உச்சி முதல் வேர் வரை' அனைத்து பாகங்களும் பலன் தரக்கூடியது என்பதால்தான், பனை மரத்தை 'பூலோகத்தின் கற்பத்தரு' என்கிறார்கள்.



 தமிழகத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் பரவலாகவும் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் பனை மரங்கள் உள்ளன. ஒரு பனையில் இருந்து 70 வகையான பொருட்களும், 700 வகையான பயனும் கிடைக்கிறது என்கிறது ஆய்வு.



தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், உடன்குடி, சாத்தான்குளம், ஏரல், அந்தோணியார் புரம், கோரம்பள்ளம், முடிவைதானேந்தல், தங்கம்மாள்புரம், சாயர்புரம், குளத்தூர், விளாத்திக்குளம் உள்பட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பனைத்தொழில் தான் பிரதானமாக செய்யப்படுகிறது. “ஒவ்வொரு ஆண்டிலும் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரைதான் பனை சீசன்காலம்". ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை கிடைக்கும் பனை பழங்களை சேகரித்து நிழலான பகுதியில் குவித்து வைத்து, அக்டோபர், நவம்பர் மாதங்களில் பனை விதை நட்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பனங்கிழங்கும் அறுவடை செய்கின்றனர்.





நன்கு காய்ந்த பனங்கொட்டையை விதைத்தால் மூன்று மாதங்களில் பனங்கன்று உற்பத்தியாகும். நட்ட ஒன்பது முதல் பத்து ஆண்டுகளில் பருவத்திற்கு வந்து விடும். நீர்ப்பாசன வசதி இருந்தால் விரைவில் வளர்ந்து விடும். 120 ஆண்டுகள் வரை பயன் தரும். பத்து ஆண்டுகளுக்கு பிறகு தான் ஆண், பெண் மரங்களை அடையாளம் காண முடியும். ஆண் பனையை 'அழகுப்பனை' என்றும், பெண் பனையை 'பருவப்பனை' என்றும் குறிப்பிடுவர். 'பாளை' மட்டும் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் பனை ஆண் பனை. இதில் நுங்கு காய்க்காது. பெண் பனையில் மட்டும் தான் நுங்கு காய்க்கும். பெண் பனையில் ஆண் பனையை விட கூடுதலாக பதநீர் கிடைக்கும்.





ஒரு மரத்தில் ஒரு ஆண்டுக்கு நான்கு புது ஓலைகள் வளரும். நான்கு பழைய ஓலைகள் கீழே விழும். ஆறு முதல் 12 பாளைகள் தள்ளும். 100 முதல் 120 பனம் பழங்கள் காய்க்கும். சராசரியாக ஒரு மரத்தில் இருந்து ஆண்டுக்கு பனை சீசனில் 150 லிட்டர் பதநீர் கிடைக்கும். 



நுங்கு 8 முதல் 10 குலைகள் இருக்கும். ஒரு குலையில் சராசரியாக 20 பனங்காய்கள் இருக்கும். நுங்கு வெட்டாவிடில் பனம் பழமாக பழுத்து கீழே விழும். நான்கு மாதத்தில் பனங் கிழங்குகள் கிடைக்கும். ஒரு பனை மரத்தில் இருந்து ஆண்டுக்கு 5,000 முதல் 6,500 ரூபாய் வரை வருமானம் உண்டு. ஏப்ரல் முதல் அக்டோபர் வரை ஆறு மாதங்கள் பனை சீசன் காலங்கள். மார்ச் கடைசியில் பாளை விழும்.கண்ணுக்கு தென்பட்ட அந்த மாதத்தில் மரத்தில் ஏறி பாளையை இறுக்கி விட வேண்டும். அப்பொழுது தான் பதநீர் கிடைக்கும்.

 

"சாலை ஓரங்கள், கண்மாய்க்கரை ஓரங்களில் அதிகளவில் பனை மரங்களை நட்டு மண்ணரிப்பை தடுக்க வேண்டும். இப்படி ஆண்டு முழுவதும் பலன்களை தர வல்ல பனைமரங்கள் தான் தமிழ்நாட்டின் அடையாள சின்னம்".

 

 


பனை தொழிலும் பனை மரங்களையும் மீட்டெடுக்கும் வகையில் தமிழக அரசு வேளாண் நிதிநிலை அறிக்கையில், பனை மரம் வெட்ட தடை விதித்ததோடு மட்டுமல்லாமல் ஆட்சியரின் அனுமதி அவசியம் என தெரிவித்து உள்ளது வரவேற்கக்கூடியது என்கின்றனர் பனை தொழிலாளர்கள். 




தனி பதநீர் வேறு, கள் வேறு எனக்கூறும் தமிழ்நாடு பனை தொழிலாளர் சங்க பொது செயலாளர் ராயப்பன், தனி பதநீர் என்பது சுண்ணாம்பு தடவாத மண் குவளையில் இறக்கப்படுவது என்கிறார், தனி பதநீர் காலையில் இறக்கினால் 12 மணிக்குள் புளித்து கெட்டு போய் விடும் அதை தூரத்தான் ஊத்த வேண்டும் என கூறும் இவர் தனி பதநீருடன் சுண்ணாம்பு பதநீரை கலந்தால் தான் அது கள்ளாக மாறும் என்கிறார், தனி பதநீரை குடித்தால் குழந்தை பிறப்பு இலகுவாகும் மருத்துவமனையை நாட வேண்டியதில்லை என்கிறார். அதே நேரத்தில் பனை சொசைட்டி மூலம் லைசென்ஸ் கொடுத்து தனிப்பதநீரை இறக்க அனுமதிக்க வேண்டும், தமிழகத்தில் 4 கோடி பனை உள்ளது, இதில் குறிப்பாக இராமநாதபுரம் பகுதியில் பனை மரம் செங்கல் சூளையில் எரியூட்டப்படுவதற்காக  வெட்டப்படுவதாக கூறும் அவர்,  அதனை கண்காணிக்க வேண்டும் என்கிறார். பனை வெல்ல சொசைட்டியை மேம்படுத்த வேண்டும் என்கிறார். பனை மரத்தில் தனி பதனீர் இறக்க அனுமதிக்க வேண்டும் என்கிறார், இதன்மூலம் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்,அரசின் அறிவிப்பை வரவேற்கும் ராயப்பன், அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம் என்கிறார் பனை மரத்தில் ஏறுவதற்கு இயந்திரம் தேவை என கூறும் இவர், தற்போது உள்ள இயந்திரம் சரியானதல்ல என கூறும் இவர், கருப்பட்டி உற்பத்தி செய்ய தயாரில்லை செய்தாலும் வெள்ளை சீனியை கலந்து விடக்கூடும் என அச்சம் தெரிவிக்கின்றார்.