பாதிக்கக் கூடிய ஒரு நோயாகும். இதனால் பார்வையிழப்பு ஏற்படும். இதன் பாதிப்புகளை தொடக்கத்தில் கண்டறிவது மிகவும் கடினம்.


க்ளகோமா என்பது கண்ணின் முன் பகுதியில் உள்ள அறையில் (Anterior Chamber) சுரக்கும் நீரின் அழுத்தம்  (Intra Ocular Pressure)  சராசரி நிலையில் இருந்து அதிகரிப்பதாகும்.


கண்ணின் உள்நீர் அழுத்தம், பார்வை நரம்பினால் எந்த அளவு தாங்க முடியுமோ அதனைவிட அதிகமாகும் பட்சத்தில் ஏற்படும் பாதிப்பு க்ளகோமா பாதிப்பு ஆகும். ஆரம்ப கட்ட நிலையிலேயே இதைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் குணப்படுத்த முடியும். இல்லையென்றால், பார்வை இழப்பை சந்திக்க நேரிடும்.




மேலும் வாசிக்க..


Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!