வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீரை தினமும் பருகிவந்தால் ஏராளமாக நன்மைகள் கிடைப்பதாக இயற்கை மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
நாம் சிறுவயதில் கேட்டிருப்போம் வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கு நன்றாக வரும் என்று. இதன் காரணமாகவே நம் அம்மாக்கள் வெண்டைக்காய் பொறியல் மற்றும் வெண்டைக்காய் குழம்பு வைத்துத் தருவார்கள். ஆனால் வெண்டைக்காய் வழவழவென்று இருப்பதால் நம்மில் பலர் அதனைச்சாப்பிடமாட்டோம். இதுவரை வெண்டைக்காயை ஒதுக்கி வைப்பவர்களாக நீங்கள் இருந்தால் இனி அப்படி செய்யாதீர்கள். ஏனென்றால் வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீரில் கூட ஏராளமான நன்மைகள் உள்ளது என்கின்றனர் இயற்கை மருத்துவர்கள். எனவே இந்நேரத்தில் வெண்டைக்காயின் முக்கியத்துவம் மற்றும் அவற்றின் நன்மைகள் குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.
ஊற வைத்த வெண்டைக்காய் தண்ணீரில் உள்ள நன்மைகள்:
நாம் இரவு தூங்கச்செல்வதற்கு முன்னர், ஒரு டம்ளர் தண்ணீரில் வெண்டைக்காயைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப்போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின்னர் மறுநாள் காலை எழுந்ததும் ஊறை வைத்த தண்ணீரில் பருகினால் ஏராளமான நன்மைகளை நாம் பெறுகிறோம்.
குறிப்பாக ஊற வைத்த வெண்டைக்காய் தண்ணீரை சர்க்கரை நோயாளிகள் தினமும் பருகும் போது ரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வைத்திருக்க உதவியாக உள்ளது. இதோடு வெண்டையில் உள்ள நீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைந்த இந்தத்திரவத்தை அருந்தினால் உடல் குளுமை பெறும். மேலும் எலும்புகள் வலிமைப்பெற்று ஆஸ்டியோபோரோசிஸ் வராமல் தடுக்கப்படுகிறது. எனவே எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க நினைப்பவர்கள் தினமும் இந்த வெண்டைக்காய் ஊறிய தண்ணீரை அருந்துவது நன்மை பயக்கும்.
வெண்டைக்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது. எனவே வெண்டைக்காய் ஊற வைத்த நீரைப்பருகும் போது நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமைப்பெற்று எந்த நோய் தாக்காமல் இருக்கும். குறிப்பாக வெண்டைக்காய் சூப்பை அருந்தினால் சளி மற்றும் இருமலைக் குணமாக்கும். மேலும் சுவாசம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் வெண்டைக்காய் ஊறிய நீர் அருந்துவதால் ஆஸ்துமா கோளாறு சரியாகும் என்று கூறப்படுகிறது.
மேலும் வெண்டைக்காயைப் பால் சேர்த்து வேக வைத்தும் குடிக்கலாம்.
ஒருவேளை நீங்கள் பிஞ்சு வெண்டைக்காயாக வைத்திருந்தால், அதனை வேகவைத்து எடுத்த நீருடன் சர்க்கரைச் சேர்த்து பருகினால் இருமல், நீர்க்கடுப்பு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகள் சரியாகும். மேலும் வெண்டைக்காயைப் பச்சையாக மென்று சாப்பிட்டால் பற்கள் தூய்மை பெறுவதுடன் ஈறுகளில் ரத்த ஓட்டம் அதிமாகி, பல் ஈறு தொடர்பான நோய்கள் சரியாகும்.
உங்களிடம் முற்றிய வெண்டைக்காயாக இருந்தால் அதில் மூன்றினை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு தக்காளி, 3 பூண்டுப்பல், இரு சின்ன வெங்காயம், 5 மிளகு, கால் டீஸ்பூன் சீரகம் சேர்த்து நீர் விட்டுக்கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் பாதி அளவிற்கு வற்றியதும் கீழே இறக்கி வைத்துக்கொண்டு அதனுடன் உப்பு சேர்த்துக்குடித்தால் சளித்தொல்லைகளிலிருந்து நிவாரணம் பெற முடியும்.
வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் கண்பார்வை மேம்படும்.
வெண்டைக்காயில் ஆக்சலேட் அதிகமுள்ளது. இது சிறுநீரகம், பித்தப்பைக் கற்களை வளரச் செய்துவிடும். எனவே வெண்டைக்காயை உணவில் அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் கல் பிரச்சனையுள்ளவர்கள் வெண்டைக்காயைக் குறைவாகச் சாப்பிட வேண்டும்.
மேலும் வெண்டையில் பெக்டின் மற்றும் கோந்துப்பொருள் கரையும் நார்ச்சத்து நிறைந்தது என்பதால், ரத்தத்தில் கொழுப்பு மற்றும் பித்த நீர் அதிகரிக்காமல் பாதுகாக்கிறது. இதோடு கொலஸ்ட்ராலைக்குறைத்து மாரடைப்பு வராமலும் தடுக்கிறது. பெருக்குடலின் உள்பகுதியில் படிந்து பெருங்குடல் சிறப்பாகச் செயல்பட உதவியாக உள்ளது. உணவு செரிமானத்திற்குப்பிறகு கரையா நார்ச்சத்தாக மாறுவதால் குடலைப்பாதுகாப்பதுடன் மலக்குடலில் வரும் புற்றுநோயைத் தடுக்கவும் உதவியாக உள்ளது.